விமானத்தில் தீப்பற்றி எரிந்த போன் | சில நேரங்களில் ஸ்மார்ட்போன்கள் திடீரென தீப்பற்ற காரணம் என்ன? - வல்லுநர் விளக்கம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

புதுச்சேரி: அண்மையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணியின் ஸ்மார்ட்போன் திடீரென தீப்பற்றி எரிந்ததாக தகவல் வெளியானது. இந்தத் தகவலை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உறுதி செய்துள்ளது.

“கடந்த 14 ஆம் தேதியன்று அசாம் மாநிலம் திப்ருகார் நகரிலிருந்து தலைநகர் டெல்லி வந்த 6E 2037 விமானத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அவசர கால சூழலைக் கையாள்வதில் பயிற்சி பெற்றிருந்த விமான கேபின் குழுவினர் தீயை அணைத்துள்ளனர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை” என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனம். வழக்கத்துக்கு மாறாக போன் அதிகளவு வெப்பமடைந்த காரணத்தால் போனில் தீப்பற்றி உள்ளது எனவும், இதற்கு காரணம் போனின் பேட்டரி எனவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது. போனில் இருந்து புகை மற்றும் தீப்பொறி வெளி வருவதைக் கவனித்த விமானக் குழுவினர் தீ அணைக்கும் கருவியைக் கொண்டு தீயை அணைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களை பயனர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதும், சார்ஜ் செய்யும் போதும், பாக்கெட்டில் வைத்திருக்கும் போதும் தீப்பற்றி எரிந்தது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவருகின்றன. அந்தச் செய்தியை அப்படியே படித்துவிட்டு கடந்து செல்பவர்களும் உண்டு.

இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலான மக்களின் தவிர்க்க முடியாத சாதனமாக மாறி நிற்கிறது. போன் அழைப்புகள் மேற்கொள்ள மட்டுமல்லாது பல்வேறு தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரின் தேவைக்கும் ஏற்ப பயன்பாடுகள் வேறுபடுகிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போன்கள் சிலநேரங்களில் தீப்பற்றி எரிவது ஏன் என்பதை பார்ப்போம்.

இது தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த செல்போன் பழுது நீக்கும் வல்லுநர் ஜோசப்பிடம் பேசினோம், “உலகம் முழுவதும் அனைத்து நிறுவன போன்களும் விற்பனைக்கு வருவதற்கு முன்னதாக ‘டெஸ்ட்டிங்’ என்ற சோதனை முறையை கடக்க வேண்டும். இதனை உற்பத்தி கூடத்தில் உள்ள வல்லுநர்கள் மேற்கொள்வார்கள். செல்ஃப் டெஸ்ட் என்று இதனை சொல்வதுண்டு. அதில் போனின் செயல்பாடுகள் சோதிக்கப்படும். அந்த சோதனையில் தேர்ச்சி பெறும் போன்கள் தான் விற்பனைக்கு வரும்.

ஜோசப் - செல்போன் பழுது நீக்கும் வல்லுநர்
ஜோசப் - செல்போன் பழுது நீக்கும் வல்லுநர்

இப்படி சோதனைகளை கடந்து வரும் போன்கள், பயனர்களின் பயன்பாட்டுக்கு வந்த பிறகு சில சிக்கல்களை கொடுப்பதுண்டு. அதில் ஒன்றுதான் தீப்பற்றி எரிவது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

> போன்கள் தீப்பற்றி எரிய 99 சதவீத காரணம் அதன் பேட்டரிகள்தான். செல்போன் மற்றும் லேப்டாப்களில் லித்தியம் அயன் வகை பேட்டரி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன் தண்ணீர் அல்லது திரவங்களில் பட்ட காரணத்தாலும் அதன் போர்டு ஷார்ட் சர்க்யூட் ஆகலாம். சமயங்களில் போர்டுகளில் ஏற்படும் கோளாறு காரணமாகவும் போன்கள் தீப்பற்றி எரியலாம். இந்த மூன்றும் தான் போன்கள் பெரும்பாலும் போன்களில் தீப்பற்ற பிரதான காரணங்கள்.

> விலை குறைவாக இருக்கிறதே என எண்ணி வாங்கும் போன் சார்ஜர்களாலும் போன்களில் தீப்பற்றலாம். அதனால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்தி போன்களை சார்ஜ் செய்ய வேண்டும். இந்த விதி ஐபோன் முதல் அனைத்து போன்களுக்கும் பொருந்தும்.

> போன்களை அதிக நேரம் சார்ஜ் செய்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால் 100 சதவீத சார்ஜை போன்கள் எட்டியதும் சார்ஜ் செய்வதை அவசியம் நிறுத்த வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் போனை சார்ஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.

> போனில் தண்ணீர் உட்பட வேறு ஏதேனும் திரவம் பட்டால் உடனடியாக சர்வீஸ் சென்டர் கொண்டு செல்வது அவசியம். இல்லையென்றால் இது மாதிரியான சிக்கல்களை பயனர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

> சில நேரங்களில் பிஸிக்கல் டேமேஜ் காரணமாகவும் போன்களின் பேட்டரி தீப்பற்றி எரியலாம். அதனால் போன்களை கவனத்துடன் கையாள்வது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார் அவர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in