

உலகில் இதுவரை எத்தனை போர்கள் நடைபெற்றிருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் உலகம் சந்தித்த போர்களில் 8,049 போர்கள் தொடர்பான விவரங்கள் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தப் போர்கள் எப்போது நிகழ்ந்தன, எங்கே நிகழ்ந்தன போன்ற விவரங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதைவிடப் பார்த்துப் புரிந்துகொள்வது சிறந்ததாக இருக்கும் அல்லவா?
இந்த எண்ணத்தில்தான் ‘நோட்கோட்’ இணையதளம் விக்கிப்பீடியாவில் உள்ள போர்கள் பற்றிய தகவல்களை எல்லாம் திரட்டி அவற்றை உலக வரைபடம் மீது காட்சிப்படுத்தியிருக்கிறது. போர்களை அவை நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரைபடம் மீது புள்ளிகளாகக் காட்சி அளிக்கின்றன.
உலக வரைபடத்தின் மீது தோன்றும் இந்தப் புள்ளிகள் அருகே மவுசைக் கொண்டு சென்றால் அவை தொடர்பான விவரங்களைப் பார்க்கலாம். கால வரிசைப்படியும் பார்க்கும் வசதி இருக்கிறது. விக்கிப்பீடியா தவிர ‘டிபிபீடியா’வில் இருந்தும் போர் தொடர்பான தகவல்கள் இந்த முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் தரவுகளை இப்படிக் காட்சிப்படுத்துவதிலும், இதன் மூலம் புதிய புரிதலை உண்டாக்குவதற்கும் பின்னணியில் பெரிய அளவிலான வேலைகள் இருக்கின்றன. அத்தகைய பணியில் சிறந்து விளங்கும் நோட்கோட் இந்தப் போர் வரைபடத்தை வழங்கியுள்ளது.