

மனதில் பட்ட கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தில் வெகு நாட்களாகவே 'எடிட் பட்டன்' அம்சம் (Feature) வேண்டுமென்பது அதன் பயனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அது ட்விட்டர் தளம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சுமார் 16 ஆண்டுகால எதிர்பார்ப்பு அது.
இந்நிலையில், உலகின் முதல்நிலை பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் 'எடிட் பட்டன்' வேண்டுமா? வேண்டாமா? என கருத்துக் கணிப்பை (Poll) முன்னெடுத்துள்ளார். இதனை இன்று காலை பதிவிட்டிருந்தார் மஸ்க். அதற்கு இதுவரையில் சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்துள்ளனர். இந்தச் சூழலில் இந்தக் கருத்துக் கணிப்பை மேற்கோள் காட்டி தனது கருத்தை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயல் அதிகாரி பராக் அகர்வால்.
"இந்த கருத்துக் கணிப்பின் விளைவுகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அதனால் கவனமாக வாக்களியுங்கள்" என சொல்லியுள்ளார் பராக். ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார் மஸ்க் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ட்விட்டரில் பயனர்களுக்கு கிடைக்கும் பேச்சு சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். மேலும் புதிய சமூக வலைதளம் பயனர்களுக்கு வேண்டுமா என கேட்டு ஒரு கருத்துக் கணிப்பை ட்விட்டரில் நடத்தியிருந்தார்.
அதில் "ஜனநாயக செயல்பாட்டிற்கு பேச்சு சுதந்திரம் மிகவும் அவசியம். ட்விட்டர் இந்தக் கொள்கையை தீவிரமாக பின்பற்றுகிறது என நீங்கள் நம்புகிறீர்களா?" என அதில் புதிர் போட்டிருந்தார் மஸ்க். அதற்கு சுமார் 70.4 சதவீதம் பேர் இல்லை எனச் சொல்லி இருந்தனர். அந்தப் பதிவில் இந்த வாக்கெடுப்பு மிகவும் அவசியமானதாகும் என சொல்லி இருந்தார் மஸ்க். அவர் பிரத்யேகமாக புதிய சமூக வலைதளத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளது என்ற பேச்சும் அப்போது எழுந்திருந்தது. இந்த நிலையில்தான் ட்விட்டர் பங்குகளை வாங்கியுள்ளார் அவர்.
கடந்த 2009 வாக்கில் ட்விட்டர் தளத்தில் இணைந்தவர் மஸ்க். சுமார் 80 மில்லியன் பேர் அந்த தளத்தில் அவரை பின் தொடர்ந்து வருகிறார்கள். முக்கிய அறிவிப்புகள் தொடங்கி பல்வேறு விதமான தகவல்களை மஸ்க் ட்விட்டர் தளத்தில் பகிர்வது வழக்கம். அவர் ட்விட்டர் தளத்தில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் பிரபலம்.
எடிட் பட்டன்? ட்விட்டர் தளத்தில் எடிட் பட்டன் வேண்டுமென்பது பயனர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு. இதன் மூலம் தவறாகப் பதிவிடும் பதிவை திருத்தி மீண்டும் அப்டேட் செய்யலாம் எனப் பயனர்கள் எண்ணுகிறார்கள். இது மஸ்க் செய்துள்ள கலகத்திற்கு துளியளவும் பொறுப்பல்ல. இந்த எடிட் பட்டன் குறித்து கடந்த 1-ஆம் தேதி அன்று ஒரு பதிவை போஸ்ட் செய்திருந்தது ட்விட்டர். அதில், 'நாங்கள் எடிட் பட்டன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்' எனச் சொல்லப்பட்டிருந்தது.
அப்போது முதலே விரைவில் எடிட் பட்டன் வந்துவிடும் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தனர் ட்விட்டர் பயனர்கள். அதே நேரத்தில் சிலர் 'ஏப்ரல் 1' (முட்டாள்கள் தினம்) அன்று வெளியாகியிருந்த அந்தப் பதிவு உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை எனவும் சொல்லியிருந்தனர்.
ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான ஜேக் டோர்சி, "அந்த அம்சத்தை ஒருபோதும் நாங்கள் கொண்டு வரப்போவதில்லை. அதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை" என எடிட் பட்டன் குறித்து சொல்லியிருந்தார்.
இப்படி எடிட் பட்டன் குறித்த பல்வேறு கருத்துகள் நிலவி வரும் சூழலில் வரும் நாட்களில் அதன் அப்டேட் எவ்வாறு இருக்கும் என ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர் பயனர்கள்.