நீங்களும் ‘டாக்டர் வசீகரன்’தான்... எப்படி? - மின்னணு கழிவுகள் | E-Waste A to Z புரிதல்கள்

நீங்களும் ‘டாக்டர் வசீகரன்’தான்... எப்படி? - மின்னணு கழிவுகள் | E-Waste A to Z புரிதல்கள்
Updated on
3 min read

அண்மையில் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தனது செல்போனில் க்ளிக் செய்யும் படங்களை டெலீட் செய்வதே இல்லை என தெரிவித்தார். "எப்படி?" என நான் கேட்டேன். "அது ஒன்றும் இல்லை... நான் முதன் முதலில் பயன்படுத்திய ஸ்மார்ட் போனின் ஸ்டோரேஜ் திறன் 8 ஜிபி என்ற அளவில் இருந்தது. போட்டோக்களின் எண்ணிக்கை கூடியது. நான் போனை அதற்கேற்ற வகையிலான ஸ்டோரேஜ் திறன் கொண்டிருக்கும் வகையில் மாற்றினேன்.

8 ஜிபியில் தொடங்கி இப்போது 256 ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட போனை நான் பயன்படுத்தி வருகிறேன். அடுத்து நான் மாற்றுவது என்றால் அது 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனாக இருக்கலாம்" என தெரிவித்தார்.

உடனடியாக முன்னதாக அவர் பயன்படுத்திய பழைய போன்களை எல்லாம் என்ன செய்தீர்கள் என கேட்டேன். அந்த போன்கள் அனைத்தும் தன்னிடமே இருப்பதாக சொன்னார். இப்படியாக இன்றைய நவீன உலகில் அவரவர் தேவைக்கு ஏற்ப மின்னணு டிஜிட்டல் சாதனங்கள் மாறுபட்டாலும், அந்தப் பயனர்கள் அனைவரும் நண்பர் சொல்லும் அந்த ஒற்றை புள்ளியில் அடங்கி விடுவார்கள்.

செல்போன், ஸ்மார்ட்போன், டிவி, வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் என அவரவர் தேவைக்கு ஏற்ப அந்த சாதனங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது. மறுபக்கம் வீடுகளில் தேங்கி நிற்கும் அந்த மின்னணு கழிவுகள் அனைத்தும் ஏதோ ஒரு கட்டத்தில் குப்பையாக வீசப்படுகின்றன. ஒட்டுமொத்த உலகமும் மின்னணு குப்பைகளை குவித்து வரும் வேகம் கூடிய விரைவில் எவரெஸ்ட் சிகரத்தை கடந்தாலும் அதில் ஆச்சரியம் கொள்வதற்கு ஒன்றும் இல்லை.

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? - கடந்த 2019-இல் மட்டுமே உலகில் சுமார் 53.6 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் குவிந்துள்ளன. இந்த எண்ணிக்கை உலகில் வாழும் ஒவ்வொருவர் சார்பிலும் சுமார் 7.3 கிலோகிராம் மின்னணு கழிவுகள் குவிக்கப்பட்டதற்கு நிகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசியா (24.9 மில்லியன் டன்), அமெரிக்கா (13.1 மில்லியன் டன்), ஐரோப்பா (12 மில்லியன் டன்), ஆப்ரிக்கா (2.9 மில்லியன் டன்) என ஒவ்வொரு கண்டத்திற்குமான கழிவு பங்கீடு சொல்லப்பட்டுள்ளது. இப்போது இந்த எண்ணிக்கை மேலும் கூடி இருக்கலாம். குறுகிய காலம் மட்டுமே இயங்கும் வகையிலான சாதனங்களை வாங்குவது மற்றும் அதனைப் பழுது நீக்க முடியாததும் தான் மின்னணு கழிவுகள் அதிகம் குவிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

> கடந்த 2019-இல் உலகின் ஒட்டுமொத்த மின்னணு கழிவுகளில் வெறும் 17.4 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மறுசுழற்சி பணியில் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா முதல் மூன்று இடங்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

> கடந்த 2019 இறுதியில் உலக மக்கள் தொகையில் 71 சதவீதம் கொண்டுள்ள 78 நாடுகள் மின்னணு கழிவு மேலாண்மை தொடர்பான கொள்கை அல்லது ஒழுங்குமுறையை ஏற்படுத்தியுள்ளது மட்டும் தான் இந்த விவகாரத்தில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

மின்னணு குப்பை? - சர்க்யூட் போர்டுகள் கொண்ட எந்தவொரு மின் சாதன பொருளையும் பயன்படுத்தாமல் வைக்கும்போதோ அல்லது பழுது நீக்க முடியாமால் போகும் போதோ அது மின்னணு கழிவாக மாறுகிறது. இதில் ஈயம், காட்மியம், பெரில்லியும், சிலிகான் என நச்சுத்தன்மை கொண்ட மெட்டீரியல்களில் இருந்துதான் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தேவைக்கு அதிகமாக மின் சாதன பொருட்களை பயன்படுத்துவதுதான் மலை அளவுக்கு இந்தக் கழிவுகள் குவிய காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு இரண்டு போனை பயன்படுத்துவதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். உலகளவில் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதே அதில் உள்ள தங்கத்தை எடுப்பதற்காக தான். 15-30 கிலோகிராம் எடை கொண்ட பழைய மொபைல் போனில் இருந்து 2 கிராம் எடை கொண்ட தங்க மோதிரத்தை உருவாக்கலாம் என்பது அதற்கு ஓர் உதாரணம்.

முடிந்தவரை மின் சாதன பொருட்களை பழுது நீக்கி உபயோகிக்க வேண்டும் எனவும். இல்லையென்றால் அதை எக்சேஞ்ச் ஆஃபரில் மாற்றுவதும் தற்காலிக தீர்வாக இருக்கும் என தெரிகிறது. இருந்தாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் இந்தக் கழிவுகள் முறைப்படி அப்புறப்படுத்தபட்டு வருவதாக தகவல். அதுவே வளர்ந்து வரும் நாடுகளில் இதை கையாளும் விதம் பெரும் பிரச்சனையாக இருக்கின்றன. குறிப்பாக, வளரும் நாடுகளில் ஸ்மெல்டிங் சிஸ்டம் முறையை பின்பற்றி தான் மின்னணு சாதனங்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. இது சூழல் பாதிப்புகளை பெருமளவு ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை காட்டிலும் மின்னணு கழிவுகள் அதிகம் நச்சுத்தன்மை கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம்: அனைத்திலும் புதுமையை படைப்பது ஜப்பான் நாட்டு விருப்பம். அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் அனைத்தும் மின்னணு கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை. இதற்காக Tokyo 2020 Medal Project என்ற திட்டத்தை கொண்டு வந்திருந்தது ஜப்பான். அதன் மூலம் மின்னணு கழிவு மறுசுழற்சியில் உலகிற்கு உதாரணமாக நின்றது. இந்த பணியில் சுமார் 78,985 டன் மின்னணு கழிவுகள் மற்றும் 6.21 மில்லியன் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள் சுழற்சி செய்யப்பட்டுள்ளன.

மறுசுழற்சி செய்யாவிட்டால் என்ன நடக்கும்? - எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ தனக்கு வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்ததும் டாக்டர் வசீகரன், உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவின் காரணமாக அது எந்திரன் என்பதை மறந்து அதை துண்டு துண்டாக வெட்டி குப்பைக் கிடங்கில் தூக்கி எறிந்து விடுவார். ஆனால் அது பேராசிரியர் போரா கைகளுக்கு சென்றதும் அதற்கு ரெட் சிப் கொடுத்து ஆக்டிவேட் செய்வார். அதனால் சிட்டி, வசீகரனுக்கு வில்லனாகி விடும். இந்த கதையை போல தான் மின்னணு கழிவுகளும்.

இங்கு உலக மக்கள் எல்லாம் டாக்டர் வசீகரன் போல. அவர்கள் வேண்டாமென தூக்கி எறியும் மின்னணு கழிவுகள் தான் சிட்டி ரோபோ. இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஒட்டுமொத்த உலகமும் ஓரணியில் திரண்டு வந்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். இல்லையெனில் நிலைமை மேலும் மோசமடையும். இந்த மின்னணு கழிவுகளில் மறைந்துள்ள வளத்தை அனைவரும் கவனிக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in