

ரோபோ மாதிரி டான்ஸ் ஆடுவது எல்லாம் அந்த காலம். தற்போது ரோபோவே டான்ஸ் ஆடுகிறது. ஜப்பானைச் சேர்ந்த முராடா ரோபோ ஆராய்ச்சி நிறுவனம், பாடலுக்கு ஏற்ப நடனமாடும் ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. டோக்கியோவில் கடந்த வாரம் நடைபெற்ற மின்னணு வர்த்தக கண்காட்சியில் இந்த ரோபோ நடனம் இடம்பெற்றது.
பந்து மீது அமர்த்தி வைக்கப்பட்ட ஒரே வடிவிலான ரோபோக்கள், பாடலுக்கு ஏற்ப சுற்றி சுழன்று நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சென்சார் பொருத்தபட்டுள்ளதால் ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைந்த முறையில் நடனமாடின. இனி விளையாட்டுப் போட்டிகளில் சியர்ஸ் லீடர்ஸாக ரோபோக்களையும் பார்க்கலாம்.
கலக்கும் டொயோடா
ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான டொயோடா மூன்று புதிய வகை கார்களுக்கான வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. முக்கியமாக இரண்டு பேர் மட்டும் பயணிக்கும் வாகனம், மூன்று பேர் பயணிக்கும் வாகனம் மற்றும் பேட்டரி வாகனம் என வெளியிட்டுள்ளது.
இதில் பேட்டரியில் இயங்கும் வாகனம் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக முன்பக்க சக்கரங்களுக்கு பேட்டரி, பின்பக்க சக்கரங்களுக்கு கம்ப்ரஸ்ட்டு ஹைட்ரஜன் இவற்றை இயக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் என மோட்டார் வாகன உலகை வியக்க வைத்துள்ளது.
மாத்திரை அளவு ஸ்பீக்கர்
மாத்திரை அளவுள்ள ஸ்பீக்கரை வெளியிடவுள்ளது ஆப்பிள் நிறுவனம். ஸ்டீரியோவுடன் செயல்படும் இந்த ஸ்பீக்கர் புளூடூத் வழி இயங்கக்கூடியது. 12 மணி நேரம் வரை இதற்கு சார்ஜ் செய்ய தேவையில்லை.
உடனடி ஐஸ் கட்டி
உடனடியாக ஐஸ் கட்டி தயாரிக்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு நிறுவனம். ஒரு புட்டிக்குள் தண்ணீரை ஊற்றி ஃப்ரீசரில் வைத்த சில நிமிடங்களிலேயே ஐஸ் கட்டி கிடைத்து விடுகிறது.
ஸ்மார்ட் கடிகாரம்
வித்திங்க்ஸ் என்ற பிரெஞ்ச் நிறுவனம் ஸ்மார்ட் கைக் கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நமது உடல் செயல்பாடுகளை ஸ்மார்ட்போனுடன் இணைக்கிறது. அலாரமும் உள்ள இந்த கடிகாரத்தை சார்ஜ் செய்ய வேண்டிதும் இல்லை.