Last Updated : 30 Sep, 2016 11:01 AM

 

Published : 30 Sep 2016 11:01 AM
Last Updated : 30 Sep 2016 11:01 AM

சைபர் பாதுகாப்பு மாநாடு @ சென்னை!

இணையப் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், இணையம் மூலமான தாக்குதல், குற்றங்கள் மற்றும் அச்சுறுத்தல்களும் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில், இணையப் பயன்பாட்டில் உள்ள பலவேறு வகையான பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து விவாதித்து, இவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்கும் வகையில் சென்னையில் ‘தேசிய சைபர் பாதுகாப்பு மாநாடு 2016’ நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விவேகான‌ந்தா அரங்கில் இன்றும், நாளையும் (செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1) ஆகிய இரண்டு நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. சைபர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவரும் ‘நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ்’ அமைப்பு, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ் தலைவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன், முன்னாள் நீதிபதி மற்றும் அறிவுசார் சொத்துரிமை முறையீட்டு வாரியத்தின் தலைவர் கே.என்.பாஷா, தமிழகத்தில் உள்ள தேசிய சைபர் பாதுகாப்பு ஆய்வு மையத் தலைவர், முன்னாள் நீதிபதி டி.என். வள்ளிநாயகம் உள்ளிட்டோர் தொட‌க்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

மாநாட்டில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. நாட்டின் முக்கிய சைபர் உள்கட்டமைப்புக்கான அச்சுறுத்தல்கள், தேசிய மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்துவது, தரவுகள் இழப்பைத் தடுப்பது, மொபைல் செயலிகள் பயன்பாடு, நெட்வொர்க் பாதுகாப்பு, சைபர் தாக்குதல்கள் உள்ளிட்ட தலைப்புகளில் வல்லுந‌ர்கள் உரை நிகழ்த்துகின்றனர். இவை தொடர்பான குழு விவாதமும் நடைபெறுகிறது.

இணையப் பயன்பாடு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும், இணையத்தைப் பொறுப்பான முறையில் பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக அமைகிறது.

மேலதிக விவரங்களுக்கு: 7604801020, 044 - 28291766,
>www.ncdrc.res.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x