Last Updated : 13 Nov, 2015 01:28 PM

 

Published : 13 Nov 2015 01:28 PM
Last Updated : 13 Nov 2015 01:28 PM

ஃபேஸ்புக்கில் பவர்பாயிண்ட்

மாநாடு, கருத்தரங்கு, அலுவலகக் கூட்டங்கள் என்றால் பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் தானாக நினைவுக்கு வரும். அலுப்பூட்டக்கூடியது என்று சிலர் விமர்சித்தாலும் மணிக்கணக்காகப் பேச வேண்டிய விஷயங்களைக் கூட பவர்பாயிண்ட் காட்சி விளக்கமாக கச்சிதமாக முன்வைக்கலாம்.

இப்போது பவர்பாயிண்ட் சேவையை மேலும் சுவாரஸ்யமாக்கும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. மைரோசாஃப்ட் நிறுவனம் ‘சோஷியல் ஷேர்' எனும் பெயரில் ‘பிளக் இன்' வசதியாக இதை அறிமுகம் செய்துள்ளது.

சேவையின் பெயரைப் பார்த்ததுமே அதன் தன்மை புரிந்திருக்குமே. ஆம்! இந்தச் சேவை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக ஊடகச் சேவைகளில் பவர்பாயிண்ட் காட்சி விளக்கங்களைப் பகிர்ந்துகொள்ள வழிசெய்கிறது. தனி ஸ்லைடுகள் ஒளிப்படமாகப் பகிர்ந்துகொள்ளலாம். அல்லது மொத்தக் காட்சி விளக்கத்தையும் ஒளிப்பட ஆல்பமாகப் பகிரலாம். விரும்பினால் ஒருபடி மேலே போய் வீடியோ வடிவிலும் பகிர்ந்துகொள்ளலாம்.

இந்த ஸ்லைடுகளைப் பார்த்து ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் பவர்பாயிண்ட் செயலியிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, காட்சி விளக்கங்களை நேரடியாக ‘ஒன்டிரை’வில் கோப்பாக சேமித்துக்கொள்ளலாம்.

பவர்பாயிண்ட்டுக்கு மிகவும் தேவையான அப்டேட்தான் இல்லையா?

புதிய திட்டங்களில் ஈடுபட மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ‘மைக்ரோசாஃப்ட் கராஜ்' திட்டத்தின் கீழ் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கிய குழுவில் நம்மவரான வித்யாராமன் சங்கரநாராயணனும் இடம்பெற்றுள்ளார்.

மாநாடு போன்றவற்றில் பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் அளிக்கும்போது ட்விட்டரில் அதைப் பகிர்ந்துகொண்டால் பார்வையாளர்கள் அதன் மீது கருத்து தெரிவிப்பது சாத்தியமாகலாம். அதற்கு கேள்வி பதில் நேரத்தின்போது அழகாக பதிலும் சொல்லலாம் என்கிறார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x