Last Updated : 05 Feb, 2016 11:40 AM

Published : 05 Feb 2016 11:40 AM
Last Updated : 05 Feb 2016 11:40 AM

காவலருக்கு உதவும் இணையம்!

காவல் அதிகாரி மேத்யூ ஹிக்கி இணையத்தின் உதவியால் நெகிழ்ந்து போயிருக்கிறார். அவர் மட்டும‌ல்ல, செல்லப் பிராணிகள் மீது பாசம் கொண்ட பலரும் நெகிழ்ந்து போயிருக்கின்றனர். ஹிக்கிக்கு இணையம் மூலம் முகம் தெரியாத பலர் உதவிய விதத்தைத் தெரிந்து கொண்டால் நீங்களும் கூட இதே உணர்வைப் பெறுவீர்கள்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள மெரியேட்டா நகரில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார் ஹிக்கி. 30 ஆண்டு கால பணிக்குப் பிறகு அவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஹிக்கி தனது பணியை மிகவும் நேசித்தவர். பணியில் தனது சகாவாக இருந்த அஜாக்ஸையும் மிகவும் நேசித்தார். ஓய்வுக்குப் பிறகு அஜாக்ஸும், தானும் இணைந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் காவல்துறை விதிகளால் அது சாத்தியமில்லை என அறிந்தபோது நொந்துபோனார்.

அஜாக்ஸ் அவருடன் பணியாற்றிய பயிற்சி நாய். அஜாக்ஸைத் தனது சகாவாகவும், நண்பனாகவும் கருதியிருந்தார். அதனால்தான் ஓய்வுக்குப் பின் அஜாக்ஸைத் தானே பரமரிக்க விரும்பினார்.

ஆனால் சட்டங்களும், விதிகளும் சில நேரங்களில் விசித்திரமானவை அல்லவா? ஹிக்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாரே தவிர, அஜாக்ஸ் இன்னமும் ஓய்வு பெறாமல் பணியில் இருப்பதால் அதனை அவரிடம் ஒப்படைக்க முடியாது எனக் காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இத்தனைக்கும் ஹிக்கி, அந்த நாயைத் தன்னுடனே வைத்துக் கொள்வதற்காக அதை விலைக்கு வாங்கிக் கொள்ளவும் தயாராக இருந்தார். ஆனால் நாயை விற்பதாக இருந்தாலும் ஏலம் மூலம் மட்டுமே அளிக்க முடியும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிகாரி ஹிக்கி சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில் இந்தச் செய்தி உள்ளூர் வட்டாரங்களில் பரவியபோது, உள்ளூர்வாசிகள் அவரது ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் புரிந்துகொண்டு அவருக்கு மனமிரங்கினார். ஆனால் அத்துடன் நிற்கவில்லை. மாற்றத்திற்கான இணைய கோரிக்கைகளை சமர்ப்பித்து ஆதரவு திரட்டுவதற்கான 'சேஞ்ச். ஆர்க்' தளத்தின் மூலம் ஹிக்கிக்கு ஆதரவாக ஒரு கோரிக்கை மனுவை உருவாக்கினார். ஹிக்கியிடமே அஜாக்ஸ் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கோரிய அந்த மனுவில் 24,000 பேருக்கு மேல் கையெழுத்திட்டு இந்தக் கோரிக்கைய வலியுறுத்தினர்.

இதனிடையே உள்ளூர்வாசிகள் பலரும், ஃபேஸ்புக் மூலமும் நகரசபை மற்றும் காவல்துறைக்கு எதிராகத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர். இணையவாசிகள் அத்துடன் நிற்கவில்லை. ஒருவேளை அஜாக்ஸ் ஏலம் விடப்பட்டால், அதை அதிகாரி ஹிக்கியே வெற்றிகரமாக ஏலம் எடுக்க உதவுவதற்காக நிதி திரட்டித்தரவும் 'கோஃபண்ட் மீ' இணையதளத்தில் ஒரு கோரிக்கைப் பக்கத்தை அமைத்து நிதி திரட்டினர். இதற்கும் ஆதரவு குவிந்தது. நான்கே நாட்களில் 68 ஆயிரம் டாலர்களுக்கு மேல் நிதி குவிந்துவிட்டது. (ஏலம் போக எஞ்சிய தொகை நாய்களின் நலனுக்கான அமைப்பிற்கு நன்கொடையாக அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது).

நிச்சயம் ஹிக்கி இப்படி ஒரு ஆதரவை முகம் தெரியாத மனிதர் களிடம் இருந்து எதிர்பார்த்திருக்க மாட்டார். இந்த இணையப் பக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் அஜாக்ஸை ஹிக்கியே தொடர்ந்து வளர்க்கும் உரிமையும் நியாயமும் உள்ளவர் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மனிதர்களுக்கும், அவர்களால் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கும் ஏற்படும் விஷேச பிணைப்பையும், அதற்குக் குறுக்கே விதிகள் நிற்கக் கூடாது எனும் கருத்தையும் அவை பலவிதங்களில் பிரதிபலிக்கின்றன.

இந்தப் பிரச்சினையில் தற்போதைய நிலை என்ன என்ற அப்டேட்டும் அந்தப் பக்கத்தில் இடம்பெற்று வருகின்றன. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் எண்ணற்ற உதாரணங்களில் இந்த நிகழ்வும் இணைந்துள்ளது.

ஹிக்கிக்காக நிதி திரட்ட உருவாக்கப்பட்ட இணையப் பக்கம்: >https://www.gofundme.com/yumeagskSign up to receive our newsletter in your inbox every day!

 
x