

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வயது வித்தியாசமின்றி அனைவருமே இணையதள அக்சஸ் கிடைக்கிறது. இந்த இணையதளத்தை மனிதனுக்கு வரம் அல்லது சாபம் எனவும் சொல்லலாம். அது அவர்கள் பயன்படுத்துவது பொறுத்தே அமையும். இந்த நிலையில், தீங்கிழைக்கும் இணையதள கன்டென்ட்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் ‘குழந்தைகள் ஆன்லைன் பாதுகாப்பு ஆய்வகம்’ என்ற முயற்சியை பிரான்ஸ் முன்னெடுத்துள்ளது.
இதைக் குறிப்பிட்டு சொல்லும் வகையில் பல்வேறு ட்வீட்களை அதிபர் மக்ரோன் பதிவிட்டுள்ளார். அதில்தான் தங்கள் முயற்சியில் குழந்தைகளை பாதுகாக்க ‘தி பேர்ட்’ இணையுமா? என மக்ரோன் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு தனது பதிலை கொடுத்துள்ளார் ட்விட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க்.
“சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் நம் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். எங்கள் பார்ட்னர்களுடன் இணைந்து குழந்தைகள் ஆன்லைன் பாதுகாப்பு ஆய்வகத்தை தொடங்கி உள்ளோம். இதில் பிரான்ஸ், எஸ்டோனியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும். அமேசான், டெய்லிமோஷன், மெட்டா, மைக்ரோசாப்ட், ஆல்பாபெட், ஸ்னாப், டிக்டாக் மற்றும் குவாண்ட் ஆகிய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. விருப்பமுள்ள அனைவரும் எங்களுடன் இதில் இணையலாம்” என மக்ரோன் சொல்லி இருந்தார்.
இதே ட்வீட் திரெட்டில்தான் மஸ்கை டேக் செய்து, “பறவை நம் குழந்தைகளை காக்குமா?” என கேட்டிருந்தார். அதற்கு மஸ்க் பிரெஞ்சு மொழியில் ரிப்ளை கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதில் ‘Absolument’ என அவர் தெரிவித்துள்ளார். இதன் அர்த்தம் ‘முழுவதுமாக’ என தெரிகிறது.
இதில் இணையும் பங்கேற்பாளர்கள் தங்களுக்குள் தகவல்களை பகிர்வதன் மூலம் புதிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை கொண்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பான இணைய அணுகுமுறையைக் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.