

உங்களிடம் நல்லதொரு பட்டியல் இருக்கிறதா? எனில் அந்தப் பட்டியலை இணையத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள். இணையவாசிகள் அந்தப் பட்டியலைப் பார்த்து ரசிக்கவும், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் தயாராக இருக்கின்றனர். அப்படியே நீங்கள் கொஞ்சம் இணையப் புகழையும் பெறலாம்.
ஆனால் ஒன்று அந்தப் பட்டியல் தனித்தன்மை கொண்ட மூலப் பட்டியலாக இருக்க வேண்டும். அதில் உள்ள ஏதோ ஒன்று இணையவாசிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.
இதற்கு அழகான உதாரணம் வேண்டும் என்றால் லண்டனைச் சேர்ந்த நகைச்சுவை எழுத்தாளரான ஆரோன் கில்லீஸ் (Aaron Gillies) உருவாக்கிய பட்டியலைச் சொல்லலாம்.
கில்லீஸ் அண்மையில் ட்விட்டர் மூலம் பகிர்ந்துகொண்ட பட்டியல் முதலில் ட்விட்டரில் வைரலாகிப் பின்னர் இணையம் முழுவதும் பரவி கவனத்தை ஈர்த்து அவருக்குக் கைத்தட்டல்களைப் பெற்றுத்தந்திருக்கிறது.
கில்லீஸ் பகிர்ந்து கொண்ட பட்டியல் அவரது மனைவியின் ‘அழுகைக் கலை' பற்றியது!
அழுகை மனித இயல்புகளில் ஒன்று. எடுத்ததெற்கெல்லாம் அழுதுவிடுபவர்கள் இருக்கின்றனர். அழுகை மூலம் உணர்வை வெளிக்காட்டிக்கொள்ளாத உறுதி மிக்கவர்களும் இருக்கின்றனர். அழுகைகளில் பல விதங்கள் உண்டு. அழுவதைக் கொண்டும் மனிதர்களைப் பலவிதமாகப் பிரிக்கலாம். ஆனால் கில்லீஸ் மனைவியின் அழுகைப் பழக்கம் கொஞ்சம் அசாதாரணமானது.
மிக மிக சாதாரணமாக விஷயங்களுக்குக்கூட அவருக்கு அழுகை வந்துவிடுவதை கில்லீஸ் கவனித்திருக்கிறார். ‘இதெற்கெல்லாம் கூட யாராவது அழுவார்களா?' என நினைக்கக்கூடிய பல விஷயங்களுக்கு அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்களைக் கசக்கி நின்றிருக்கிறார்.
உதாரணத்துக்கு ஒரு முறை வாத்துகள் தன்பாலின் உறவுப் பழக்கம் கொண்டவை என்பதை நினைத்துப் பார்த்து அழுதிருக்கிறார். இன்னொரு முறை வீட்டில் பிஸ்கட்டுகள் தீர்ந்துவிட்டன என்பதற்காக அழுத்திருக்கிறாராம்.
திருமணமான ஓராண்டு காலத்தில் மனைவி லெக்சின் இந்த அபூர்வ குணத்தை கில்லீஸ் கவனித்து வியந்திருக்கிறார், ரசித்திருக்கிறார். அப்படியே எந்த எந்தத் தருணங்களில் எல்லாம் மனைவி அழுகிறார் என்பதைக் குறித்து வைக்கவும் தொடங்கியிருக்கிறார்.
இந்தப் பட்டியலைத்தான் சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் (@TechnicallyRon) குறும்பதிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். "என் மனைவி எதற்கெடுத்தாலும் அழுகிறாள். அதனால்தான் அவற்றைப் பட்டியலாக எழுதி வைத்திருக்கிறேன்" என குறும்பதிவிட்டிருந்தார்.
அவர் எதிர்பார்க்காதபோது கைகளைப் பற்றிக்கொண்டதற்காக, முழு நாள் பணிக்குப் பிறகு அவளுக்குச் சமைத்துக் கொடுத்ததற்காக, நாய் வீடியோ ஒன்றைப் பார்த்ததற்காக என நீளும் இந்தப் பட்டியலை அவர் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இயல்பாகத்தான் பகிர்ந்துகொண்டார். ஒரு நல்ல கணவராக இது பற்றி மனைவியிடம் தெரிவித்து அவரது அனுமதியும் பெற்றிருந்தார்.
ஆனால் ட்விட்டரில் இந்தப் பட்டியலைப் பார்த்தவர்கள் அதில் இருந்த அப்பாவித்தனம் மற்றும் நம்ப முடியாத தன்மையால் கவரப்பட்டனர். பலரும் அதை ரீட்வீட் செய்தனர். சுமார் 24,000 முறைக்கு மேல் ரீட்வீட் செய்யப்பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அது மட்டும் அல்ல, பலரும் இது பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். ஒரு சிலர் மிகுந்த கரிசனத்துடன் கில்லீஸ் மனைவிக்கு உளவியல் சிக்கல் இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இன்னும் சிலர் அவர் கர்ப்பமாக இருக்க வேண்டும், அதனால்தான் இப்படி எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார் எனக் கூறியிருந்தனர்.
இதனிடையே இணைய முகப்புப் பக்கமான ‘ரெட்டிட்' தளத்திலும் இது பற்றிய செய்தி வெளியாகி இந்த நிகழ்வு இணையம் முழுவதும் பரவி விவாதிக்கப்பட்டது. ஒளிப்படப் பகிர்வு தளமான ‘இம்கூர்' தளத்திலும் பகிரப்பட்டு 2 மில்லியன் முறைக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதங்களுக்குப் பதில் அளிக்கும் விதமாக கில்லீஸ், “என் மனைவியின் உளவியல் சிக்கல்கள் பற்றி ஆய்வு செய்ய முற்பட்டவர்களுக்கு நன்றி. ஆனால் அவர் எப்படி இருக்கிறாரோ அதுதான் அவரது இயல்பு என உறுதி அளிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
நானும் சரி என் மனைவியும் சரி, இந்தப் பட்டியல் இந்த அளவுக்கு இணையத்தில் பரவும் என எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியிருந்தவர், ஆனால் பலரால் இந்தப் பட்டியலுடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்திருக்க வேண்டும், உணர்வுபூர்வமான தன்மை பற்றிப் பரவலாக வெளிப்படையாகப் பேசப்படாததும் காரணமாக இருக்கலாம் என்றும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பலரும் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருக்கும் அழுகைப் பழக்கத்தையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியதுதான்.
ஜேனே சேலிஸ்பரி என்பவர், டீக்கடையில் அழகான டீ கோப்பைகளைப் பார்த்து அழுத தனது மருமகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இன்னொருவர் தன் மனைவிக்கு இலக்கியப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தபோது அழுததைக் குறிப்பிட்டிருந்தார். இன்னொருவர் கார்ட்டூனில் அந்த காலத்து விலங்கைப் பார்க்கும்போதெல்லாம் மனைவி அழுவதைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.
இப்படிப் பலரது அழுகைப் பழக்கங்கள் பற்றிப் பகிர்ந்து கொள்வதற்கான திறவுகோலாகவும் இது அமைந்துள்ளது. அவர்களில் பலர் இதனால் நிம்மதிப் பெருமூச்சும் கூட விட்டிருக்கலாம். ஏனெனில் இதை வெளியே சொல்ல முடியாத விநோதமாகவோ அல்லது விபரீதமாகவோ நினைத்திருக்கலாம். ஆனால் கில்லீஸ் தன் மனைவியின் அதீதமான அழுகை பற்றிப் பகிர்ந்து கொண்டு மனித உணர்வுகள்தான் எத்தனை விதமானவை, அதைவிட எத்தனை அழகானவை என உணர்த்தியிருக்கிறார்.