

திரைப்படங்களைப் பார்க்கும் போது கதை, திரைக்கதை, வசனம், கேமரா கோணம் இத்யாதிகளை மட்டும் நாம் ரசிப்பதில்லை. நட்சத்திரங்களின் ஃபேஷன் மற்றும் படப்பிடிப்பு அரங்கில் பயன்படுத்தப்பட்ட மேஜை, நாற்காலி உள்ளிட்ட ஃபர்னிச்சர்களையும் ரசிக்காமல் இருப்பதில்லை. நம்மில் பலர் ஒரு படி மேலே சென்று படத்தில் பார்த்த அறைகலன்கள் பிடித்திருந்தால் அதையே தேடிப்பிடித்து வாங்குவதும் உண்டு.
ஆனால் இது அத்தனை எளிதல்ல. குறிப்பிட்ட காட்சியில் இடம்பெற்ற அறைகலனை அடையாளம் கண்டு அதை எங்கே வாங்க முடியும் எனத் தெரிந்துகொள்ள முயலும்போது பல நேரங்களில் கூகுளே கூட கைவிரிக்கலாம். எனினும் கவலை வேண்டாம். இப்படித் திரைப்படங்களில் பார்த்த அறைகலன்களைக் கண்டு கொள்வதற்காக என்றே அருமையான இணையதளம் ஒன்று இருக்கிறது. ‘சீன் ஆன் செட்’ (>https://www.seenonset.com/) எனும் அந்தத் தளத்தில் ஹாலிவுட் படங்களில் உள் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட அறைகலன்களை எளிதாக அடையாளம் காணலாம். அறைகலன்கள் அல்லது படங்களைக் குறிப்பிட்டுத் தேடும் வசதி இருப்பதோடு, ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட திரைப்பட அறைகலன்கள் முகப்புப் பக்கத்தில் முன்னிறுத்தப்படுகின்றன.