செயலி புதிது: புத்தகம் படிக்க உதவும் செயலி

செயலி புதிது: புத்தகம் படிக்க உதவும் செயலி
Updated on
1 min read

ஸ்மார்ட் போன் தலைமுறையினர் மத்தியில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்று சொல்லப்படுவதை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இந்தப் பிரச்சினைக்கு, ஸ்மார்ட் போன் மூலமே தீர்வு ஒன்றை முன்வைத்திருக்கிறார் ஸ்மார்ட் போன் தலைமுறை இளைஞரான அம்ருத் தேஷ்முக். இவர் தந்திருக்கும் தீர்வு, புத்தகம் படிக்க உதவும் செயலி.

‘புக்லெட்’ எனும் இந்தச் செயலி மூலம் அவர் வாரம் ஒரு புத்தகத்தின் சுருக்கத்தை வழங்கிவருகிறார். முழுப் புத்தகத்தையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அதன் சாரம்சத்தைப் புரியவைக்கும் விதத்தில் இந்தப் புத்தகச் சுருக்கம் அமைகிறது. அதே நேரத்தில் வெறும் விமர்சனமாக இல்லாமல், வாசிப்பனுபவத்தை வழங்கக்கூடியதாகவும் இருக்கிறது.

‘பெஸ்ட் செல்லர்’ எனச் சொல்லப்படும் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இருந்து ஒரு புத்தகத்தைத் தேர்வுசெய்து வாசித்து அதன் சுருக்கத்தை அளிக்கிறார் அம்ருத். 20 நிமிடங்களில் படித்துவிடக்கூடியதாக இது அமைந்துள்ளது. பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் தேர்வுசெய்யப்படுகின்றன. சுயசரிதை, சுயமுன்னேற்றம், நிர்வாகவியல் உள்ளிட்ட துறைகளில் புத்தகங்கள் அமைந்துள்ளன. எல்லாமே ஆங்கிலப் புத்தகங்கள்.

வேலைப்பளு அல்லது சோம்பல் காரணமாகப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்ட நிலையில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தச் செயலியை அவர் உருவாக்கியுள்ளார். புத்தகச் சுருக்கத்தையும் படிக்க நேரமில்லை என்பவர்களுக்காக‌ அவற்றை ஒலிப் புத்தகமாகவும் வழங்குகிறார்.

மேலும் விவரங்களுக்கு: >https://play.google.com/store/apps/details?id=com.booklet.app&hl=en

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in