பரிசோதனைக்கு முன்னர் கர்ப்பத்தை கண்டறிந்த ஆப்பிள் வாட்ச்: பெண் பயனர் பகிர்ந்த தகவல்

பரிசோதனைக்கு முன்னர் கர்ப்பத்தை கண்டறிந்த ஆப்பிள் வாட்ச்: பெண் பயனர் பகிர்ந்த தகவல்
Updated on
1 min read

வழக்கத்திற்கு மாறான இதயத்துடிப்பு கொண்ட பயனரின் உயிர் காத்த ஆப்பிள் வாட்ச் குறித்த செய்தியை இதற்கு முன்னர் பலரும் கேள்விப்பட்டு இருப்போம். இப்போது அதே ஆப்பிள் வாட்ச் பூமிக்கு அடுத்த சில மாதங்களில் வருகை தர உள்ள புதிய உயிரின் இதயத்துடிப்பை கண்டறிந்து, அதன் பயனருக்கு அது குறித்து தெரிவித்துள்ளது. ஆம், ஆப்பிள் வாட்ச் பயன்படுத்தி வரும் பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளார். அதை ஆப்பிள் வாட்ச் கண்டறிந்துள்ளது.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு டெக்னிக் இருக்கும். அது பெண்களுக்கு வைத்தியர் நாடி பிடித்து பார்த்து கர்ப்பமாக இருக்கிறாரா? இல்லையா? என சொல்வது. இப்போது அந்த வேலையை டிஜிட்டல் யுகத்தில் ஆப்பிள் வாட்ச் செய்து கொண்டுள்ளது. இந்த அம்சத்தின் சிறப்பை ஆப்பிள் வாட்ச் பயனர் ஒருவர் பகிர்வது இதுவே முதல்முறை.

34 வயது பெண் ஒருவர் தான் கர்ப்பம் அடைந்துள்ள செய்தியை ஆப்பிள் வாட்ச் சொல்லி அறிந்து கொண்டதாக ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 15 நாட்களாக தனது இதயத்துடிப்பு வழக்கத்திற்கும் மாறாக கூடுதலாக இருந்ததை ஆப்பிள் வாட்ச் சொல்லி அறிந்து கொண்டுள்ளார்.

முறையான உடற்பயிற்சி, உணவு பழக்க முறையை கடைபிடித்து வரும் அவரது இதயத்துடிப்பு ரெஸ்டிங்கில் இருந்தால் வெறும் 57 என்ற எண்ணிக்கையில் தான் இருக்குமாம். ஆனால் அது 72 என இருந்துள்ளது. காரணம் இல்லாமல் ஏன் இதயத்துடிப்பு கூடுகிறது என அவர் சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். இதில் கரோனா, சளி மற்றும் காய்ச்சல் தொடர்பான பரிசோதனைகள் அடங்கி இருந்துள்ளது. அதன் முடிவுகள் அனைத்தும் நெகட்டிவ் என வந்துள்ளது.

பின்னர் இணையத்தில் அது குறித்து தேடியுள்ளார். அப்போது கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் பெண்களின் இதயத்துடிப்பு கூடும் என அறிந்து கொண்டுள்ளார். அதே நேரத்தில் அவருக்கு பீரியட் தள்ளி போயுள்ளது. மருத்துவரிடம் பரிசோதித்த போது தான் அவர் 4 வார காலம் கருவை சுமந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்டுள்ளார். அதோடு ஸ்மார்ட் வாட்ச் பயனர்கள் தங்கள் இதயத்துடிப்பை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in