பெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்?

பெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்?
Updated on
2 min read

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக, சமூக வலைதளமான ட்விட்டரில் #TheMistakeGirlsMake என்ற ஹஷ்டேக் பிரபலமடைந்து இருந்தது.

இந்த ஹஷ்டேக்கை வைத்து ஆண்களும் பெண்களும் பல ட்வீட்களைத் தட்டினர். சிலர் நகைச்சுவையாகவும், எவரையும் புண்படுத்தாத வகையிலும் ட்வீட் செய்ய, பெரும்பாலானவர்கள் பெண் மோகம் கொண்ட வாசகங்களையும், பெண்களை வெறுக்கும் வாசகங்களையும், அவர்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் வகையிலும் ட்வீட் செய்தனர்.

"பெண்ணாக பிறப்பதே தவறு", "அவர்கள் எதையாவது சரியாக செய்வதுண்டா?", "நம்பத் தகுந்த ஒருவரை சோதிப்பதாக நினைத்துக்கொண்டு தன் சிறிய ஐ.க்யூ. மூலம் ஏமாற்றுவது" போன்ற ட்வீட்களைத் பதிவு செய்தனர். மேலும் சிலர், இங்கு வெளியிட முடியாத அளவிற்கு மிக மோசமான ட்வீட்களையும் பதிவு செய்தனர்.

பெரும்பாலான ட்வீட்களில் பெண்கள் எப்படி ஏமாற்றுபவர்கள் மீது காதல் வயப்படுகிறார்கள் என்றும், நம்பதகுந்தவர்களை எப்படி நண்பர்கள் வட்டத்துக்குள் வைத்திருக்கிறார்கள் என்றும் புலம்பி தள்ளியிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பெண்கள் ஏதோ ஒரு வகையில் விமர்சனத்திற்கு ஆளாகிறார்கள்.

சமீபத்தில் லாவண்யா மோகன் என்ற இளம்பெண் ஆதார் அட்டை வாங்க சென்றுள்ளார். ஆனால், துப்பாட்டா அணியாத காரணத்தால், பணியாளர்களோ லாவண்யாவுக்கு ஆதார் அட்டை வழங்க மறுப்பு தெரிவித்து, திருப்பி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து, லாவண்யா ட்வீட் செய்ய, மேலே குறிப்பிட்டுள்ள ஹஷ்டேக் பிரபலமடைந்துள்ளது.

"நான் ட்வீட் செய்த பின், அதற்கு எதிராக மிக மோசமான ட்வீட்களை சிலர் பதிவு செய்தனர். நான் என்னையே விளம்பரப்படுத்துவதாக சிலர் என்னை கடுமையாக விமர்சித்தனர். அதனால், நான் சுயதணிக்கை செய்தாக வேண்டியிருந்தது.

ட்வீட்டரில் தொடர்ந்து இயங்கி வரும் ஆண்களை இயல்பாக கருதுவது போல் பெண்களை கருதுவதில்லை. சமூக வலைதளங்களில் பெண்களை எளிதாக இழிவுபடுத்திவிடுகிறார்கள். இதற்கு சுயதணிக்கை செய்வது தகுந்த தீர்வல்ல என்றாலும், என் மன அமைதிக்காக நான் அதை செய்ய வேண்டியிருந்தது" என்று அவர் வருத்ததுடன் தெரிவித்தார்.

இதற்கு முன், கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாடகி சின்மயியை ட்விட்டரில் இழிவுபடுத்தியதாக இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்தனர். சாதி வெறி மற்றும் அபாச ட்வீட்களால் சின்மயி தாக்கப்பட்டார்.

எழுத்தாளர் மீனா கந்தசாமி தன்னை இழிவுபடுத்தும் வகையில் பல ட்வீட்கள் தனக்கு வந்ததாக முன்பு கூறியுள்ளார். ஆசிட் வீச்சு செய்வதாகவும், பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் கூட மிரட்டல்கள் வந்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.

ட்விட்டருக்கு நெறிமுறைகள் வழங்குவதால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா என்பதற்கு, இல்லை என்கிறார் ப்ராஜ்ன்யா என்ற அமைப்பைச் சேர்ந்த அனுபமா ஸ்ரீனிவாசன். இந்த அமைப்பு, பாலியல் மற்றும் பாலினம் தொடர்பான வன்முறைகளை எதிர்த்து செயல்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் குறித்து அனுபமா கூறுகையில், "ஒரு வகையில் இணையத்தில் இயங்குவதும், சாலையில் நடப்பதும் ஒன்றே. சிலர் தான் என்ன நினைக்கிறார்களோ அதை செய்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதற்கு தீர்வாக, இதுபோன்ற சம்பவங்கள் அறிந்தவுடன், இதனை மிக முக்கிய விஷயமாக எடுத்துக்கொண்டு தீர விசாரிப்பதே சிறந்தது" என்று தெரிவிக்கிறார்.

இந்த நிகழ்வுகளையும், உங்களுடைய ஆன்லைன் அனுபவத்தையும் வைத்தும் பார்க்கும்போது, பெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்? - விவாதிப்போம் வாருங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in