Published : 26 May 2022 05:59 AM
Last Updated : 26 May 2022 05:59 AM

இனி டிஜிலாக்கர் சேவையை வாட்ஸ் அப்பிலும் பெறலாம்

புதுடெல்லி: ஆவணங்களை சேமித்து வைக்கும் டிஜிலாக்கர் சேவை இனி வாட்ஸ்அப் மூலமும் பெறலாம்.

கடந்த 2020 மார்ச் மாதம் வாட்ஸ் அப்பில் MyGov Helpdesk உருவாக்கப்பட்டது. கரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு, தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கான வசதியை அது வழங்கியது. இந்நிலையில் தற்போது டிஜிலாக்கர் வசதியையும் MyGov ஹெல்ப் டெஸ்க் வழங்குகிறது.

9013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலமாக Hi அல்லது Namaste அல்லது Digilocker என்று அனுப்ப வேண்டும். இதையடுத்து டிஜிலாக்கர் தளத்தைப் பயன்படுத்துவதற்கான இணைப்பு அனுப்பப்படும்.

இதன் மூலம் ஆதார் அட்டை, பான் அட்டை, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், இரு சக்கர வாகனங்களுக்கான வாகனக் காப்பீடு, காப்பீட்டு ஆவணம் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் வடிவில் பெற முடியும்.

இதுகுறித்து MyGov தலைமை நிர்வாக அதிகாரி அபிசேக் சிங் கூறுகையில், “10 கோடி மக்கள் டிஜிலாக்கர் தளத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். இதுவரையில் 500 கோடிக்கு மேலாக ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. டிஜிலாக்கர் சேவையை இனி வாட்ஸ்அப் மூலமும் பெற முடியும். இதனால், பல கோடி மக்கள் தங்கள் ஆவணங்களின் டிஜிட்டல் வடிவத்தை எளிதாகப் பெற முடியும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x