ஃபேஸ்புக்கில் தொழில்நுட்ப கோளாறு? - ஃபாலோயர்களை அதிக அளவில் இழக்கும் பயனர்கள்

மார்க் ஸூகர்பெர்க் (கோப்புப்படம்)
மார்க் ஸூகர்பெர்க் (கோப்புப்படம்)
Updated on
1 min read

கலிபோர்னியா: ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயனர்கள் பலர், தங்கள் ஃபாலோயர்களை அதிக அளவில் இழந்துள்ள நிலையில், மெட்டா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸூகர்பெர்க்-கும் சுமார் 119 மில்லியன் ஃபாலோயர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட சமூக வலைதளமான ஃபேஸ்புக், சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது. இந்த தளத்தில் போட்டோ, வீடியோ மற்றும் லிங்குகளை ஷேர் செய்யலாம். நண்பர்களுடன் கலந்துரையாடலாம். 112 மொழிகளில் இந்த தளம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பலரும் தங்களது ஃபாலோயர்களை அதிக அளவில் இழந்துள்ளனர்.

இது குறித்து வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா வேடிக்கையான வகையில் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். “ஃபேஸ்புக் தளத்தில் ஏற்பட்ட சுனாமி தனது 9 லட்சம் ஃபாலோயர்களை அடித்துக் கொண்டு சென்றுவிட்டது. இப்போது வெறும் 9,000 பேர் மட்டுமே கரையில் உள்ளனர். இது காமெடியை போல உள்ளது” என தெரிவித்துள்ளார்.

அவர் மட்டுமல்லாது, ஃபேஸ்புக்கை தனது அங்கமாகக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸூகர்பெர்க்-கும் சுமார் 119 மில்லியன் ஃபாலோயர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவரது ஃபாலோயர்கள் கணக்கு பத்து ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் தரப்பு செய்தித் தொடர்பாளர், “ஃபேஸ்புக் தளத்தில் சிலர் தங்கள் ஃபாலோயர்களை பெருமளவில் இழந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். இதனை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பணியை மேற்கொண்டு வருகிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம்” என தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே பயனர்கள் பெருமளவில் ஃபாலோயர்களை இழந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in