

புதுச்சேரி: இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் அடுத்த முறை மின்னணு முறையில் (E-Census) நடத்தப்படும் என்ற அறிவிப்பை அண்மையில் அறிவித்திருந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த கணக்கெடுப்பு முறை எப்படி சாத்தியமாகும் என்பதை பார்க்கலாம்.
இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றிருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அந்த பயணத்தின் போது நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், 'நாட்டின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மின்னணு முறையில் நடத்தப்படும். இதில் சவால்கள் நிறைய உள்ளன.இருந்தாலும் சாதகங்களும் உள்ளன. சுமார் 50 சதவீத மக்கள் தங்களது விவரங்களை தாங்களாகவே பதிவு செய்யும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். பொருளாதாரம் தொடங்கி அனைத்திற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானதாகும்' என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த முறையின் கீழ் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது எப்போது? உலக அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிடியிலிருந்த காலத்தில் ஆரம்பமானது மக்கள் தொகை கணக்கெடுப்பு. கடந்த 1872-இல் இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை என எட்டு முறை இந்தியாவில் பிரிட்டிஷ் நாட்டினர் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவுக்கு விடுதலை கொடுக்கும் வரையில் அவர்கள் இந்த கணக்கெடுப்பை தவறாமல் மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது.
விடுதலைக்கு பின்னர் 1948 - இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் படி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1951 வாக்கில் சுதந்திர இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை என கடந்த 2011 வரையில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடந்துள்ளது. 2021 கணக்கெடுப்பு பணிகள் கரோனா தொற்று காரணமாக தள்ளிப்போனது. இதற்காக பட்ஜெட் கூட ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.
மின்னணு மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படும்? இந்த இ-சென்சஸ் கணக்கெடுப்பு முறை எப்போது? எப்படி? நடத்தப்படும் என்ற விவரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கவில்லை. இருந்தாலும் அவர் சொல்லியுள்ளதை வைத்து பார்க்கும் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக பிரத்யேக மென்பொருள் ஒன்று வடிவமைக்கப்படும் என தெரிகிறது. அதில் இந்த பணியின் போது சேகரிக்கப்படும் அனைத்து தரவுகளும் உள்ளடங்கி இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், மொபைல் அப்ளிகேஷன் ஒன்றும் இதற்கென உருவாக்கப்படலாம். அதன் மூலம் மக்கள் அவரவர் இருந்த இடத்தில் இருந்து கொண்டு தங்கள் தரவுகளை கொடுக்கலாம் என தெரிகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ஆய்வு முடிவுகளின் படி பார்த்தால் இந்தியாவில் சுமார் 750 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் மக்கள் பங்கேற்கும் கணக்கெடுப்பு மட்டுமல்லாது தரவுகளை சேகரிப்பதற்காக கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு செல்வதும் தொடரும் என தெரிகிறது. இருந்தாலும் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடு விவரங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு தளத்துடன் இணைக்கப்படும் (லிங்க்) என சொல்லப்பட்டுள்ளது. அப்படி நடந்தால் தானியங்கு முறையில் அந்த தளம் இயங்கும் எனவும் தெரிகிறது.