Published : 12 Oct 2022 07:23 PM
Last Updated : 12 Oct 2022 07:23 PM

5ஜி சாதனங்களில் நவம்பர் மத்தியில் 5ஜி சப்போர்ட்:  சாம்சங் தகவல்; பிற நிறுவனங்களின் நிலை என்ன?

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் 5ஜி தொலைத்தொடர்பு சாதனங்களில், அதற்கான நெட்வொர்க் வரும் நவம்பர் மத்தியில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு சாம்சங் இதனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 1-ம் தேதி 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை நாட்டின் சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை அறிமுகம் செய்தன.

எனினும், தங்களது 5ஜி சாதனத்தில் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் இல்லை என பயனர்கள் சிலர் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்தியாவில் கடந்த 2020 முதல் நடப்பு ஆண்டின் முதல் பாதி வரை சுமார் 51 மில்லியன் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் 5ஜி சாதனங்களில் 5ஜி ஃப்ரீக்வென்ஸி பேண்ட் பயன்பாடு லாக் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை அன்-லாக் செய்ய சாப்ட்வேர் அப்டேட் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கூட்டத்தில் தகவல்தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் மற்றும் சிப் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர். அப்போது, இந்தியாவில் 5ஜி சாப்ட்வேர் அப்டேட்டை விரைந்து மேற்கொள்ளும்படி அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சாம்சங் செய்தித் தொடர்பாளர், “கடந்த 2009 வாக்கில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் உலக அளவில் அதன் சேவையை கொண்டு செல்லும் முன்னணி நிறுவனமாக சாம்சங் உள்ளது. இந்தியாவில் 5ஜி சாதனங்களில் சாம்சங் நிறுவனம் மிகப்பெரிய போர்ட்ஃபோலியோவை கொண்டுள்ளது. அதை கருத்தில் கொண்டு வரும் நவம்பர் மத்தியில் ஓடிஏ சாப்ட்வேர் அப்டேட் வெளியிடப்படும். அதன் பின்னர் பயனர்கள் தங்குதடையின்றி 5ஜி நெட்வொர்க் சேவையை பெற முடியும்” என தெரிவித்தார்.

தங்கள் நிறுவனத்தின் 5ஜி சாதனங்களில் 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் வரும் டிசம்பரில் கிடைக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஒப்போ, தங்களது 5ஜி சாதனங்களில் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் இணைப்பை பெறலாம் என கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

நிறுவனங்களின் இந்த அறிக்கையை பார்க்கும்போது “5ஜி இருக்கு ஆனா 5ஜி சப்போர்ட் இல்ல” என சொல்லும் நிலையில் பயனர்கள் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x