ஐபோன் 14 சீரிஸில் புதிய அம்சம்: காரை ‘கிராஷ்’ செய்து பரிசோதித்த யூடியூபர்! 

ஐபோன் 14 சீரிஸில் புதிய அம்சம்: காரை ‘கிராஷ்’ செய்து பரிசோதித்த யூடியூபர்! 
Updated on
1 min read

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு எப்போதும் உலக அளவில் வரவேற்பு இருப்பது உண்டு. அண்மையில் ஐபோன் 14 சீரிஸ் மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள பிரத்யேக அம்சம் ஒன்றை சோதித்து பார்த்திட வேடிக்கையான ஒரு செயலை செய்து பார்த்துள்ளார் யூடியூபர் ஒருவர். அது என்ன என்பதை பார்ப்போம்.

ஐபோன் 14 சீரிஸில் ‘கிராஷ் டிடக்‌ஷன்’ என்றொரு அம்சம் இடம்பெற்றுள்ளது. அதன்படி விபத்து போன்றவற்றில் இந்த போனை வைத்துள்ளவர் சிக்கினால் தானாகவே அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கும் வசதியை இந்த அம்சம் மேற்கொள்ளும். இது பயனர்களுக்கு மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.

இத்தகையச் சூழலில் மொபைல் போன் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை பகிர்ந்து வரும் டெக்ரேக்ஸ் என்ற யூடியூப் சேனலில் அந்த அம்சத்தை நேரடியாக சோதித்து பார்த்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி களத்தில் இறங்கியுள்ளது அந்தச் சேனல் குழு.

கார் ஒன்று தானாகவே மிதமான வேகத்தில் இயங்கும் வகையில் செட்டிங் செய்துள்ளனர். அதனை ரிமோட் மூலம் அவர்கள் இயக்கியுள்ளதாக தெரிகிறது. முக்கியமாக இந்த சோதனையை வாகன போக்குவரத்து இல்லாத மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு காலியான இடம் ஒன்றில் மேற்கொண்டுள்ளனர். காரின் டிரைவர் சீட்டுக்கு பின்புறத்தில் போனை வைத்துள்ளனர். அந்த கார் ஏற்கெனவே அங்கு நிறுத்தப்பட்டிருந்த பழைய கார்களின் மீது மோதி நிற்கிறது. உடனடியாக ஐபோனில் கிராஷ் டிடக்‌ஷன் அம்சம் இயங்குகிறது. அதில் நீங்கள் விபத்தில் சிக்கியுள்ளதை போல தெரிகிறது என சொல்லப்படுகிறது.

பயனர்கள் விபத்தில் சிக்கவில்லை என்றால் தானாகவே அவசர அழைப்புக்கு இணைக்கப்படுவதை 10 நொடிகளுக்குள் துண்டிக்க வேண்டும். இல்லையெனில் அழைப்பு அவசர உதவி மையத்திற்கு இணைக்கப்படும். யூடியூபர் தனது சோதனை வெற்றி பெற்றதை உறுதி செய்து கொண்டு அழைப்பு செல்வதை தவிர்க்கிறார். அதோடு அந்த வீடியோவும் நிறைவு பெறுகிறது.

ஐபோன் 14 சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே அதனை விரும்பும் பயனர்கள் இது போன்ற வினோத செயல்களை செய்து வருகின்றனர். இந்தியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துபாய் சென்று ஐபோன் 14 சீரிஸ் வாங்கி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in