

ஸ்மார்ட்போன்களின் அசுர வளர்ச்சி வியப்பை அளிக்கலாம். ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஸ்மார்ட்போன்களே 'அவுட்டேட்டாகி' விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? எரிக்சன் நிறுவனத்தின் நுகர்வோர் ஆய்வுக்கூடம் நடத்திய ஆய்வில்தான் இப்படி ஒரு விஷயம் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேர் ஐந்தாண்டுகளில் ஸ்மார்ட்போனுக்கான தேவையே இல்லாமல் போய்விடும் என்று கூறியிருக்கின்றனராம். செயற்கை அறிவின் வளர்ச்சியால், கையில் போனே இல்லாமல் பொருட்களுடன் தொடர்பு கொள்ளும் சாத்தியம் உண்டாகும் என்பதால் போனுக்கோ, டேப்லெட்டிற்கோ தேவையே இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கையில் ஸ்மார்ட்போனை வைத்திருப்பது என்பது தொல்லை தரும் அனுபவம், அதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் பலரும் கூறியுள்ளனர். கார் ஓட்டும் போதோ சமைக்கும் போதோ போனை கையில் வைத்திருப்பது போன்ற சங்கடத்தைச் சுட்டிக்காட்டித்தான் இப்படிக் கூறியிருக்கின்றனர். எனில், வருங்காலம் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள்!