

உலகம் எல்லோருக்குமே வண்ணமயமாகத் தெரிவதில்லை. வண்ணங்களை மற்றவர்கள் போல உணர முடியாமல் தவிக்கும் பார்வை குறைபாடு கொண்டவர்கள் இருக்கின்றனர். இவர்களும் வண்ணங்களைப் பிரித்துணரும் வகையில் புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது.
ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘கலர் பிளைண்ட் பால்' எனும் அந்த செயலி, போனில் உள்ள காமிரா மூலம் படம் பிடிக்கப்படும் காட்சிகளில் உள்ள பல்வேறு வண்ணங்களைப் பிரித்துக் காட்டுகிறது. கேமராவில் உள்ள பில்டர் மற்றும் ஸ்லைடர் மூலமாக வண்ணங்களின் வேறுபாட்டை உணரலாம்.
இதற்கு முன்னர் பல வண்ணங்களைக் காண முடியாத பலர் இந்த செயலியின் மூலம் முதல் முறையாக வண்ணங்களைத் துல்லியமாகப் பார்க்க முடிவதால் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பார்வைக் குறைபாடு கொண்ட வின்செண்ட் பியோரெண்டினி என்பவர் இந்தச் செயலியை உருவாக்கியுள்ளார். தன்னைப் போன்றவர்கள் முழு வண்ணங்களையும் காண உதவும் வகையில் இந்தச் செயலியை வடிவமைத்ததாக அவர் சொல்கிறார். இயல்பான பார்வை கொண்டவர்கள், வண்ணக் குறைபாடு கொண்டவர்கள் காணும் காட்சிகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவும் இந்தச் செயலியை பயன்படுத்தலாம்!
செயலி பற்றிய விவரங்களுக்கு: >http://www.apppicker.com/apps/1037744228/color-blind-pal