Last Updated : 06 May, 2016 01:15 PM

 

Published : 06 May 2016 01:15 PM
Last Updated : 06 May 2016 01:15 PM

தீராத பிட்காயின் நிறுவனர் மர்மம்!

பிட்காயின் நிறுவனர் யார்? இந்தக் கேள்விக்கான பதில் சடோஷி நாகமோட்டோ என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் சடோஷி யார் எனும் கேள்விக்கான பதில்தான் ஒருவருக்கும் தெரியாது.

விடை தெரியாதப் புதிராகவே இந்தக் கேள்வி நீடிக்கிறது. பிட்காயின் பற்றி அறிந்தவர்கள் அனைவரும், இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள ஆர்வமுடன் இருந்தாலும், பிட்காயின் நிறுவனர் யார் என்பது மாபெரும் மர்மமாகவே நீடிக்கிறது.

இந்தக் கேள்விக்கான பதிலாக ஆஸ்திரேலிய தொழில்முனைவோர் கிரேக் ரைட் என்பவர் நான்தான் சடோஷி என்று அறிவித்து, அதற்கான ஆதாரங்களைச் சமர்பித்துள்ள நிலையிலும்கூட இந்த மர்மம் இன்னமும் தொடர்வதுதான் பிட்காயின் நிறுவனர் புதிரை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.

பிட்காயின் என்பது...

இணைய உலகில் புழங்குபவர்கள் பிட்காயின் பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கலாம். கிரிப்டோ கரன்ஸி, டிஜிட்டல் நாணயம், இணையப் பணம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் பிட்காயின், தொழில்நுட்பப் பிரியர்களால் புதுயுக நாணயம் என்றும் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

டிஜிட்டல் வடிவிலான பிட்காயின் முற்றிலும் அரூப வடிவிலானது. அது கம்ப்யூட்டர் குறியீடுகளாக மட்டுமே இருக்கிறது. எந்த ஒரு மத்திய வங்கியாலும் வெளியிடப்படாமல், முற்றிலும் இணையச் சமூகத்தால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் நாணயமாக பிட்காயின் விளங்குகிறது.

பிட்காயினில் பரிவர்த்தனை செய்யலாம். பொருட்களை வாங்கலாம். ஆனால் மற்ற நாணயம் போல பிட்காயினைப் பெறுவது அத்தனை எளிதல்ல.

பிட்காயின் வெளியிடப்படாதது என்பதால் அதை கம்ப்யூட்டர் வலைப்பின்னல் மூலம் அகழ்ந்தெடுக்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு முறையும் ஒரு தொழில்நுட்பப் புதிரை விடுவிக்க வேண்டும். ஒவ்வொரு முறையில் பிட்காயின் வலைப்பின்னலில் புதிதாக நாணயம் இணைவதோடு, அதற்கு உதவி செய்யும் வகையில் தனது கம்ப்யூட்டர் ஆற்றலைப் பகிர்ந்தவருக்கு பிட்காயின்கள் கிடைக்கும்.

பிட்காயினைப் பெற வேண்டும் என்றால் பிட்காயின் முகவரி இருக்க வேண்டும். 27-34 எழுத்து+எண்கள் கொண்ட இந்த முகவரியைச் சேமித்து வைக்க பிட்காயின் பர்ஸ் இருக்க வேண்டும்.

பலமான பாதுகாப்பு

பிட்காயின் பரிவர்த்த‌னை ரகசியமானது. ஆனால் அந்தப் பரிவர்த்தனையின் டிஜிட்டல் சுவடு முழுவதும் சேமிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு முறை பரிவர்த்தனை செய்யும் போதும் டிஜிட்டல் கையெழுத்திட வேண்டும்.

நிதி அமைப்புகள் தலையீடு இல்லாததால் முற்றிலும் சுயேட்சையானது மற்றும் டிஜிட்டல் வடிவிலானது என்பதால் தொழில்நுட்பப் பிரியர்கள் முதல் சைபர் குற்றவாளிகள் வரை பலரது கவனத்தை ஈர்த்துள்ள பிட்காயின் அன்மைக் காலங்களில் வங்கியாளர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அதன் உள்ளார்ந்த அம்சமாக இருக்கும் 'பிளாக்செயின்' எனப்படும் தொழில்நுட்பம் இணையப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆற்றல் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். எனவேதான் வங்கித்துறையில் இருப்பவர்கள் பிட்காயினை இயக்கும் தொழில்நுட்பத்தை மற்ற பரிவர்த்தனையின் அடிப்படையாகக் கொள்ள முடியுமா எனப் பரிசீலிக்கத் தொட‌ங்கியுள்ளனர்.

பிட்காயினின் செயல்பாடு கொஞ்சம் புதிரானதுதான். அதைவிடப் புதிரானது அதன் தோற்றம் பற்றிய கேள்விக்கான பதில்!

பிட்காயின் தோற்றம்

பிட்காயின் 2009ல் அறிமுகமானது. ஆனால் பிட்காயின் நிறுவனர் என்று யாரும் முன்னிறுத்தப்படவில்லை. சடோஷி நாகமோட்டோ எனும் தனி மனிதர் அல்லது அந்த பெயர் பின்னே உள்ள குழுவால் இந்த நாணய முறை அறிமுகம் செய்யப்பட்டதாகக் கருதப்பட்டது. தொட‌க்கத்தில் தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட ஒரு சிலர் மத்தியில் மட்டுமே புழக்கத்தில் இருந்ததால், இதன் நிறுவனர் பற்றி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. நாளடைவில் பிட்காயின் புதுமை மற்றும் அதன் செயல்பாடுகள் கவனத்தை ஈர்த்துப் பிரபலமானது.

பிட்காயின் செல்வாக்கு வளர்ந்து கொண்டே வந்த நிலையில், அதன் நிறுவனர் பற்றிய மர்மமும் வளர்ந்து கொண்டே வந்தது. மைய அமைப்பு இல்லாத பிட்காயினை உருவாக்கியவரின் பெயர் தவிர வேறு விவரங்கள் தெரியாமல் இருப்பது எத்தகைய ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை. ஆக, எதிர்பார்க்கக் கூடியது போலவே இணைய உலகில் பிட்காயின் நிறுவனர் தேடலும் தொட‌ங்கியது.

பிட்காயின் நிறுவனர் யார் எனும் கேள்விக்கு விடை காணும் தேடுதல் வேட்டையில் பல பத்திரிகையாளர்கள் ஈடுபட்டனர். 2014ம் ஆண்டில் டோரியன் சடோஷி என்பவர் பிட்காயின் நிறுவனர் சடோஷியாகக் கண்டறியப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சடோஷியாக அடையாளம் காணப்பட்ட நபர், நானில்லை சடோஷி என அலறி அடித்து ஓடியது இந்த விவகாரத்தின் மர்மத்தை மேலும் ஆழமாக்கியது.

நிறுவனர் யார்?

நிஜமான நிறுவனரே நேரில் வந்து நின்றாலும், அவர்தான் சடோஷி என்று உறுதி செய்து கொள்வது கடினம் என்னும் நிலை உருவானது. இப்போது இதுதான் நடந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முனைவோரான கிரேக் ரைட் என்பவர், 'உலகத்தாரே நம்புங்கள், நான்தான் சடோஷி' என அறிவித்துள்ளார். அதை நிருபிக்கும் வகையில் முதல் பிட்காயின் பரிவர்த்தனையைச் செயல்படுத்த தான் பயன்படுத்திய பிட்காயின் சாவியை இயக்கிக் காண்பித்திருக்கிறார்.

பி.பி.சி. உள்ளிட்ட சில செய்தி நிறுவனங்களிடம் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டு ஆதாரத்தை அளித்தவர், ”இதன் (பிட்காயின்) முக்கிய அங்கமாக நான் இருந்தேன். ஆனால் மற்றவர்களும் உதவினர்” என்று கூறியுள்ளார்.

பிட்காயின் அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானியான கெவின் ஆண்டர்சன், கிரேக் ரைட்தான் பிட்காயின் நிறுவனர் என்பதை நம்பலாம் எனக் கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு இறுதியில் பிரபல தொழில்நுட்பப் பத்திரிகையான 'வயர்ட்', ரகசிய புலணாய்வு செய்து ஆஸ்திரேலியாவின் கிரேக் ரைட்தான் சடோஷி என விரிவான கட்டுரை வெளியிட்டது. பிட்காயின் உருவாக்கம் தொடர்பாக ரைட்டிடம் இருந்து திருடப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தச் செய்தி வெளியானது. 'கிஸ்மடோ' தொழில்நுட்ப இதழிலும் இது வெளியானது.

இதனிடையே பிட்காயின் பணத்தைக் கொண்டு தங்கக் கட்டிகளை ரைட் வாங்க முற்பட்டதாகவும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் ஏற்பட்டப் பிரச்சனையால் நீதிமன்றத்தை அவர் நாடியிருப்பதாகவும் கூறப்பட்டது. ரைட்தான் பிட்காயின் நிறுவனர் என உணர்த்தும் ஆதாரங்களாக இவை கருதப்படும் நிலையில், அவரே ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் பறந்து வந்து உண்மையை(!) முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இருப்பினும் பிட்காயின் சமூகத்தைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள், இது குறித்துச் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெளிவான ஆதாரங்கள் தேவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சைபர் பாதுகாப்பு வல்லுந‌ரான டான் கமின்ஸ்கி என்பவர், பிட்காயின் சாவிகளை மட்டும் வைத்து எதையும் நம்பி விட முடியாது என்று கூறியுள்ளார்.

ஆக, பிட்காயின் நிறுவனர் தானே என்று கிரேக் ரைட் ஒப்புக்கொண்டாலும் அவர்தான் சடோஷியா எனும் கேள்வி நீடிக்கிறது. இந்தக் கேள்விக்கான பதில் எப்போது கிடைக்கும் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x