இணையத்தில் கொஞ்சம் பரிவும் தேவை!

இணையத்தில் கொஞ்சம் பரிவும் தேவை!
Updated on
3 min read

கய் கோமாவை (Guy Goma) உங்களுக்குத் தெரியுமா? இணைய உலகில் அவர் அறிமுகமான தினத்தைப் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணையம் நினைவில் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. கேலி கலந்த கொண்டாட்டம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அப்படியே, இணையத்தில் நாம் நடந்து கொள்ளும் வித‌த்தையும் கேள்வி கேட்க வைத்திருக்கிறது.

- கய் கோமா

யார் இந்த கய் கோமா?

இந்தக் கேள்விக்குச் சரியான பதில் ’தவறான மனிதர்’ என்பதுதான் அழகான முரண். பத்தாண்டுகளுக்கு முன்னர் இணையம் அவரை அப்படித்தான் அடையாளம் கண்டது.

ஆப்பிரிக்க நாடான காங்கோவைச் சேர்ந்த கய் கோமா, பி.பி.சி. தொலைக்காட்சியின் நேர்காணலில் பங்கேற்றுப் பதில் அளித்தார். அந்தப் பேட்டிதான் அவரை இணையம் முழுவதும் பிரபலமாக்கியது. ஏனெனில் அவர் அந்தப் பேட்டிக்காக வந்தவர் இல்லை.

உண்மையில் பி.பி.சி. நிறுவனத்தில் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்பதற்காக கோமா சென்றிருந்தார்.

வரவேற்பறையில் காத்திருந்தவரை, அங்கிருந்த ஊழியர் செய்தி நிகழ்ச்சியில் கருத்துச் சொல்ல வந்திருந்த வல்லுந‌ர் எனத் தவறாகப் புரிந்துகொண்டு உள்ளே அனுப்பிவிட்டார். கோட் சூட் அணிந்து நேர்காணல் பதற்றத்தில் இருந்த கோமா, கேம‌ராக்களையும் ஒளிவிளக்குகளையும் பார்த்து மிரண்டுவிட்டார்.

அவரது போதாத நேரம் நேர்காணல் செய்தவர் இது பற்றி எதுவும் அறியாமல் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட ஆப்பிள் நிறுவன வழக்கு தொடர்பான தீர்ப்பு பற்றி அவரிடம் கருத்து கேட்கத் தொட‌ங்கிவிட்டார்.

கோமா சமாளித்துக்கொண்டு தனக்குத் தெரிந்த பதிலைக் கூறினார். வழக்கின் விஷயம் அவருக்குத் தெரியாது என்பதால் பதில் இலக்கு தவறிய அம்பாக இருந்தது. ஆனால் மனிதர் அசராமல் பதில் சொன்னார்.

இறுதியாக டவுன்லோடு செய்யப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது, ”நீங்கள் எங்கு பார்த்தாலும் இணையம் மூலம் தாங்கள் விரும்பிய எல்லாவற்றையும் மக்கள் டவுன்லோடு செய்வதைப் பார்க்கலாம். ஆனால் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்த்துவதும், அதை அவர்கள் எதிர்பார்க்கும்போது எளிதாகவும், வேகமாகவும் கிடைக்கச்செய்வது இன்னும்கூட இதற்கு நல்லது” என பதில் சொல்லியிருக்கிறார்.

இதனிடையே நேர்காணலுக்காக வந்திருந்த வல்லுந‌ர் வரவேற்பறையிலேயே இருப்பதைப் பார்த்த ஊழியர், அப்படி என்றால் உள்ளே சென்றவர் யார் என திடுக்கிட்டபோதுதான், தவறான நபர் உள்ளே அனுப்பி வைக்கப்பட்ட விஷயம் தெரிய வந்தது. அந்த நேர்காணல் ஒளிபரப்பாகாமல் நிறுத்தப்பட்டது.

ஆனால் செய்தி ஒளிபரப்பில், கருத்து சொல்ல வந்திருந்த‌ வல்லுந‌ருக்குப் பதில் வேறு ஒருவர் தவறாக அனுப்பி வைக்கப்பட்ட விவரமும், அவர் பதில் சொல்ல முடியாமல் சங்கடப்பட்டுச் சமாளித்த விதமும் செய்தியானது. கோமாவின் பேட்டி காட்சி இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகப் பரவியது.

எல்லோரும் அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர். இப்படித்தான் கய் கோமா தவறான மனிதர் (wrong Guy) என அறியப்பட்டார். இந்த நேர்காணலுக்குப் பிறகு கோமா கொஞ்சமும் கலங்காமல் தனக்கான வேலைவாய்ப்பு நேர்காணலிலும் கலந்துகொண்டார்.

அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றாலும் இணையம் முழுவதும் அறிமுகமாகிவிட்டார். ஒரு வல்லுந‌ருக்குப் பதிலாக கருத்துச் சொல்ல வேண்டிய அனுபவம் எப்படி இருந்தது என்பது பற்றி பல டி.வி. சேனல்கள் அவரிடம் பேட்டி கண்டு வெளியிட்டனர்.

அந்தக் காலத்தில் கோமா பலரும் கைத்தட்டிச் சிரிப்பதற்கான கேலிக்குரியவராக இருந்தார். இணையம் கைத்தட்டி ரசித்து மகிழ்ந்தது.

நிற்க, இந்தச் சம்பவம் மறக்கப்பட்டு விட்டது, அதன் பிறகு இணையம் பல கோமாக்களைக் கண்டு சிரித்திருக்கிறது. கேலி செய்திருக்கிறது.

அப்பாவிகள் கேலிக்குரியவர்களா?

இணையம் சாமானியர்களைப் புகழ் வெளிச்சத்துக்குள் கொண்டு வந்து அவர்களை நட்சத்திரமாக்குவது போலவே, பல அப்பாவிகளை இது போல கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கியும் வருகிறது.

எதிர்பாராத நேரத்தில் எதிர்மறையான காரணங்களுக்காகத் திணிக்கப்படும் புகழை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் பல அப்பாவிகள் இன்னமும் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

கோமாவை முற்றிலுமாக மறந்துவிடாத இணையம், இந்த நிகழ்வின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு அவரை நினைவுக்குக் கொண்டுவந்தது. ட்விட்டரில் பலர் கோமா தொடர்பான குறும்பதிவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

எல்லாமே கேலி செய்பவை அல்ல என்றாலும், அவற்றின் மையச் சரடாக, நேர்காணலில் அவர் தவறான நபராகப் பங்கேற்று அசராமல் சமாளித்த சம்பவம் அமைந்திருந்தது. அந்த மறக்க முடியாத வீடியோவையும் பலர் பகிர்ந்துகொண்டனர்.

‘டைம்' உள்ளிட்ட பத்திரி கைகளும் இது பற்றி செய்தி வெளியிட்டன. கய்கோமா பெயரில் ஒரு இணையதளமும் அமைக்கப்பட்டு, இந்த வீடியோ காட்சி பதிவேற்றப்பட்டது. இந்தப் பேட்டியின் முழு உரையாடலும்கூட இணையத்தில் பதிவேற்றப்பட்டது.

இந்நிலையில் நமக்கு நாமே ஒரு கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோமா போன்றவர்களை நாம் எப்படி அணுக வேண்டும்? அவர் கிண்டலுக்கும் கேலிக்கும் உரியவரா? தவறான இடத்தில் நிறுத்தப்பட்டது அவரது தவறா?

கோமா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் தவறான இடத்தில் நிறுத்தப்பட்ட போது அவர் சரியாகவே நடந்து கொண்டார்.

முதலில் அவருக்கு எதுவுமே புரியவில்லை. இதைத் தனது பதிலில் வெளிப்படுத்தினார். அவரது பதிலில் வெளிப்பட்டது அப்பாவித்தனம் மட்டும் அல்ல வெளிப்படையான தன்மையும்தான்.

அது மட்டும் அல்லாமல் இணையப் புகழ் சூறாவளிக்கு நடுவே, இந்த அனுபவம் பற்றி கேட்கப்பட்டபோது, அடுத்த முறை நேர்காணலுக்கு அழைத்தாலும் வருவேன், ஆனால், இதைவிட அதிக தயாரிப்புடன் வருவேன் என்று கூறியிருக்கிறார். இந்தத் துணிச்சலும் நேர்மையும் எத்தனை பேருக்கு வரும்?

சராசரி மனிதர்களைக் கேலிக்கு மட்டும் அல்லாமல் அவமானத்திற்கும் உள்ளாக்கக்கூடிய இந்த அசாதரணமான சூழலில் அவர், தலை குனிந்து நிற்கவும் இல்லை. தலைதெறித்து ஓடவும் இல்லை. தன் மீது திணிக்கப்பட்ட சூழலைத் தன்னளவில் அவர் தெளிவாக எதிர்கொண்டார். அதற்காகவே அவரை இணையம் கண்ட நாயகனாகக் கொண்டாடலாம்.

அது மட்டும் அல்ல, இது தொடர்பாக‌ 'வைஸ்' எனும் இணைய இதழின் கட்டுரை சுட்டிக்காட்டுவது போல, கோமாவுக்கு நேர்காணலின்போது ஆப்பிள் நிறுவன வழக்கு பற்றியோ அல்லது இணைய டவுன்லோடு பிரச்சினை பற்றியோ எதுவும் தெரியாமல் இருந்தால் என்ன? இணையம் முழுவதும் எல்லாரும் டவுன்லோடு செய்வார்கள் என அவர் சொன்னது இப்போது நடக்கிறதா இல்லையா? இன்றைய ‘ஸ்பாட்டிஃபை' மற்றும் ‘நெட்ஃப்ளிக்ஸ்' சேவைகள் இதைத்தானே சாத்தியமாக்கியுள்ளன. இது அவர் அறியாமல் வெளிப்படுத்திய தீர்க்க தரிசனமா?

ஆக , இணையத்தில் அப்பாவி மனிதர்கள் தவறான இடத்தில் சிக்கித் தவிர்க்க நேரும்போது கொஞ்சம் பரிவு காட்டுவோம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in