

பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது, 2006-ம் ஆண்டு அறிமுகமான ட்விட்டர். தனது வளர்ச்சிப் பாதையில் எத்தனையோ மைல்கற்களையும் மாற்றங்களையும் அது சந்தித்துள்ளது. ஆனால் இவற்றை எல்லாம்விட முக்கியமானது, ட்விட்டர் தன்னை ஒரு குறும்பதிவுச் சேவையாக உருமாற்றிக்கொண்டு வந்துள்ள விதம். 140 எழுத்துகளுக்குள் நிலைத் தகவல்கள் பகிர்வுக்கான சாதனமாக ட்விட்டர் புகழ்பெற்றிருந்தாலும் ட்விட்டரின் தொடக்கப்புள்ளி ஆச்சர்யமானது. ட்விட்டர் உண்மையில் ஒரு உப சேவையாக உருக்கொண்டு வளர்ந்தது. ஓடியோ எனும் நிறுவனம்தான் அதன் மூலவேர். அந்த நிறுவனம் பாட்காஸ்டிங் (இணையத்தில் ஒலிபரப்பு) சேவையை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதுதான் அதன் நிறுவனர்களான ஜேட் டோர்ஸே, இவான் வில்லியம்ஸ் (பிளாக்கர் நிறுவனர்) மற்றும் பிஸ் ஸ்டோன் ஆகியோர் ட்விட்டர் சேவை பற்றி ஆலோசித்தனர்.
எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திகள் பிரபலமாக இருந்த காலகட்டம் அது. அப்போது தனிநபர்கள், குழுவினருக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியாகவே ட்விட்டர் முன்வைக்கப்பட்டது. அதன் பிறகு தனிநபர்கள் நிலைத்தகவலைத் தங்கள் வட்டத்துக்குள் பகிர்ந்து கொள்ளும் சேவையாக அறியப்பட்டது.
எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திகள் பிரபலமாக இருந்த காலகட்டம் அது. அப்போது தனிநபர்கள், குழுவினருக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியாகவே ட்விட்டர் முன்வைக்கப்பட்டது. அதன் பிறகு தனிநபர்கள் நிலைத்தகவலைத் தங்கள் வட்டத்துக்குள் பகிர்ந்து கொள்ளும் சேவையாக அறியப்பட்டது.
‘நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்’ எனும் தகவலைப் பகிர்ந்துகொள்ள வழி செய்த ட்விட்டர் பயனாளிகளைக் கவர்ந்தது. அதன் பிறகு செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்கான சாதனமாக ட்விட்டர் உருவெடுத்து மெல்ல விஸ்வரூப வளர்ச்சி அடைந்தது.
பூகம்பம் போன்ற நிகழ்வுகளை உடனடியாகப் பகிர உதவியது, விபத்துகளின்போது தகவல் அளிக்கச் செய்தது போன்றவை ட்விட்டர் சேவையைப் பிரபலமாக்கின. எகிப்து உள்ளிட்ட நாடுகளில் புரட்சி வெடித்தபோது மக்கள் உணர்வுகளைப் பகிர உதவும் சாதனமாகவும் ட்விட்டரின் புகழ் மேலும் பரவியது.
ட்விட்டர் வளர்ச்சியில் மற்றொரு முக்கியமான விஷயம் அதன் ஆதார அம்சங்களான ‘@’ (அட் தி ரேட் ஆஃப்) மூலம் பதில் அளிக்கும் வசதி, ஒரு அலையெனக் குறும்பதிவுகளை ஒற்றைத் தலைப்பின் கீழ் உருப்பெறச்செய்யும் ஆற்றலைத் தரும் ‘ஹேஷ்டேக்’ வசதி மற்றும் ஒரு குறும்பதிவை நூறு குறும்பதிவுகளாக விஸ்வரூபம் எடுக்கச்செய்யும் ‘ரீட்வீட்’ வசதி ஆகிய அம்சங்கள் அதன் பயனாளிகளால் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும்!
ட்விட்டர் தோற்றம் பற்றி இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் அதன் ஆரம்ப பெயர் ட்விட்ராகவே (twttr) இருந்தது. அந்தக் கால கட்டத்தில் பிரபலமாக இருந்த ஃபிளிக்கர் (Flickr) சேவையின் தாக்கம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதோடு அப்போது ‘ட்விட்டர்.காம்’ எனும் முகவரியும் பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஆறு மாதங்கள் கழித்து அந்த முகவரியை வாங்கிய பிறகே ட்விட்டர் எனப் பெயர் மாற்றப்பட்டது.