Published : 05 Jul 2022 10:02 PM
Last Updated : 05 Jul 2022 10:02 PM

‘கருத்துப் பதிவுகளை நீக்குவதில் முரண்பாடு’ - மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் ட்விட்டர்?

புதுடெல்லி: கருத்துப் பதிவுகள் மற்றும் சிலரது பக்கங்களை நீக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் சில உத்தரவுகளுக்கு எதிராக சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தை ட்விட்டர் நாடி உள்ளதாகவும் தெரிகிறது.

ட்விட்டர் நிறுவனத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக அந்த தளத்தின் செயல்பாடு, அதில் பதிவு செய்யப்படும் பதிவுகள் போன்ற காரணங்களால் முரண்பாடு நீடித்து வருகிறது.

இந்நிலையில், பதிவுகளை நீக்கும் பொருட்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக, இந்த வழக்கை சில ஆதாரங்களுடன் ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் நீதித் துறை மூலம் மறு ஆய்வை பெறுவதற்கான வழிகளை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டர் தளத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கணக்குகள் மற்றும் ட்வீட்களை அகற்றுமாறு அந்த நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஜூலை 4-ஆம் தேதிக்குள் அரசின் உத்தரவுக்கு இணங்கவில்லை என்றால், சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ட்விட்டர் நிறுவனத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அது தொடர்பாக மூன்று நோட்டீஸ்களை ஜூன் 4, 9 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை குறைதீர்ப்பு அதிகாரிக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிகிறது.

2021-இல் 80-க்கும் மேற்பட்ட ட்வீட்கள் மற்றும் கணக்குகளை நீக்குக: இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே முரண் ஏற்பட்டது. அரசு குறிப்பிட்ட ட்வீட் மற்றும் கணக்குகளில் சில விவசாய ஆர்வலர்கள், பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அடங்கி இருந்தனர். இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2000-இன் கீழ் சம்பந்தப்பட்ட அமைச்சகம் இந்தக் கோரிக்கையை வைத்தது.

ஆனால், காலம் தாழ்த்திய நிலையில், அதை திட்டவட்டமாக செய்ய மறுத்துவிட்டது ட்விட்டர். அதற்கு அப்போது கருத்து சுதந்திரத்தை மேற்கோள் காட்டி இருந்தது அந்நிறுவனம். மத்திய அரசும் அப்போது எதிர்வினை ஆற்றி இருந்தது.

குற்றச் செயல்களைத் தூண்டும் விதமான பதிவுகளைக் கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக்கொள்ள முடியாது எனவும், சட்டம் - ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகவே கருத வேண்டும் என்றும் ட்விட்டரிடம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்திருந்தது.

இது அரசுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுத்தது. தொடர்ந்து ட்விட்டருக்கு மாற்றாக வேறு ஒரு சமூக வலைதளம், அதுபோலவே இந்தியாவில் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் கருத்துப் பதிவுகள் விவகாரத்தில் நீதிமன்றத்தை ட்விட்டர் தரப்பு நாடியுள்ளது. இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் எந்தவித கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x