Published : 22 May 2022 08:30 AM
Last Updated : 22 May 2022 08:30 AM

ரேசர்பே நிறுவனத்தில் ரூ.7.3 கோடி திருட்டு - பெங்களூரு சைபர் கிரைம் போலீஸில் புகார்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள முன்னணி பேமெண்ட் நிறுவனமான ரேசர்பே நிறுவனத்தில் ஹேக்கர்கள் ரூ.7.3 கோடி திருட்டை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் அனைத்து தளத்திலும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பேமெண்ட் நிறுவனங்களில் ஒன்றான ரேசர்பே நிறுவனத்தில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. ரேசர்பே நிறுவனத்தின் மென்பொருள் அங்கீகார செயல்முறையை ஹேக்கிங் செய்து ரூ. 7.38 கோடி ரூபாயை திருடியுள்ளனர் என்று அந்நிறுவனம் சார்பில் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

கடந்த 16-ம் தேதி பெங்களூருவில் உள்ள தென்கிழக்கு சைபர் கிரைம் பிரிவில் ரேசர்பே சட்ட சர்ச்சைகள், சட்ட அமலாக்கப் பிரிவு தலைவர் அபிஷேக் அபினவ் ஆனந்த் இந்தப் புகாரை அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறும்போது, “எங்கள் நிறுவனத்தில் கடந்த நிதியாண்டுக்கான தணிக்கை அண்மையில் நடைபெற்றது. அப்போது ரூ.7.3 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த குறிப்பிட்ட ரூ.7.3 கோடி பரிவர்த்தனைகளுக்கான பில்களை எங்களால் பெற முடியவில்லை. அதற்குரிய பில்களை எங்கள் தணிக்கையாளர்கள் தேடியபோது நடந்த தவறும், மோசடியும் எங்களுக்குத் தெரியவந்தது. நிறுவன மென்பொருளைப் பயன்படுத்தி நடந்த அந்த 831 பரிவர்த்தனைகளுக்கு எதிராக ரூ.7.38 கோடி அளவிலான தொகைக்கு நிறுவனத்தால் கணக்குகாட்ட முடியவில்லை. அதாவது நிறுவன மென்பொருள் அங்கீகார செயல்முறையை ஹேக்கிங் செய்து பணம் திருடப்பட்டுள்ளது.

16 தனிப்பட்ட வணிகர்களுக்கு எதிராக இந்த ஆண்டு மார்ச் 6 முதல் மே 13 வரையிலான காலகட்டத்தில் ரூ.7,38,36,192 வரையிலான தொகை 831 தோல்வி அடைந்த பரிவர்த்தனைகள் மூலம் மோசடி நடந்துள்ளது

831 பரிவர்த்தனைகளும் தோல்வி அடைந்த பண பரிமாற்றங்களாகும். எனவே இதை ஹேக்கர்கள் மற்றும் மோசடி வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்து பண பரிமாற்றத்தை ஒப்புதல் அளித்து பணத்தை திருடியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

அதிக அளவு பாதுகாப்பு உத்தரவாதத்துடன் நடத்தப்பட்டு வரும் ரேசர்பே நிறுவனத்தில் இந்த திருட்டு நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து நிறுவன சாப்ட்வேரில் ஹேக்கிங் செய்த ஹேக்கர்களை பெங்களூரு சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x