Last Updated : 13 Nov, 2015 01:26 PM

 

Published : 13 Nov 2015 01:26 PM
Last Updated : 13 Nov 2015 01:26 PM

கிரவுட் ஃபண்டிங்கும், கிக்ஸ்டார்ட்டர் மைல்கல்லும் !

கிக்ஸ்டார்ட்டர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கிரவுட் ஃபண்டிங் தளமான கிக்ஸ்டார்ட்டர் மூலம் நிதி கோரப்பட்ட திட்டங்களுக்கு இதுவரை 200 கோடி டாலர் அளவுக்கு நிதி உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இது கிக்ஸ்டார்ட்டரின் சாதனை மட்டும் அல்ல. இணையத்தின் சாதனையும் கூட! கிரவுட் ஃபண்டிங் எனும் கருத்தாக்கத்திற்கான வெற்றியின் அடையாளமும்தான். உலகில் கொடை வள்ளல்களுக்கும் குறைவில்லை என்பதையும் இது உணர்த்துகிறது. கேட்டால் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது இந்தப் புள்ளி விவரம்.

இந்தச் சாதனை எண்ணிக்கையை எட்ட கிக்ஸ்டார்ட்டருக்கு ஏழு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆனால் 2009-ல் அறிமுகமான கிக்ஸ்டார்ட்டர் முதல், 100 கோடி டாலர் நிதி அளவை எட்ட ஐந்து ஆண்டுகள் ஆனது என்ற நிலையில், இரண்டாவது 100 கோடியை எட்ட 19 மாதங்களே ஆகியிருக்கிறது என்பது கிக்ஸ்டார்ட்டரின் வளர்ச்சியை மட்டும் அல்ல, இணையம் மூலம் நிதி திரட்டும் கோட்பாடு எந்த அளவுக்குப் பரவலாகி, ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.

இணையத்தின் ஆற்றல் மீது நம்பிக்கை கொண்டுள்ள எவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய தகவல்தான் இது.

புதிய திட்டங்கள் அல்லது புதிய தயாரிப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் அதற்கான நிதி தேடி அங்கும் இங்கும் அலையும் தேவை இல்லாமல், இணையம் மூலமே நிதி திரட்டிக்கொள்ளும் வசதியே கிரவுட் ஃபண்டிங் என்று சொல்லப்படுகிறது.

புதிய முயற்சிக்காக நிதி கோருபவர்கள் தங்கள் மனதில் உள்ள எண்ணத்தை விரிவாக விவரித்து, இணையவாசிகளிடமிருந்து அதற்கு ஆதரவு கேட்கலாம். அந்த எண்ணத்தை நம்புகிறவர்கள் தங்களால் இயன்ற தொகையை அளிக்க முன்வரலாம். இப்படி இணையவாசிகள் பலர் கூடிக் கைகொடுத்தால் கேட்ட நிதி திரண்டுவிடும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த கருத்தாக்கத்தைப் பிரபலமாக்கிய முன்னோடி தளமாக கிக்ஸ்டார்ட்டர் அறியப்படுகிறது. கிக்ஸ்டார்ட்டர் மூலம் நிதி திரட்டலுக்கு பெப்பிள் ஸ்மார்ட்வாட்ச் உட்பட பல வெற்றிக்கதைகள் இருக்கின்றன. தோல்விக் கதைகளும் அநேகம் உண்டென்றாலும் இணையத்தை மட்டுமே நம்பிக் காரியத்தில் இறங்கலாம், நல்ல முயற்சியாக இருந்தால் முகம் தெரியாத இணையவாசிகள் கைகொடுத்துக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை கிக்ஸ்டார்ட்டர் ஏற்படுத்தியுள்ளது.

இதன் அடையாளம்தான் கிக்ஸ்டார்ட்டர் பெருமைப்பட்டுள்ள மைல்கல்.

இதைக் கொண்டாடும் வகையில் கிக்ஸ்டார்ட்டர் தனி இணையப் பக்கத்தை அமைத்து (https://www.kickstarter.com/2billion) அதில் சாதனை விவரங்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டுள்ளது. மொத்தம் 95 லட்சம் இணையவாசிகள் இதுவரை பல்வேறு திட்டங்களுக்கு நிதி அளித்துள்ளனர். அமெரிக்கா மட்டும் அல்லாமல் இந்தியா உள்ளிட்ட 230 நாடுகளைச் சேர்ந்தவர்களும் நிதி அளித்துள்ளனர்.

இவர்களில் 30 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களை ஆதரித்துள்ளனர். 49 பேர் தனித்தனியாக 1,000 திட்டங்களுக்கு மேல் நிதி அளித்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பெரும்பாலானோர் 100 டாலர் மற்றும் அதற்குக் குறைவாக நிதி அளிக்க முன்வந்துள்ளனர்.

10 கோடி டாலர் அளவுக்கான நிதி எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியும் கிக்ஸ்டார்ட்டர் போன்ற தளங்களில் நிதி அளிப்பவர்கள் பெரிதாக எதையும் பதிலுக்கு எதிர்பார்ப்பதில்லை. அவர்களுக்கு அதிகபட்சமாக கிடைப்பது ஒரு மன‌மார்ந்த நன்றியும், டி-ஷர்ட் அல்லது இன்னும் பிற பரிசுப் பொருட்கள் மற்றும் நிதி கோருபவர்களின் தயாரிப்புகளும்தான்.

உண்மையில் புதிய முயற்சியை ஆதரிக்கும் எண்ணமே நிதி அளிப்பவர்களை இயக்குகிறது.

கிக்ஸ்டார்ட்டரில் 2.60 லட்சத்திற்கும் மேலான திட்டங்களுக்கு நிதி கோரப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு லட்சம் திட்டங்கள் வரை வெற்றிகரமாக நிதி இலக்கை அடைந்துள்ளன. கிக்ஸ்டார்ட்டரில் வெற்றிகரமாக நிதி திரட்டுவதற்கான முக்கிய அம்சங்கள் என்ன என்று ஆய்வு செய்யும் அளவுக்கு இந்த நிதி திரட்டும் மேடை செல்வாக்குப் பெற்றிருக்கிறது.

கிக்ஸ்டார்ட்டர் திட்டங்கள் பல வகை, பல ரகம் என்றாலும், அவற்றின் ஆதார அம்சத்தைப் புரிந்து கொள்வதற்கான உதாரணமாக சமீபத்திய நிதி திரட்டும் முயற்சி ஒன்றைப் பார்க்கலாம்.

‘தி மான்ஸ்டர் பிராஜக்ட்' (http://www.gomonsterproject.com/faq) எனும் அந்தத் திட்டம் பள்ளிக் குழந்தைகளுக்குக் கலையில் ஆர்வம் உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பள்ளி நிர்வாகிகளும் சரி, பெற்றோர்களும் சரி பிள்ளைகளின் கலை ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் ஊக்குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. எனவே பள்ளிகளில் பாடங்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பிள்ளைகளின் கற்பனை ஆற்றலை வளர்ப்பது பற்றி எல்லாம் பலரும் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் மனித குலத்தின் வளர்ச்சிக்குப் படைப்பாற்றல் முக்கியமானது. இந்தக் கருத்தை வலியுறுத்தி பள்ளிக் குழந்தைகள் மத்தியில் கற்பனை ஆர்வத்தை வளர்த்தெடுக்க 'கோ மான்ஸ்டர் பிராஜக்ட்' விரும்புகிறது.

அதன்படி பள்ளிக் குழந்தைகளை பூதங்களை ஓவியமாக வரைய வைக்கின்றனர். பிஞ்சுக்கரங்கள் வரையும் அந்த ஓவியங்களைத் தேர்ச்சி பெற்ற ஓவியக் கலைஞர்களிடம் கொடுத்து அவர்கள் அதை மெருகேற்றி வரைந்து தரும் முழு ஓவியத்தை பிரேம் போட்டு அதை வரைந்த குழந்தையிடம் அளிக்க உள்ளனர். தங்கள் கற்பனை எப்படி வடிவம் எடுத்துள்ளது என்பதைப் பார்க்கும்போது பிள்ளைகள் மனதில் படைப்பாற்றல் கீற்று வலுவாகி தாங்களும் இதில் தீவிரமாக ஈடுபடலாம் என்ற எண்ணம் உண்டாகும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நம்பிக்கை.

இந்த நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக, பள்ளிக் குழந்தைகளைச் சென்றடைய, அவர்கள் படைப்புகளை உலகம் முழுவதும் உள்ள ஓவியர்கள் கொண்டு மேம்படுத்தத் தேவையான நிதி கோரி இந்தத் திட்டத்தின் பின்னே உள்ள குழு கிக்ஸ்டார்ட்டரை நாடியுள்ளது.

வளரும் தலைமுறை கற்பனை, கலை, படைப்பாற்றல் போன்றவற்றை வாழ்வின் முக்கிய அம்சமாக நினைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம் இதைச் செயல்படுத்தி சமூகத்தின் போக்கில் சின்னதாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வர இணையவாசிகள் மீது நம்பிக்கை வைத்து கிக்ஸ்டார்ட்டருக்கு வந்திருக்கிறது.

கிக்ஸ்டார்ட்டர் போலவே இந்திய இணையப் பரப்பிலும் விஷ்பெரி, கெட்டோ போன்ற இணையதளங்களும் இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x