

கலிபோர்னியா: ஐபாட் சாதனத்தின் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இது இசை பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை கொடுக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஆப்பிள் நிறுவனம். ஐபோன், ஐபேட், ஐபாட், ஏர்பாட், ஹெட்போன், வாட்ச் போன்றவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. உலக அளவில் இந்நிறுவன தயாரிப்புகளுக்கு என தனி வரவேற்பு இருப்பது வழக்கம். அந்த அளவுக்கு இதன் தரமும், செயல்பாடும் இருப்பதுதான் அதற்கு காரணம். ஸ்டீவ் ஜாப்ஸ், ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இருபதாம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில் (1976) ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினர். முதலில் கம்யூட்டரை வடிவமைத்தார்கள். படிப்படியாக ஆப்பிள் நிறுவனம் பல்வேறு டிஜிட்டல் டிவைஸ்களை அறிமுகம் செய்தது.
ஐபாட்: உலகில் திரும்புகிற பக்கமெல்லாம் இசை நிறைந்திருக்கிறது. இருந்தாலும் மக்கள் தங்களுக்கு பிடித்த இசையை கேட்க பல்வேறு சாதனங்கள் உதவி வந்தன. ஆடியோ கேசட், சிடி (காம்பெக்ட் டிஸ்க்) போன்றவற்றின் துணை கொண்டு வாக்-மேன் மூலம் பாடல் கேட்டு ரசித்தவர்கள் பலர். கால ஓட்டத்தில் அது அப்படியே டிஜிட்டல் வடிவிற்கு மாறியது. அந்த மாற்றத்திற்கு பிரதான காரணமாக அமைந்தது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட். இன்றைய உலகிற்கு ஏற்ற வகையில் போகிற போக்கில் பாடல்களை கேட்டு ரசிக்க ஐபாட் எனும் கையடக்க கருவி உதவியது.
ஐபாடை வடிவமைக்க பல பொறியாளர்கள் ஒன்றிணைந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். சுமார் 8 மாத உழைப்புக்கு பிறகு ஐபாட் சாதனத்தின் மாதிரியை (Prototype) ஸ்டீவ் ஜாப்ஸ் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதனை வாங்கிய அவர், பொறியாளர்கள் முன்னிலையில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியில் போட்டுள்ளார். உடனடியாக அந்த மாதிரி வடிவ கருவியில் இருந்து பபூள் வந்துள்ளது. அதன் ஹவுஸிங்கில் எங்கோ கொஞ்சம் இடம் இருப்பது அதற்கு காரணம் என ஸ்டீவ் சொல்லியுள்ளார். அதனால் அதனை சேமிக்கும் படியும் சொல்லியுள்ளார் அவர். இப்படியாக பல சோதனைகளை கடந்து ஐபாட் இறுதி வடிவம் பெற்றது.
>2001 வாக்கில் ஐபாட் கிளாசிக் முதல் தலைமுறை (First Generation) அறிமுகம் செய்யப்பட்டது. அதில் 1000 பாடல்களை சேமிக்கும் வசதி இருந்தது. உள்ளங்கையில் அடங்கும் அதன் வடிவமைப்பு, செயல்திறன் போன்றவற்றால் உலக மக்களிடையே அமோக ஆதரவை பெற்றது.
>தொடர்ந்து ஐபாட் கிளாசிக் ஆறாம் தலைமுறை வரை அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு முறையும் அதன் ஸ்டோரேஜ் திறனை அதிகரித்துக் கொண்டே வந்தது ஆப்பிள்.
>2004 வாக்கில் ஐபாட் மினி அறிமுகம் செய்யப்பட்டது. அப்படியே நானோ, Shuffle, டச் என வெவ்வேறு மாடல் ஐபாடுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் நானோ மற்றும் டச் மாடல்கள் ஏழாம் தலைமுறை வரை அப்டேட் கண்டிருந்தது. கடைசியாக கடந்த 2019-இல் டச் மாடலின் ஏழாம் தலைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது சந்தையில் அந்த மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.
>முதலில் பாடலுக்காக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட ஐபாட், பயனர்களின் தேவைக்கு ஏற்ப அப்படியே பல்வேறு மாற்றங்களை கண்டதும் குறிப்பிடத்தக்கது.
>2005 முதல் 2007 வரையில் விற்பனையில் நிலையான வளர்ச்சியை கண்டது ஐபாட். 2008-இல் விற்பனையில் உச்சத்தை எட்டியது. ஆண்டுதோறும் பல மில்லியன் கணக்கில் ஐபாட் டிவைஸ்கள் விற்று தீர்ந்தது.
>இந்நிலையில் தான் ஐபாட் உற்பத்தியை நிறுத்துவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. சந்தையில் தற்போது கிடைக்கும் டச் மாடல் ஐபாட் இருப்பில் (Stock) இருக்கும் வரை விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 19 ஆயிரம் ரூபாய் முதல் ஆரம்பமாகிறது இதன் விலை.
பாடல்கள் கேட்க ஐபாட்கள் இல்லையென்றாலும் அவரவர் கைபேசியில் உள்ள பாடல்களுக்கான அப்ளிகேஷன்கள் ஐபாட் இல்லாத குறையை போக்கும் என நம்புவோம்.