Published : 20 Nov 2015 12:07 pm

Updated : 20 Nov 2015 12:07 pm

 

Published : 20 Nov 2015 12:07 PM
Last Updated : 20 Nov 2015 12:07 PM

இணைய கற்காலத்தின் இனிய நினைவுகள்!

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு முந்தைய இணையத்தை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இரண்டும்தான் உலகம் என நினைக்கும் ஸ்மார்ட்போன் தலைமுறையிடம் அந்தக் கால இணையம் எப்படி இருந்தது என்பதை அறிவீர்களா என்று கேட்க வேண்டும்.

இணையத்தில் அந்தக் காலம் என்றால் எச்.டி.எம்.எல் யுகம். கூகுள் தேடலுக்கு முந்தைய காலம். பிரவுசர் என்றால் நெட்ஸ்கேப்பும், இணையத்தில் உலாவுதல் என்றால் யாஹுவும் என இருந்த ஆண்டுகள். இணைய சாமனியர்களின் சொந்த வீட்டுக்கனவை ஜியோசிட்டீஸ் நிறைவேற்றித் தந்த நாட்கள்.


இணையத்தின் ஆரம்ப கால அற்புதங்களின் நினைவுச் சின்னங்கள் இவை. இணைய பரிணாமத்தில் வலை 1.0 எனக் குறிப்பிடப்படும் இந்தக் கால கட்டம் முடிந்து இப்போது வலை 2.0 அலை வீசிக்கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களும், உள்ளங்கையில் இணையத்தை அணுகும் வசதியும் இதன் அடையாளமாக உருவாகியிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரு செயலி இருக்கிறது. இ-காமர்ஸ் கோலோச்சுகிறது. எதிர்காலத்தில் தொழில்நுட்பம் இன்னும் என்ன எல்லாமோ மாற்றங்களைக் கொண்டுவர இருக்கின்றன.

எதிர்கால அற்புதங்கள் பற்றிய மாநாடுகள் நடத்தப்படும் நிலையில், இணையத்தின் அந்தக் காலத்தைத் திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த புரோகிராமர் கெய்லே டிரேக் மற்றும் சைபர் மானுடவியலாளரான ஆம்பர் கேஸ் இருவரும் இணைந்து இந்த இரண்டு நாள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றனர்.

வலை 1.0 மாநாடு, 2015 (தி வெப் 1.0 கான்பிரன்ஸ் 2015) எனும் பெயரிலான இந்த மாநாட்டில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த மாநாட்டை இணைய ஃப்ளாஷ்பேக் என்றோ அல்லது அந்தக் கால நினைவுகளில் மூழ்கும் முயற்சி என்றோ அலட்சியமாக நினைத்துவிட வேண்டாம்.

இணையத்தின் ஆரம்ப கால அற்புதங்களை எடுத்துரைத்து, அதற்கும் இன்றைய இணையத்திற்குமான வேறுபாடுகளையும் இந்த மாநாடு கவனத்தில் கொண்டு வந்ததுள்ளது. மாநாட்டுக்கு என்று அமைக்கப்பட்ட இணையதளமும் அந்தக் காலத் தன்மையுடனேயே அமைந்திருந்தது. இலவச இணையதளங்களை உருவாக்க வழி செய்த ஜியோசிட்டீஸ் இணையதளம் (http://websiteconf.neocities.org/) போலவே அந்தத் தளம் அமைந்திருந்தது.

மாநாட்டில் இதே பாணியிலான இணையதளத்தை உருவாக்கும் முயற்சியிலும் பிரதிநிதிகள் ஈடுபட்டனர்.

இதற்கு என்ன அவசியம் என்று கேட்கலாம். இணையம் ஆரம்ப நாட்களில் இவ்விதமாகத்தான் இருந்தது. அதற்காக 3ஜியையும் கடந்து 4ஜி-5ஜி என பேசிக்கொண்டிருக்கும் காலத்தில் ஆமை வேக டயல் அப் இணைய யுகத்திற்கு திரும்ப முடியுமா என கேட்கலாம்.

இல்லை! இது இணைய கற்காலத்திற்குத் திரும்பச்சொல்லும் கோரிக்கை அல்ல. மாறாக நவீன இணையத்தில் எவை எல்லாம் தவறாக இருக்கின்றன என்பதை அந்தக் கால இணையத்தில் சரியாக இருந்தவை மூலம் சுட்டிக்காட்டுவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

'இணையம் என்பதே மக்களை நுகர வைப்பதற்கான சதியாக மாறிவிட்டது' என்கிறார் மாநாட்டு அமைப்பாளரான கெய்லே டிரேக். அது மட்டும் அல்ல. பிக் டேட்டா மற்றும் பிக் பிஸ்னஸ் ஆதிக்கம் செலுத்த கண்காணிப்பு யுகமும் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதை அவர் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார்.

இணையத்தின் ஆரம்ப காலத்தில் இவ்வாறு இருக்கவில்லை என்பதோடு எல்லாவற்றிலும் ஒரு படைப்பூக்கமும், புதுமையும் இருந்தன என்கிறார். இவற்றுக்கான அடையாளமாகத்தான் ஜியோசிட்டிஸ் கால இணையதளங்களை முன்வைக்கிறார்.

இந்தக் கால நவீன இணையதளங்களுடன் ஒப்பிடும்போது இவை தோற்றத்திலோ, உருவாக்கத்திலோ பல மடங்கு பின் தங்கியிருப்பவை. ஆனால் என்ன, இவற்றின் உள்ளடக்கத்தில் இருந்த தனிநபர் படைப்பாற்றலும், கற்பனைத்திறனும் இப்போது சாத்தியமாகிறதா என்ன?

தொழில்நுட்ப நோக்கில் இவை அதிக பின்புலம் இல்லாத நிலையான பக்கங்களைக் கொண்டவை. 'ஸ்டேட்டிக் வெப்' என குறிப்பிடப்படுகின்றன. இன்றைய பிராண்ட்பேண்ட் இணையத்தில் இருந்து திரும்பிப் பார்த்தால் இவை மாட்டுவண்டிகளுக்கான ஒரு வழிப்பாதை போலத் தோன்றலாம்.

ஆனாலும் என்ன, இணையத்தில் தாங்கள் நினைத்த வகையில் தங்களுக்கு என்று சொந்தமாக ஒரு வலைமனையை உருவாக்கிக் கொள்ள இவை வழி செய்தனவே. அதன் காரணமாகவே இவற்றில் தனிமனித படைப்பாக்கம் அதன் அப்பாவித்தனத்துடன் அழகாக வெளிப்பட்டனவே!

விக்கி மற்றும் சமூக வலைதளங்களின் எழுச்சி, இ-காமர்ஸ் அலை எல்லாம் சேர்ந்து அந்தக் கால இணையத்தை வெகுவாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டதுடன், புதிய விதிகளையும் உருவாக்கி இருக்கின்றன. கண்காணிப்பு யுகத்திற்கும் வித்திட்டுள்ளன.

பலரும் இணையத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த படைப்பாற்றல் மற்றும் வெளிப்படுத்தும் தன்மையை இழந்துள்ளதாக உணர்கின்றனர். அவர்களுக்காகத்தான் இந்த மாநாடு என்கிறார் கெய்லே டிரேக்.

ஆரம்ப இணையத்தின் நல்ல விஷயங்களை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம் என்று சொல்பவர் போர்ட்லாண்டில் மாநாட்டிற்கு கிடைத்த வரவேற்பின் தொடர்ச்சியாக மற்ற நகரங்களிலும் இருந்து அழைப்பு வந்திருக்கிறது என்கிறார்.

டிரேக் பற்றி மற்றொரு சுவாரஸ்யமான தகவல் ஜியோசிட்டீஸ் பாணியில் அந்தக் கால இணையதளங்களை உருவாக்கிக் கொள்ள வழி செய்யும் நியோசிட்டீஸ் (Neocities) தளத்தை அவர் நடத்தி வருகிறார்.


இணைய கற்காலம்இணைய வரலாறுவெப் கான்ஃபரன்ஸ்இணைய மாநாடுபழைய இணையதளங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x