Published : 05 May 2022 05:13 PM
Last Updated : 05 May 2022 05:13 PM

ட்விட்டர் சர்க்கிள் | குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ட்வீட்களை பகிரும் புதிய அம்சம்

சான் பிரான்சிஸ்கோ: பயனர்கள் தங்களது ட்வீட்களை குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே பகிரும் 'ட்விட்டர் சர்க்கிள்' என்ற புதிய அம்சத்தை சோதித்து வருகிறது சமூக வலைதளமான ட்விட்டர் தளம்.

உலகம் முழுவதும் சுமார் 76.9 மில்லியன் பயனர்கள் மைக்ரோ பிளாகிங் தளமான ட்விட்டர் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களுக்காக புதுப்புது அம்சங்களை ட்விட்டர் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிலையில், 'ட்விட்டர் சர்க்கிள்' என்ற புதிய அம்சத்தை ட்விட்டர் நிறுவனம் சோதித்து வருவதாக தெரிகிறது. ட்விட்டரை எலான் மஸ்க் வாங்க உள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள 'Close Friends' அம்சம் போலவே இருப்பதாக தெரிவித்துள்ளனர் தொழில்நுட்ப வல்லுநர்கள். இது குறித்து ட்விட்டர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

''சில ட்வீட்கள் எல்லோருக்குமானதாக இருக்கும். சில ட்வீட்கள் குறிப்பிட்ட சிலருக்கானதாக மட்டுமே இருக்கும். நாங்கள் இப்போது 'ட்விட்டர் சர்க்கிள்' அம்சத்தை சோதித்து வருகிறோம். இதன் மூலம் அதிகபட்சம் 150 பேர் வரை மட்டுமே நீங்கள் பகிரும் ட்வீட்களை பார்க்க முடியும். அந்த ட்வீட்களை யார் யார் பார்க்க வேண்டும் என்பதை பயனர்களே தேர்வு செய்து கொள்ளலாம். அப்படி தேர்வு செய்து பகிரப்படும் ட்வீட்களை அந்த வட்டத்திற்குள் இருப்பவர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

அதேபோல இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் பகிர்ந்த ட்வீட்டுக்ககான வட்டத்தில் இடம்பெற்றுள்ளவர்களை எடிட் செய்யும் ஆப்ஷன் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அப்படி எடிட் செய்யும் போது அது குறித்த தகவல் எதுவும் அந்த பயனருக்கு நோட்டிபிகேஷனாக செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் குறித்து ட்விட்டர் பயனர்கள் கலவையான கருத்துகளை பகிர்ந்து உள்ளதையும் பார்க்க முடிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x