

புதிய தலைமுறை இளைஞர்களை இந்திய விமானப் படையை நோக்கி ஈர்க்க முதல்முறையாக 3டி மொபைல் கேம் அறிமுகமாகியுள்ளது. அதன் பெயர் ‘கார்டியன்ஸ் ஆஃப் ஸ்கைஸ்’. தேசத்திலுள்ள சிறந்த திறன்படைத்த இளைஞர், யுவதிகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த 3டி மொபைல் கேம் உருவாக்கப்பட்டதாக ஏர் மார்ஷல் எஸ்.சுகுமார் கூறியிருக்கிறார்.
GOTS என்ற பெயரில் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த விளையாட்டு ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் மொபைல் ஐஓஎஸ் பிளாட்பார்ம்களில் இலவசமாகக் கிடைக்கும். நிஜமாக விமான யுத்தத்தில் ஈடுபடும் உணர்வை அளிக்கும் இந்த விளையாட்டு இந்திய விமானப் படையின் வல்லமையை உணர்த்துவதாக உள்ளது.
வேகமாக நவீன தொழில்நுட்பங்களுக்குத் தகவமைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் இந்திய விமானப் படை சந்திக்கும் பாதுகாப்பு சவால்களை வெளிப்படுத்துவதாக இந்த மொபைல் கேம் அமைந்துள்ளது. இந்திய விமானப் படை சருசியா என்ற கற்பனை தேசத்துடன் சண்டையிடுவதாக மொபைல் கேம் அமைந்துள்ளது.அரசியல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாவும் ஸ்திரத்தன்மை இல்லாத, ராணுவக் கலகங்கள் அதிகம் நடக்கும் நாடாக ‘சருசியா தேசம்’ உள்ளது.
இந்த விளையாட்டின் கதை கற்பனையானது. எதிரியும் கற்பனையானவன். ஆனால் அனுபவம் நிஜமான உணர்வைத் தரும்.