Last Updated : 23 Dec, 2016 10:26 AM

 

Published : 23 Dec 2016 10:26 AM
Last Updated : 23 Dec 2016 10:26 AM

2017-ல் வாட்ஸ் ஆப்...?

தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கின்றன‌. சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர் ரகப் பிரிவில் பிளாக்பெர்ரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐ.ஓ.எஸ்., ஆகியவை மட்டுமே என்றாகியிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் வாட்ஸ் ஆப் சேவையில் நிகழவிருக்கும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் ஆப் வசதியைத் தொடர்ந்து பெற வேண்டும் என்றால், உங்கள் போனை மாற்றிக்கொள்ளுங்கள் எனச் சொல்லும் அளவுக்கு வாட்ஸ் ஆப் செல்வாக்கு மிக்கதாக மாறியிருப்பதும் இந்த மாற்றங்களின் முக்கிய அம்சம்.

பழைய மாடல்களுக்கு ‘குட்பை’

பழைய போன் மாதிரிகள் மற்றும் பழைய இயங்குதளங்களைக் கொண்ட போன்களில் எல்லாம் இந்தச் சேவை 2016-ம் ஆண்டுக்குப் பிறகு செயல்படாது எனும் தகவலை நீங்கள் அறிந்திருக்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ் ஆப் தனது வலைப்பதிவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு நவம்பர் மாதம் வெளியான‌ ஒரு அறிவிப்பு இதை உறுதி செய்தது.

இதன்படி நோக்கியா, பிளாக்பெர்ரி, விண்டோஸ், ஆண்ட்ராய்டு ஆகியவற்றின் பழைய மாடல்களில் வாட்ஸ் ஆப் சேவை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள‌து. ஐ.ஒ.எஸ். இயங்குதளத்தின் பழைய வடிவங்களுக்கும் இது பொருந்தும். எனினும் இந்த முதல் கட்டப் பட்டியலிலிருந்து பிளாக்பெர்ரி மற்றும் நோக்கியா சிம்பயான் போன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீட்டிப்பும்கூட 2017 ஜுன் மாதம் வரைதான். அதன் பிறகு வாட்ஸ் ஆப் செயல்படக்கூடிய புதிய போன் அல்லது இயங்குதளத்திற்கு மாறியாக வேண்டும்.

ஆண்ட்ராய்டு 2.2, ஐ.ஓ.எஸ். 6 மற்றும் விண்டோஸ் போன் 7 உள்ளிட்ட பழைய ரகங்களில் இந்த ஆண்டுக்குப் பிறகு வாட்ஸ் ஆப் சேவையைப் பயன்படுத்த இயலாது. வாட்ஸ் ஆப் விஷயத்தில் இப்படிக் காலாவதியாகும் பழைய போன் மாதிரிகளை வைத்திருப்பவர்கள் தங்கள் செல்போன்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஒரு செயலிக்காக போனை மாற்ற வேண்டும் என்பது கொஞ்சம் விநோதமானதுதான். வாட்ஸ் ஆப்பின் செல்வாக்கு அப்படி என்றாலும், இந்த மாற்றத்திற்கான காரணம் அதுவல்ல. வாட்ஸ் ஆப் தொடர்ச்சியாகப் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு சேவையாகத் தனது பயன்பாட்டுத்தன்மையைத் தக்க வைத்துக்கொள்ள வாட்ஸ் ஆப்பிற்கு இந்தப் புதுப்பித்தல் அவசியம்.இதன் பக்கவிளைவுதான், பழைய இயங்குதளங்கள் மீது கவனம் செலுத்த முடியாத நிலை.

புதிய வசதிகள் என்ன?

இதற்கு வாட்ஸ் ஆப்பைக் குற்றம் சொல்லவும் முடியாது. ஏனெனில் வாட்ஸ் ஆப் அறிமுகமான காலத்தில், பிளாக்பெர்ரியும் ஐபோனும் நோக்கியா சிம்பயான் போன்களுமே ஸ்மார்ட் போன் பரப்பில் பரவலாகப் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் அதன் பிறகு ஆண்ட்ராய்டு அலை வீசத் தொட‌ங்கி, ஐபோன் ஆதிக்கமும் வலுப்பெற்றது. இந்தப் போக்குகளுக்கு ஈடு கொடுத்து வளர்ச்சி அடைந்த வாட்ஸ் ஆப், முன்னணிச் செயலிகளில் ஒன்றாக இருப்பதோடு, வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது. மேலும் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்நிலையில், புதிய வசதிகளுக்கு ஈடு கொடுக்க ஏற்றதாக இல்லாத பழைய இயங்குதளங்களுக்கான ஆதரவை நிறுத்துக்கொள்வது தவிர வேறுவழியில்லை என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உறவு கொள்வதற்கான மேம்பட்ட வழிகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. எதற்கும் பழைய போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ் ஆப் சேவை செயல்படக்கூடிய போன்களின் பட்டியலைப் பார்த்துக்கொள்வது நல்லது. இந்த முழுப் பட்டியலை இந்த இணைப்பில் காணலாம்: >http://bit.ly/2hYKk1m

வரும் காலத்தில் வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படும் புதிய அம்சங்களில் சிலவற்றைப் பார்க்கலாம். செய்திகளைப் பகிர்ந்து கொண்ட பின் திரும்பப் பெறும் வசதி மற்றும் திருத்தம் செய்யும் வசதிகள் அறிமுகம் ஆக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடிட், டெலிட் செய்யலாம்

இப்போதைக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தியை அனுப்பிவிட்டு, பின்னர் அதை விலக்கிக்கொள்ள நினைத்தால் அதற்கான வழியில்லை. ஆனால், ஜிமெயிலில் இருப்பது போலவே அனுப்பியவுடன், அந்தச் செய்தியைத் திரும்பப் பெற விரும்பினால் அதைச் சாத்தியமாக்கும் வசதி அறிமுகமாக உள்ளது. இதன்படி செய்தியின் மீது கிளிக் செய்தால், அதைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புத் தோன்றும். அதை கிளிக் செய்து அந்தச் செய்தியை அழித்துவிடலாம்.

ஆனால் இதற்குக் கால வரையறை இருக்கிறது. தற்போது சோதனை வடிவில் ஒருசில போன் மாதிரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தச் சேவை முழு வீச்சில் அறிமுகமாகும்போதுதான் இதன் செயல்பாடு பற்றி தெளிவு கிடைக்கும். இப்போதுள்ள செய்திகளை டெலிட் செய்யும் வசதியில் இருந்து இது மாறுபட்டது. ஏனெனில் செய்திகளை டெலிட் செய்தாலும் அது அனுப்பியவர் போனில் இருந்துதான் மறையும். மற்றவர்கள் போனில் இருந்து நீக்க முடியாது. ஆனால் புதிய சேவையில் இது சாத்தியம்.

இதே போலவே செய்திகளைத் திருத்தும் வசதியும் அறிமுகமாக உள்ளது.

எல்லாம் சரி, அப்படியே வதந்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் ஒரு வசதி அறிமுகமானால் நன்றாக இருக்கும் அல்லவா..?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x