ட்விட்டர் கணக்குகளை சரிபார்க்கும் புதிய முறை: ஜனவரி 20 முதல் தொடக்கம்

ட்விட்டர் கணக்குகளை சரிபார்க்கும் புதிய முறை: ஜனவரி 20 முதல் தொடக்கம்
Updated on
1 min read

ஜனவரி 20 முதல் தங்கள் தளத்தில் புதிதாக சரிபார்க்கும் முறையும், விதிகளும் அமல்படுத்தப்படும் என்றும், சரிபார்க்கப்பட்ட (verified) கணக்குகள் முழுமையற்றோ, பயன்படுத்தப்படாமலோ இருந்தால் அதன் சரிபார்க்கப்பட்ட சின்னம் (badge) நீக்கப்படும் என்றும் ட்விட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தப் புதிய விதிகளின் படி, மீண்டும் மீண்டும் அதிகமாக தங்களது தளத்தின் விதிகளை மீறிய கணக்குகளின் சின்னமும் நீக்கப்படும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

"அது போன்ற கணக்குகளை ஒவ்வொன்றாக நாங்கள் ஆய்வு செய்வோம். எங்களது விதிகளை அமல்படுத்துவதற்கும், சரிபார்த்தலுக்கும் இடையே இருக்கும் தொடர்பை வரும் வருடத்தில் மேம்படுத்துவோம். உங்கள் கணக்கிலிருந்து அந்தச் சின்னம் நீக்கப்படும் நிலை ஏற்பட்டால் அது குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

மேலும் அந்தச் சின்னம் நீக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உங்களுக்குச் சொல்லப்படும். ஜனவரி 20ஆம் தேதிக்கு முன் அந்த மாற்றங்களை நீங்கள் செய்துவிட்டால், அந்தச் சின்னத்தை இழக்க மாட்டீர்கள் " என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ஒரு கணக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை சரிபார்த்து வெரிஃபைட் என்கிற சின்னத்தைக் கொடுக்கும் வழக்கத்தை மூன்று வருடங்களுக்கு முன் ட்விட்டர் நிறுத்தி வைத்தது. 2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் மீண்டும் இது தொடங்கும் என கடந்த மாதம் அறிவித்திருந்தது.

மேலும் செயல்படாத கணக்குகளிலிருந்து இந்தச் சின்னத்தை தானாக நீக்கும் முறையைச் செய்யப்போவதில்லை என்றும், இறந்து போனவர்களின் கணக்குகளை, இன்ஸ்டாகிராமில் இருப்பதைப் போல, அவர்களின் நினைவாகப் பாதுகாக்கும் முறையை உருவாக்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த சரிபார்க்கும் முறை குறித்து ட்விட்டர் பயனர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. கிட்டத்தட்ட 22,000 பேர் இதில் பங்கெடுத்திருந்தனர். இதை வைத்து புதிய மாற்றங்களை ட்விட்டர் அறிமுகம் செய்யவிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in