ஸ்வீடனில் உள்ள வாகனத்தை டெல்லியில் இருந்து இயக்கிய பிரதமர் மோடி: வீடியோ
புதுடெல்லி: ஸ்வீடனில் உள்ள வாகனத்தை டெல்லியில் இருந்து இயக்கி உள்ளார் பிரதமர் மோடி. தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அவர் ரிமோட் வழியாக காரை இயக்கி இருந்தார். அந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது.
புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வு தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு மொத்தம் நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. இதில் தான் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். அப்போது, காரை விர்ச்சுவலாக இயக்கி உள்ளார் பிரதமர் மோடி. இது இந்தியாவின் 5ஜி சேவை தொடங்கி உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள எரிக்சன் நிறுவன அரங்கில் இந்த சோதனையை அவர் மேற்கொண்டிருந்தார்.
அவர் இயக்கிய கார் ஸ்வீடன் நாட்டில் இருந்தது. அதனை 5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவில் இருந்து இயக்கும் வகையில் இணைக்கப்பட்டிருந்தது. அதனால் இங்கிருந்தபடி காரை பிரதமர் மோடி கன்ட்ரோல் செய்திருந்தார். அந்தப் படத்தை மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் பகிர்ந்திருந்தார். பிரதமர் மோடி பல்வேறு தொழில்நுட்பத்தின் டெமோவை இந்த நிகழ்வில் அனுபவ ரீதியாக சோதனை செய்து பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
