குறிவைத்து துன்புறுத்துபவர்களைக் கட்டுப்படுத்த புதிய வசதி: இன்ஸ்டாகிராம் அறிமுகம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

இன்ஸ்டாகிராம் தளத்தில் தனி நபர்களைக் குறிவைத்துத் துன்புறுத்துபவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் லிமிட்ஸ் என்கிற புதிய வசதியை அந்தத் தளம் அறிமுகம் செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் தனி நபர்களின் கணக்குகளில் ஆபாசமாகக் கருத்துப் பதிவிடுவது, பிரபலமானவர்களைப் பற்றி அவதூறாகப் பேசுவது எனப் பல பிரச்சினைகள் தொடர்கின்றன. இப்படியான ஒழுங்கீனங்களைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு சமூக வலைதளமும் பல்வேறு கட்டுப்பாடுகளை, வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றன.

அந்த வரிசையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் தளத்தில், லிமிட்ஸ் என்கிற புதிய அம்சத்தின் மூலம், பதிவுகளின் மூலம் நடக்கும் உரையாடல்களைக் கட்டுப்படுத்தப் பயனர்களுக்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது.

தாங்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதாகப் பயனர்கள் நினைக்கும்போது தங்கள் கணக்கைக் கட்டுப்படுத்தி வைக்கலாம். இன்ஸ்டாகிராமில் பயனர்களின் பதிவுகளில் இனரீதியான வெறுப்பைக் காட்டும் கருத்துகளுக்கு இடமில்லை என்று அதன் தலைவர் ஆடம் மொஸேரி கூறியுள்ளார்.

வெறுப்பைப் பரப்பும் கருத்துகளை முற்றிலுமாக நீக்கவே இன்ஸ்டாகிராம் திட்டமிட்டு வருவதாகவும், மொஸேரி குறிப்பிட்டுள்ளார். இந்த வசதி இப்போதைக்குக் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

"உண்மையான இடர், வலி தற்காலிகமாக சில சமயங்களில் பயனர்களுக்கு ஏற்படும் அபாயம் இருப்பது எங்களுக்குத் தெரியும். அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பயனர்களுக்கு நாங்கள் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். வரும் மாதங்களில் இனரீதியான வெறுப்பை எதிர்கொள்ள இன்னும் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்பதைப் பகிர்வோம்" என்று மொஸேரி பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in