

இப்போதெல்லாம் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் சார்பில் தயாரித்து, சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரும் போன்களின் பாக்ஸ்களில் சார்ஜர்கள் வைப்பதில்லை. அதற்கான காரணம் என்ன என்பதை சற்றே விரிவாகப் பார்க்கலாம்.
பெரும்பாலான உலக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் சாதனங்களில் ஒன்றாக அமைந்துள்ளன ஸ்மார்ட்போன்கள். 'கைப்பேசியின் தந்தை' என போற்றப்படும் அமெரிக்க பொறியாளர் மார்ட்டின் கூப்பர், வயர்லெஸ் கம்யூனிகேஷன் மேற்கொள்ள வேண்டுமென்ற நோக்கில் தனது குழுவுடன் இணைந்து செல்போனை உருவாக்கினார். பின்னாளில் அது பரிணாம வளர்ச்சி பெற்று இன்று ஸ்மார்ட்போனாக மக்களின் அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் சில அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
ஆப்பிள், சாம்சங், ஜியோமி, விவோ, ஒப்போ, ரியல்மி, ரெட்மி, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள் உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையை மேற்கொள்ளும் முன்னணி நிறுவனங்களாக உள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தை தங்கள் புதிய போன்களில் கொண்டு வருகின்றன. இதனால், எந்த போனை வாங்குவது என்ற குழப்பம் கூட ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வரலாம். இருந்தாலும் இந்நிறுவனங்களில் சில தங்கள் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் புத்தம் புதிய போன்களில் சார்ஜர்களை வைப்பதில்லை. அதனால், இப்போதெல்லாம் போன் வாங்கும் பயனர்கள் கூடுதலாக சார்ஜர்களுக்கும் தனியே செலவு செய்ய வேண்டியுள்ளது.
முதன் முதலில் களம் இறங்கிய ஆப்பிள்!
அமெரிக்க டிஜிட்டல் சாதன உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம்தான் சார்ஜர்களை (பவர் அடாப்டர்) தங்களுடைய புதிய போனின் பாக்ஸ்களில் இருந்து நீக்கும் ஐடியாவை முதன்முதலில் கொண்டு வந்தது எனச் சொல்லலாம். கடந்த 2020 வாக்கில் இந்த ஐடியாவை அமல்படுத்தியது ஆப்பிள். அப்போது சர்வதேச சந்தையில் போன்களை விற்பனை செய்து வரும் மற்ற நிறுவனங்கள் ஆப்பிளை ஏளனம் செய்தன. இருந்தாலும் தனது முடிவில் ஆப்பிள் உறுதியாக இருந்தது.
இந்த பவர் அடாப்டர்களை கொண்டுதான் யூஎஸ்பி கேபிள் துணை கொண்டு போன்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். அதை தான் புதிதாக விற்பனை செய்யப்படும் போன்களில் இருந்து நீக்கியது ஆப்பிள். அதே நேரத்தில் இயர் போன் கொடுப்பதையும் தவிர்த்தது. இந்த அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டது ஆப்பிள். சுற்றுச்சூழல், மின் கழிவுகள் (E-Waste) மாதிரியானவற்றை இதற்குக் காரணம் எனவும் அந்நிறுவனம் தனது விளக்கத்தில் சொல்லியிருந்தது.
கால ஓட்டத்தில் ஆப்பிளை ஏளனம் செய்த நிறுவனங்கள் ஆப்பிளின் வழியை பின்பற்ற தொடங்கின. சாம்சங், ரியல்மி மாதிரியான நிறுவனங்கள் இப்போது சார்ஜர்கள் இல்லாமல் போனை சந்தைக்கு கொண்டு வந்துள்ளன. இதனால் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு வணிக ரீதியாக லாபமும் கிடைத்துள்ளது. புதிய போன்களில் சார்ஜர் இல்லாத காரணத்தால் பாக்ஸ்களின் அளவு குறைந்தது. அதனால் சுலபமாக அதிக அளவிலான போன்களை ஒரே நேரத்தில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நிறுவனங்கள் கொண்டு செல்லவும் முடிகிறது.
ஒரே கல்லில் ரெண்டு ஆப்பிள்!
ஆப்பிள் நிறுவனம் இயர் போன் மற்றும் பவர் அடாப்டர்களை கடந்த 2020-ல் இருந்து நீக்கிய காரணத்தால் ஐபோன்களுக்கான உற்பத்தி செலவு கொஞ்சம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் இயர் போன் மற்றும் பவர் அடாப்டர்களை அப்போதிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு தனியாக விற்பனை செய்வதன் மூலம் லாபமும் கிடைத்துள்ளது. இந்த இரண்டையும் கூட்டிக் கழித்து பார்த்தால் சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு வருமானமாக கிடைத்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் தெரிவிக்கப்பட்டது. இதேபோல வரும் நாட்களில் அனைத்து ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களும் லாபத்தை ஈட்ட முயற்சிக்கலாம்.
மோசடி & சட்டவிரோதம் - ஆப்பிளை கண்டித்த நீதிமன்றம்
பிரேசில் நாட்டில் புதிய ஆப்பிள் ஐபோனை வாங்கிய நபர் ஒருவர், அதில் சார்ஜர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதோடு அவர் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆப்பிளின் செயலை மோசடி மற்றும் சட்டவிரோதம் என கண்டித்துள்ளார்.
சுற்றுச்சூழலை காக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆப்பிள் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஏன் தனியாக சார்ஜரை விற்பனை செய்ய வேண்டும். சார்ஜரை நீங்கள் உற்பத்தி செய்துகொண்டு தானே உள்ளீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சார்ஜ்ர் இல்லாதது உள்நாட்டு நுகர்வோர் சட்ட விதிகளுக்கு எதிரானது. போனை சார்ஜ் செய்ய சார்ஜர் அவசியம். அது இல்லாமல் விற்பனை செய்தது தவறு. அதனால் மனுதாரருக்கு 1080 அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், பிரேசில் நாட்டில் ஐபோன் விற்பனையில் புதிய சிக்கலை ஆப்பிள் எதிர்கொண்டுள்ளதாக தெரிகிறது. வரும் நாட்களில் அந்நாட்டில் ஐபோன் பயனர்கள் இதே காரணத்தை சொல்லி வழக்கு தொடர்ந்தால் அவர்களுக்கும் ஆப்பிள் இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும். இல்லையென்றால், போனுடன் சார்ஜர் வழங்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
வரும் நாட்களில் இதேபோல அனைத்து நாடுகளிலும் போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சிக்கல் வந்தால் மீண்டும் புதிதாக விற்பனை செய்யப்படும் போன் பாக்ஸ்களில் பழையபடி சார்ஜர் இடம்பெறலாம். அப்படி நடக்கவில்லை என்றால், ஸ்மார்ட்போன் பயனர்களுக்குதான் இழப்பு அதிகம், செலவின அடிப்படையில்.