

புதுடெல்லி: கடந்த நவம்பரில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பிய புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த படங்களை பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. விண்வெளி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்தின் மூலம் புயல்களை சிறப்பாகக் கணிக்கவும், கடலோரப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முடியும் என தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் நான்கு செயற்கைக்கோள் படங்களை பகிர்ந்து பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார். “அண்மையில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த ஆச்சரியமளிக்கும் படங்களை நீங்கள் பார்த்தீர்களா? குஜராத்தின் சில அழகான படங்களை பகிர்கிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 26-ம் தேதி அன்று ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஓஎஸ்-06 செயற்கைக்கோள் உட்பட சில செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இஓஎஸ்-06 என்பது ஓசன்சாட் வகை செயற்கைக்கோளில் 6-வது தலைமுறையைச் சேர்ந்ததாகும். இந்த செயற்கைக்கோள் 1,117 கிலோ எடை கொண்டது. இது கடல் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கும்.