Last Updated : 02 Oct, 2015 01:21 PM

 

Published : 02 Oct 2015 01:21 PM
Last Updated : 02 Oct 2015 01:21 PM

தளம் புதிது - கணித நண்பன்

எழுத்தாளர்கள் தட்டச்சு செய்வதற்கு என்றே பிரத்யேக எழுதிகள் இருக்கின்றன. வழக்கமான தட்டச்சு மென்பொருளான வேர்டு பிராசஸரை விட இவை மேம்பட்டவை. அதைவிட முக்கியமாக, கவனச்சிதறல் இல்லாமல் எழுதுவதில் மட்டும் ஈடுபட உதவுபவை.

இதேபோல விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு என‌ தனியே எழுதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது தெரியுமா? கேல்கா அந்த எழுதியைப் பயன்படுத்தும்போது நடுவே கணக்கு போட்டுப்பார்க்கலாம். கணிதவியல் சமன்பாடுகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இயற்பியல் அல்லது வேதியியல் போன்ற பிரிவுகளில் தட்டச்சு செய்யும்போது சமன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தால் அவற்றைத் தட்டச்சு செய்யும் போதே பின்னணியில் அதற்கான கணக்கு போடப்பட்டு விடை தானாகத் திரையில் தோன்றும்.

நிதி மற்றும் பொருளாதார விஷயங்களைத் தட்டச்சு செய்யும்போது வட்டி, கூட்டு வட்டி போன்றவற்றை குறிப்பிட்டாலும் இந்த எழுதியே கணக்கு போட்டு விடை அளிக்கும். கணினியில் தட்டச்சு செய்யும்போது, எளிய கூட்டல் கணக்கை இடம்பெற வைக்க வேண்டும் என்றால் கூட, வெளியே வந்து தனியே கால்குலேட்டரைப் பயன்படுத்தும் நிலையில் இருந்து கால்கா அளிக்கும் வசதி எத்தனை மேம்பட்டது என்று அதை பயன்படுத்திப்பார்த்தால்தான் புரியும்.

ஆனால் கால்காவை உங்கள் வீட்டு மளிகைக் கணக்கு போட்டுப் பார்க்கவெல்லாம் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அது கட்டணச் சேவை. விண்டோசில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த 10 டாலர் செலுத்த வேண்டும்.

ஆனால் கவலைப்பட வேண்டாம், கால்குலேட்டர் உதவி இல்லாமலேயே எளிய கணக்குகளைப் போட்டுப் பார்க்க விரும்பினால் நோட்பேட் கால்குலேட்டர் இருக்கவே இருக்கிறது. இருந்து கிழிக்கப்பட்ட காகிதம் போல இருக்கும் இதன் முகப்புப் பக்கத்தில் குறிப்பெழுதுவது போல எழுதத் தொட‌ங்க வேண்டியதுதான். இப்படி தட்டச்சு செய்யும்போது கூட்டல், கழித்தல்களைப் பயன்படுத்தினால் அந்த சமன்பாட்டுக்கான விடை அருகே வந்து நிற்கிறது. ஸ்டீவ் ரைடவுட் எனும் மென்பொருள் வல்லுந‌ர் உருவாக்கியுள்ள இந்த எளிய நோட்பேடைப் பயன்படுத்திப் பாருங்கள், லேசாக அசந்துபோவீர்கள்!

இணையதளம்: >http://notepadcalculator.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x