அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்களின் தகவல்களை திருடி டாலர்களுக்கு விற்கும் இந்திய ஹேக்கர்கள்: ‘தி சண்டே டைம்ஸ்’ ஆய்வில் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: சர்வதேச அளவில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என முக்கிய நபர்களின் தகவல்களை திருடுவதற்கு இந்திய ஹேக்கர்கள் பயன்படுத்தப்படுவதாக பிரிட்டன் பத்திரிகையான ‘தி சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

கணினி, மொபைல் போன்களை ஹேக் செய்வதற்கென்று இந்தியாவில் கும்பல் உள்ளது என்றும். இந்தக் ஹேக்கர்களைப் பயன்படுத்தி உலக அளவில் அரசுகளும், தனியார் நிறுவனங்களும் சட்டவிரோதமாக தகவல்களை உளவு பார்ப்பதாகவும் அதற்காக ஆயிரக்கணக்கான டாலர்கள் வழங்குவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தி சண்டே டைம்ஸ்’ மற்றும் ‘புலனாய்வு இதழியல் அமைப்பு’ இணைந்து இந்தியாவில் ஹேக்கர்கள் பற்றி புலனாய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையிலேயே இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. அவ்விரு நிறுவனங்கள் இந்தியாவில் சட்டவிரோத ஹேக்கிங் உலகம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய பத்திரிக்கையாளர் குழுவை உருவாக்கியது. அந்தக் குழுவினர் ஒரு போலியான புலனாய்வு நிறுவனத்தைத் தொடங்கி, தங்களை லண்டனின் ரகசிய புலனாய்வு அமைப்பின் (MI6) முன்னாள் உறுப்பினர்கள் என்றும் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக துப்பறியும் பணிகள் செய்வதாகவும் அடையாளப்படுத்திக்கொண்டு, தங்கள் நிறுவனத்துக்காக வேலை செய்ய ஹேக்கர்கள் தேவைப்படுகிறார்கள் என்று விளம்பரப்படுத்தினர். அந்த வேலைக்கு இந்தியாவிலிருந்து பல ஹேக்கர்கள் விண்ணப்பம் அனுப்பினர்.

அந்த பத்திரிகையாளர் குழு இந்தியாவுக்கு வந்து, ஹேக்கர்களை நேர்காணலுக்கு அழைத்தது. ஹேக்கர்களுடனான உரையாடலை பத்திரிகையாளர் குழு ரகசியமாக பதிவு செய்தது.

பெங்களூரைச் சேர்ந்த உட்கர்ஷ் பார்கவா என்ற ஹேக்கர், தான் இந்திய அரசாங்கத்துக்காக ஹேக்கிங் வேலை செய்வதாகவும், துருக்கி, பாகிஸ்தான், எகிப்து, கம்போடியா, கனடா ஆகிய நாடுகளின் அமைச்சகங்களின் கணினிக்குள் நுழைந்து விவரங்களை திருடுவதற்காக இந்திய அரசு தன்னை நியமித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், 31 வயதான ஆதித்யா ஜெயின் ஹேக்கிங் வேலைக்காக குருகிராமில் அலுவலகம் வைத்துள்ளார். உலகில் எவருடைய மின்னஞ்சலுக்குள்ளேயும் தன்னால் ஊடுருவி விட முடியும் என்று ஆதித்யா ஜெயின் தெரிவித்துள்ளார்.

அவரது இலக்குப் பட்டியலில் இந்திய தொழிலதிபர் அசோக் இந்துஜா, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், பாகிஸ்தானின் முன்னாள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி, லிஸ் டிரஸ் பிரிட்டன் பிரதமராக இருந்தபோது அவரது முதன்மை அலுவலராக இருந்த மார்க் புல்புரூக், பிபிசி செய்தி நிறுவன அரசியல் பிரிவு ஆசிரியர் கிறிஸ் மாசன் உட்பட முக்கிய நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஹேக்கர்கள் தாங்கள் ஹேக் செய்ய போகும் நபருடன் சமூக வலைதளங்கள் மூலமாக நட்பை உருவாக்குவார்கள். அதன் பிறகு அந்த நபருக்கு வைரஸ் உள்ளடங்கிய இணைப்பை அனுப்புவார்கள். அந்த இணைப்பை அந்த நபர் கிளிக் செய்ததும், அவரது கணினி ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஒவ்வொரு ஹேக்கிங் வேலைக்கும் ஆயிரக்கணக்கான டாலர்கள் வழங்கப்படுவதாகவும், இந்த ஹேக்கிங்களுக்கு 90 சதவீதம் இந்திய ஹேக்கர்கள்தான் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in