

பென்சில்வேனியா: கிளவுட் கம்யூட்டிங்கை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் முறையாக அதனை நிர்வகிக்க தவறும் பட்சத்தில், அதன் பயனர்களின் தகவல்கள் மூன்றாவது நபர்கள் கைகளுக்கு செல்லும் அச்சுறுத்தல் ஏற்பட வழி இருப்பதாக கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். பெரும்பாலும் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்துள்ள அப்ளிகேஷன்களில் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுவதில்லை என்பது அண்மைய சர்வே ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
'கிளவுட் கம்யூட்டிங்' உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்ப வளங்களில் மிகவும் முக்கியமானது. தொழில்நுட்ப உலகில் சாம்ராட்களாக விளங்கும் கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், அலிபாபா (சீனா), ஐபிஎம் என பல்வேறு நிறுவனங்கள் இந்த கிளவுட் கம்யூட்டிங் சேவைகளை வழங்கி வருகின்றன. இன்றைய தொழில்நுட்ப உலகம் இதனை சார்ந்தே இயங்கி வருகின்றன. ஸ்டோரேஜ் தொடங்கி டேட்டா பேஸ், நெட்வொர்க்கிங் என பல்வேறு விதமான சேவைகளை பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப இதில் கிடைக்கிறது.
இதன்மூலம் நிறுவனங்கள் தங்களது மொபைல் அப்ளிகேஷன்கள், வலைதளங்கள் முதலானவற்றை எளிதாக கட்டமைத்து, நிர்வகிக்க முடியும். சர்வர்களை நிர்வகிப்பதில் எந்தவித சிக்கலும் இன்றி இதனை செய்ய இந்த கிளவுட் சேவை நிறுவனங்கள் உதவுகின்றன.
Information is Wealth: தொழில்நுப்டம் வரம் என சொல்லப்படுவதுண்டு. அதே நேரத்தில் இதனை சாபம் எனவும் சொல்லலாம். முறையாக இதனை கையாள்பவர்களுக்கு வரமாகவும், அதை செய்யத் தவறியவர்களுக்கு சாபமாகவும் இது அமையும். இதே சிக்கல்தான் இந்த கிளவுட் கம்யூட்டிங் பயன்பாட்டிலும் இருப்பதாக சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். அதனை ஆய்வுக் கட்டுரையாகவும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். 'Information is Wealth' என 'பாய்ஸ்' திரைப்படத்தில் நடிகர் செந்தில் சொல்லியிருப்பார். அவர் சொன்னது போல தகவல்கள் செல்வம்தான். ஆனால் இப்படிப்பட்ட செல்வத்தை கிளவுட் கம்யூட்டிங் சேவைகளை நிர்வகிப்பதில் சில பாதுகாப்பு சார்ந்த சங்கடங்கள் இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர்.
ஒவ்வொரு கிளவுட் சர்வரும் தனது பயனர்களுக்கென பிரத்யேக ஐபி (இன்டர்நெட் புரோட்டோகால்) அட்ரஸ் வைத்திருக்கும். அதன் துணை கொண்டு பயனர்கள் அந்த சர்வரில் இணையவும், டேட்டா தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும்.
இந்நிலையில், ஒரு நிறுவனம் அந்தக் குறிப்பிட்ட கிளவுட் சர்வர் சேவையை நிறுத்திக் கொள்ளும் பட்சத்தில், அதன் ஐபி அட்ரஸ் உட்பட இன்னும் பிற விவரங்களை புதிதாக வரும் வேறொரு பயனரிடம் கிளவுட் சேவை நிறுவனங்கள் கைமாற்றிக் கொடுக்கலாம். அப்படி அந்த அட்ரஸை பெறும் நபர்கள் ஹேக்கர்களாக இருக்கும் பட்சத்தில் முந்தைய நிறுவன பயனர்களின் தகவல்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. குறிப்பாக பயனர்களின் சாதனங்களில் உள்ள ஜிபிஎஸ் லொகேஷன் விவரம், நிதி சார்ந்த தகவல்கள் மற்றும் பிரவுசிங் ஹிஸ்டரி உட்பட அனைத்தையும் அறிந்து கொள்ள முடியுமாம்.
கிளவுட் சர்வர் சேவைகளை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளும் நிறுவனங்கள் அந்த சர்வரில் தங்கள் ஐபி அட்ரஸ் ரெஃபரென்ஸை நீக்க தவறியதுதான் இந்தச் சிக்கலுக்கு காரணம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தவறை சம்ப்ந்தப்பட்ட நிறுவனங்கள் அறியாத வரையில் பயனர்களின் தகவல்கள் மூன்றாவது நபர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் கவனத்திற்கு வந்தால் மட்டுமே இது தடுக்க முடியும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
வணிக நோக்கத்தில் பயனர்களின் தகவல்களை மொபைல் அப்ளிகேஷன்கள் மற்றும் விளம்பர டிரேக்கர்கள் மூலம் சேகரிக்கும் நிறுவனங்களின் ஐபி அட்ரஸை கன்ட்ரோல் செய்யும் யார் வேண்டுமானாலும், அதனை அறிந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் தகவல்களை லீக் செய்துள்ளதாகவும் தெரிகிறது.
இதன் முக்கியத்துவம் என்ன? - பெரும்பாலும் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்துள்ள அப்ளிகேஷன்களில் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டுவதில்லை என்பது அண்மைய சர்வே ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம், அவர்கள் பயன்படுத்தி வரும் நிறுவனத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பகத்தன்மையாக கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால், இப்படி சேகரிக்கப்படும் தகவல்கள், நிறுவனங்களின் மோசமான பாதுகாப்பு நடைமுறை காரணமாக கசிய வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர் ஆய்வாளர்கள்.
கல்வியாளர்களும், தொழில் துறையினரும் தற்போது பயனர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களுக்கு பொறுப்பாகும் விஷயத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக மொபைல் விளம்பரங்கள் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் பணியை குறைத்துக் கொள்ள கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பயனர் பாதுகாப்பு மற்றும் பிரைவசியை உறுதி செய்யப்படுவது இதன் அடிப்படை நோக்கமாக தெரிவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் அப்ளிகேஷன்கள் சேகரிக்கும் தரவுகளை கொண்டு என்ன செய்கின்றன என்ற விளக்கத்தையும் கொடுக்க ஆய்வாளர்கள் முயற்சிகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் உட்பட பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி வரும் பயனர்களின் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கிளவுட் சர்வர்களில் சேகரிக்கப்பட்டுள்ள பயனர்களின் தகவல்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக கிளவுட் சேவை வழங்கி வரும் நிறுவனங்களுடன் பயணித்து வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு நிறுவனங்கள் மற்றும் அதன் பயனர்கள் கிளவுடில் இதுபோல பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய டெக்னிக்குகளை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.