Published : 31 Mar 2022 08:43 PM
Last Updated : 31 Mar 2022 08:43 PM

இ-வாகன தீ விபத்துகளும் 'பேட்டரி' பீதியும் - நாம் கவனிக்க வேண்டியது என்ன? - ஒரு பார்வை | HTT Prime

சென்னை: சமகால - எதிர்கால போக்குவரத்தில் மின்வாகனங்கள் முக்கியப் பங்காற்றும் சூழலில், அந்த வாகனங்களின் பேட்டரிகளால் ஏற்படும் திடீர் தீவிபத்துகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளன. இதுகுறித்து அடிப்படை விஷயங்களை அறிய வேண்டும் என்று வலியுறுத்தும் நிபுணர்கள், மின் வாகனப் பயன்பாட்டு வழிமுறைகளை கவனத்துடன் பின்பற்றினாலே போதும்; அச்சம் அவசியமில்லை என்றும் சொல்கின்றனர். இதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

மக்கள் தொகைக்கு ஏற்ப நாட்டில் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளன. வாகனப் பெருக்கம் மற்றும் புகை வெளியேற்றத்தின் காரணமாக காற்றில் பிஎம்2 அளவு அதிகமாகி காற்றுமாசு வேகமாக மாசு அடைந்து வருவதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளில் ஒன்று இ-வாகனம் எனப்படும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது. மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால், சமீபத்தில் நடந்த சில மின்வாகன விபத்து (தீப் பிடித்து எரிந்தது) சம்பவங்கள், அதன் பயன்பாடு மற்றும் எதிர்கால போக்குவரத்து குறித்த அச்சத்தையும், பல சந்தேகத்தையும் எழுப்பியுள்ளன. உண்மையில் மின் வாகனங்கள் ஆபத்தானதா, அவை ஏன் எளிதில் தீ பிடித்து எரிகின்றன. அதில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் பாதுகாப்பானதுதானா போன்ற கேள்விகளை நம்முன் வைக்கின்றன.

மின்வாகனங்கள் எளிதில் தீப்பிடிக்க அதில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் முக்கியமான காரணமாக சொல்லப்படுகின்றன. இன்றைய மின் வாகனங்கள் அனைத்திலும் லித்தியம்-அயன் (lithium-ion) வகை பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், லேப் டாப்கள் போன்றவைகளிலும் இந்த லித்தியம் அயன் வகை பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. மற்ற பேட்டரி வகைகளை ஒப்பிடுகையில், எடை குறைந்ததாகவும், அதிக செயல் திறன் கொண்டதாகவும் இருப்பதால் லித்தியம் அயன் வகை பேட்டரிகளின் பயன்பாடும் அதிகம். ஆனால், சமீபத்திய சம்பவங்கள் லித்தியம் அயன் பேட்டரிகள் தீ ஆபத்தையும் கொண்டிருக்கின்றன என்பதையும் நமக்கு உணர்த்தியுள்ளது.

மற்ற பேட்டரி வகைகளை விட, குறைவான எடை, அதிகமான செயல் திறன் மற்றும் ரீ சார்ஜ் செய்யும் வசதி உள்ளதால், மின்வாகனங்களில் லித்தியம் அயன் பேட்டரிகளே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மற்றொரு காரணம், அதன் நீடித்த ஆயுள். பொதுவாக, லித்தியம் அயன் பேட்டரி ஒரு மணி நேரத்தில் ஒரு கிலோவிற்கு 150 வாட்ஸ் ஆற்றலை சேமித்து வைக்கும். லீட்-ஆசிட் பேட்டரி அதே நேரத்தில் ஒரு கிலோவிற்கு 25 வாட்ஸ் ஆற்றலையே சேமித்து வைக்கும். எளிதாக சொல்ல வேண்டும் என்றால், மற்ற பேட்டரி வகைகளை விட அதிக ஆற்றல் அடர்த்தியைக் கொண்டது. இந்த வகை பேட்டரிகள் பொருத்தப்பட்ட கார்களை அதிக தூரம் ஓட்டிச் செல்லக்கூடியதாகவும், செல்போன்கள் நீண்ட நேரத்திற்கு ஆற்றல் நிற்கும். ஆனால், இந்த ஆற்றல் அடர்த்தியே சிலசமயம் அதன் செயல்திறன் தோல்விக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

இது குறித்து முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'லித்தியம் அயன் பேட்டரியின் அதிக ஆற்றல் அடர்த்தி சில நேரங்களில் நிலையற்றதாக மாறி, செல்களின் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதனால்,பேட்டரிகள் பாதுகாப்பாக இயங்குவதை உறுதி செய்ய பேட்டரி மேலாண்மை அமைப்பு (BMS) பயன்படுத்தப்படுகிறது. பிஎம்எஸ் என்பது பேட்டரியின் மின் அழுத்தம் மற்றும் அதன் வழியாகபாயும் மின்னோட்டம் ஆகியவைகளை அளவிடும் ஒரு மின்னணு அமைப்பு ஆகும். இது லித்தியம் அயன் பேட்டரியின் அனைத்து கலன்களுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் பேட்டரி பேக்கின் பல்வேறு பிரிவுகளில் உள்ள வெப்பநிலை தகவல்களை பிஎம்எஸ் பெறுகிறது' என்று குறிப்பிட்டுள்ளது.

பேட்டரிகள் தீப்பிடிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன என்று வல்லூநர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களின் கூறுகையில், "உற்பத்தி தவறுகள், வெளிப்புறச் சேதம், பிஎம்எஸ் பயன்படுத்துவதில் உள்ள தவறுகள் தீ விபத்திற்கு காரணமாகின்றன" என்கின்றனர். அதே நேரத்தில் இந்த வகை பேட்டரிகளில் வெப்பநிலையும் ஒரு முக்கியமான காரணியாக விளங்குகின்றன என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுவாக அதிமான வெப்பநிலையில் சிறப்பாக லித்தியம் அயன் பேட்டரிகள் செயல்பட்டாலும், அவற்றின் வெளிப்புற வெப்பநிலை 90 - 100 டிகிரியை அடையும் நிலையில், அவை தீப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம்” என்கின்றார் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத மின்வாகன உற்பத்தி பிரதிநிதி ஒருவர்.

வாகனத்தில் தீ விபத்து ஏற்படுவது புதிய விஷயம் இல்லை. என்றாலும், மின்வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துக்கள் அதிக கவனம் பெறுகின்றன. காரணம், இந்த விபத்துகள் வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போதோ, அவை சார்ஜ் செய்யப்படும்போதோ நிகழ்கின்றன. மேலும் விபத்தின்போது அதிக தீப்பிழம்பும், புகையும் வருவது, எளிதில் அணைக்க முடியாததும் இந்த விபத்துகளை அதிகம் கவனம் பெற வைக்கின்றன.

மின்வாகன உற்பத்தி நிறுவனத்தின் நிறுவனர் ஒருவர் அளித்த பேட்டி ஒன்றில், "உற்பத்தியாளர்கள் வாகன வடிவமைப்புகளுக்கு போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதில்லை. அதேபோல அரசாங்கம் நிர்ணயித்துள்ள தரக்கட்டுப்பாட்டு சோதனைகள், யதார்த்த சூழ்நிலைகளை துல்லியமாக சோதனை செய்யும் அளவில் இல்லை” என்றார்.

இந்த மாதிரியான விபத்துக்களைத் தவிர்க்க அரசாங்கம் மின்வாகனத் தரக்கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மின் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்குள் நிலவும் சந்தைப் போட்டி, வாகன வடிவமைப்புக்கான நிதி போதாமை போன்ற காரணங்களால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆபத்தான குறுக்கு வழிகளை கையாள வாய்ப்புள்ளது.

அப்படியானால், மின்வாகன பயன்பாட்டில் இருந்து நாம் தள்ளி இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. "தேவையில்லை" என்கிறார் நியூகேஸ்டில் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு மின் வேதியியல் பேராசிரியரான பால் கிறிஸ்டென்சன். "பேட்டரி தீயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அவற்றை அணைக்கத்தான் முடியாது. மின்வாகனத்தில் ஏற்பட்ட சிறிய தீ விபத்து நிகழ்வுகளைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஒரு லித்தியம் அயன் பேட்டரி ஒரு சிறிய இடத்தில் மிகப்பெரிய அளவிலான ஆற்றலைச் சேமிக்கிறது. 2008-ம் ஆண்டிலிருந்து, அத்தகைய பேட்டரிகளை பயன்படுத்துவது அவற்றின் அபாயங்களைப் பற்றிய மதிப்பீட்டை விட அதிகமாக உள்ளது. இந்த சின்னத் தடைகளை நம்மால் வெற்றி கொள்ள முடியும்" என்கிறார் அவர்.

நீங்கள் ஒரு மின்வாகனம் வைத்திருந்தால், சில எளிய நடைமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் உங்களையும் உங்கள் வாகனத்தையும் முற்றிலும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். சார்ஜ் செய்யும் போதும் வாகனத்தைப் பயன்படுத்தும் போதும் உற்பத்தியாளர்களின் அனைத்துப் பரிந்துரைகளையும் தவறாமல் பின்பற்றுங்கள். முடிந்தவரை, வேகமான சார்ஜர்கள் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். ஏனெனில், இது பேட்டரியின் ஆயுளைக் குறைக்கிறது. மேலும், எப்போதும் சரியான கேபிள்கள் மற்றும் சரியாக நன்கு புதைக்கப்பட்ட சாக்கெட்டைப் பயன்படுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x