

ஒளிப்படப் பகிர்வு சேவையான பிளிக்கரில் அவரவர் விருப்பத்திற்கும் ரசனைக்கும் ஏற்ப ஒளிப்படங்களைப் பார்த்து ரசிக்கலாம். இப்போது இந்தப் பட்டியலில் நிலவில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும் சேர்ந்திருக்கின்றன. ஆம் நிலவில் விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் அனைத்தும் பிளிக்கர் இணையதளத்தில் (> https://www.flickr.com/photos/projectapolloarchive) பதிவேற்றப்பட்டுள்ளன.
அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசாவால் அபோலோ விண்கலம் மூலம் அனுப்பி நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் இவை. மொத்தம் 8,400 ஒளிப்படங்களை வரிசையாகப் பார்த்து ரசிக்கலாம்.
நிலவில் மனிதன் காலடி வைத்த பயணத்தின் டிஜிட்டல் ஒளிப்படங்கள் மற்றும் ஆய்வுக் குறிப்புகளைப் பராமரித்துவரும் புராஜக்ட் அபோலோ ஆர்க்கைவ் சார்பாக இந்த ஒளிப்படங்கள் பிளிக்கர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இவை எல்லாமே நாசாவின் மூல ஸ்கான் பதிவின் வடிவங்கள். விண்வெளி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த இணையப் பக்கம் பொக்கிஷமாக இருக்கும். கறுப்பு வெள்ளையில் வரிசையாக நிலவின் தோற்றத்தையும் அதன் மேற்புறக் காட்சிகளையும் பார்த்து ரசிப்பது புதிய அனுபவம்தான்.