

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் இணையமயமாகி விட்டது. வங்கியில் உள்ள பணத்தை எடுக்காமலே செலவு செய்யும் வசதி தொடங்கி பலவற்றை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில் 'கிளவுட் ஸ்டோரேஜ்' என்ற சொற்கூற்றை பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். இணையத்தின் துணை கொண்டு இந்த ஸ்டோரேஜில் பயனர்கள் தங்களிடம் உள்ள டேட்டாக்களை அப்லோட் மற்றும் அக்செஸ் செய்யலாம். இந்த ஸ்டோரேஜ் டிவைஸ்களின் பரிணாம வளர்ச்சி குறித்து விரிவாகப் பார்ப்போம்.
டிஜிட்டல் கணினிக்கான புரோக்ராமை உலகிற்கு அறிமுகம் செய்தவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த சார்லஸ் பாபேஜ். படிப்படியாக அது பல்வேறு மாற்றங்களை கண்டு இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இன்று அந்த கணினி சூப்பர் கம்யூட்டராக உருவெடுத்துள்ளது. இந்த கணினியின் வளர்ச்சி தகவல் சேமிப்பை அவசியமாக்கியது.
1950-களில் தரவு மற்றும் புரோகிராம் சேமிப்புக்கு தேவைப்படும் ஸ்டோரேஜ் டிவைஸ்களின் திறன் வெறும் கிலோபைட் என்ற எண்ணிக்கையில்தான் இருந்துள்ளது. நாளடைவில் ஸ்டோரேஜ் டிவைஸ்களின் திறன் கூடியது. இப்போது ஸ்டோரேஜ் டிவைஸ்களின் திறன் டெராபைட் என்ற எண்ணிக்கையில் கூடியுள்ளது. வரும் நாட்களில் பெட்டா, எக்ஸா, ஸெட்டா, யோட்டா என பைட்களின் நிலை மாற உள்ளதாக தெரிகிறது.
பன்ச் கார்டு முதல் கிளவுட் வரை
18-ஆம் நூற்றாண்டின் மையத்தில் தரவு சேமிப்பு பணிகளுக்கு பன்ச் கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பன்ச் கார்டில் 80 பைட்டுகள் அளவுள்ள தகவல்களைதான் சேமிக்க முடிந்துள்ளது. அதனால் அப்போது பல பன்ச் கார்டுகளை பயன்படுத்தி டேட்டா சேமிக்கப்பட்டுள்ளது. தானியங்கு கார் பார்க்கிங் சிஸ்டங்களுக்கு இந்த பன்ச் கார்டுகள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேக்னெட்டிக் டேப்: ஒலி கோர்வையை சேமிப்பது முதல் டேட்டா புராசஸ் செய்வது வரையில் பல்வேறு பணிகளுக்கு இந்த மேக்னெட்டிக் டேப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ரிப்பன் மற்றும் காந்தத்தை கொண்டு இந்த டேப்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ஆயுட்காலம் 30 ஆண்டுகள் வரை என்பதால் பெரும்பாலானோர் இதனை பயன்படுத்தி உள்ளனர். இது முதல் ஸ்டோரேஜ் மீடியா என்றும் சொல்லப்படுகிறது.
ஹார்ட் டிஸ்க் ஸ்டேக்ஸ்: 1970-களில் எக்ஸ்சேஞ்சபள் (Exchangeable) ஹார்ட் டிஸ்க் ஸ்டேக்குகள் பன்ச் கார்டு மற்றும் மேக்னெட்டிக் டேப்பிற்கு மாற்றாக வந்துள்ளது. இருந்தாலும் இதன் விலை காரணமாக நிறுவன ரீதியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டிரைவ்கள் வாஷிங் மெஷின் போல மிகவும் பெரிதாக இருக்கும் என தெரிகிறது.
டேட்டாசெட்: மலிவு விலையிலான காம்பேக்ட் கேசெட்களில் டிஜிட்டல் டேட்டாக்களை ரெக்கார்டு செய்யவும், அதனை பிளே செய்யவும் Grundig CR100a டேட்டா ரெக்கார்டர் சாதனத்தை Commodore நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இருந்தாலும் இதனை சார்ஜ் செய்யவும், டேட்டாவை அக்செஸ் செய்யவும் நீண்ட நேரம் பிடித்துள்ளது. அதனால் மாற்று முறை ஒன்றை பயனர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
டிஸ்கெட்ஸ்: 1969 வாக்கில் முதல் டிஸ்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது இதன் அளவு 8 இன்ச்களாக இருந்துள்ளது. இதனை 90-களின் தொடக்கத்தில் பிறந்த தலைமுறையினர் வரை பயன்படுத்தி இருக்கலாம். இதனை Floppy டிஸ்க் என்றும் சொல்வார்கள். கால ஓட்டத்தில் அதன் அளவு குறைந்து வந்துள்ளது. 8 இன்ச்சில் இருந்து 3.5 இன்ச்சாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் டேட்டாக்களை சேமிக்கும் திறன் கூடியுள்ளது. 3.5 இன்ச் டிஸ்கில் 1.4 மெகாபைட் தரவுகளை சேமிக்கலாம்.
காம்பெக்ட் டிஸ்க்: பின்னாளில் காம்பெக்ட் டிஸ்க் (CD) வரவு ஸ்டோரேஜ் வசதிகளை எளிமையாக்கியது. அதிலும் ரீட் ஒன்லி, ரீ ரைட் போன்ற வசதியில் தரவுகளை சேமிக்கும் பணியை சுலபமாக்கியது. தொடர்ந்து டிவிடி, ப்ளூ-ரே தொழில்நுட்பம் போன்றவை ஸ்டோரேஜ் தளத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
ஹார்ட் டிரைவ்: ஹார்ட் டிரைவ் குறித்து அனைவரும் அறிந்திருப்போம். 20 மெகாபைட்டில் தொடங்கி இன்று 18 டெராபைட் வரையில் இதில் தரவுகளை சேமிக்கும் அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது. இப்போதுள்ள ஹார்ட் டிரைவின் அளவு வெறும் 2.5 இன்ச் தான்.
ஃபிளாஷ் மெமரி - போர்ட்டபிள் மெமரி: இன்று பெரும்பாலான மக்கள் பரவலாக பயன்படுத்தி வருவது ஃபிளாஷ் மெமரியை தான். இதன் அளவு, ஸ்டோரேஜ் திறன் மற்றும் அக்செஸ் டைம் என அனைத்தும் பயனர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மல்டிமீடியா கார்ட்ஸ் மற்றும் செக்யூர் டிஜிட்டல் கார்ட்ஸ் (எஸ்டி) கடந்த 2000-மாவது ஆண்டு முதல் வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது நாம் பயன்படுத்தும் மெமரி கார்டுகள் தான்.
கிளவுட் ஸ்டோரேஜ்: இந்த ஸ்டோரேஜ் முறையில் பயனர்களுக்கு தாங்கள் சேமிக்கும் (Save/Store) தரவுகள் எங்கு, எப்படி சேமிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் எதுவும் தெரியாது. இங்கு அனைத்தும் இணையம் மூலம் மட்டுமே இயங்குகிறது. டேட்டா சேவிங் கேரியர்கள் எதுவும் இல்லாமலே இதில் தரவுகளை ஸ்டோர் செய்யலாம். என்ன டிஜிட்டல் சாதனம் ஒன்று தேவைப்படுகிறது. அது கணினியோ அல்லது மொபைல் போனாக கூட இருக்கலாம்.
கிளவுட் சர்வர்களின் ஊடாக பயனர்கள் தங்களது தரவுகளை சேமிக்கின்றனர். ஸ்மார்ட்போன்களில் கூட கிளவுட் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதனை பயன்படுத்த பயனர்கள் தங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை செய்து விட்டால் உலகில் எங்கு இருந்தாலும் இணைய உதவியோடு டேட்டாவை அப்லோட் செய்யவும், அக்செஸ் செய்யவும் முடியும். இலவசமாக ஜிகாபைட்களில் கிளவுடில் தரவுகளை சேமித்துக் கொள்ளலாம்.
தகவல் உறுதுணை: கூகுள் ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர்