Last Updated : 30 Oct, 2015 10:15 AM

 

Published : 30 Oct 2015 10:15 AM
Last Updated : 30 Oct 2015 10:15 AM

இளமை நெட்: கண்ணு கூகுளு... ம்ம்மேஹ்ஹ்...!

உலகில் ஆர்வம் உள்ள மாணவர் யார்? இந்தக் கேள்விக்கு உங்களால் சரியான பதில் அளிக்க முடியும் எனத் தோன்றுகிறதா? ஆம் என்றோ இல்லை என்றோ பதில் சொல்லாமல், 'இருங்கள் எந்திரங்களை கேட்டுச் சொல்கிறேன்' என்பது உங்கள் பதிலாக இருந்தால் உங்களை நீங்களே புத்திசாலியாகக் கருதிக்கொள்ளலாம். ஏனெனில் இன்றைய தேதிக்குக் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் இருப்பது எந்திரங்களிடம்தான்!

ஆம்! எந்திரங்கள் காரோட்டக் கற்றுக்கொண்டுவருகின்றன. அவை மனிதர்கள் போலவே சிந்திக்க முயற்சி செய்துவருகின்றன. மொழிபெயர்க்கக் கற்றுக்கொள்கின்றன. உரையாடக் கற்றுவருகின்றன. இசைக்க, சமைக்க இன்னும் என்னவோ செய்ய கற்றுக்கொண்டுவருகின்றன.

ரோபோ ஆய்வு, எந்திரக் கற்றல், செயற்கை அறிவு என்றெல்லாம் இந்த முயற்சிகள் பலவிதமாகக் குறிப்பிடப்படுகின்றன. ஆய்வுக்கூடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த முயற்சிகளில் இவற்றின் ஆசிரியர்களாக இருப்பதென்னவோ மனிதர்கள்தான். ஆனால், எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று தெரியாது.

இப்போதே ஒரு தரப்பினர், வரும் காலத்தில் செயற்கை அறிவு மனிதகுலத்தை மிஞ்சும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இணைய தொழிலதிபர் எலன் மஸ்கும், இயற்பியல் விஞ்ஞானி ஹாக்கிங்கும் இந்த முகாமில் இருக்கின்றனர் எனும்போது இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்வதற்கில்லை.

ஏ.ஐ. (Artificial Intelligence - AI) என்று குறிப்பிடப்படும் செயற்கை அறிவால் அதன் பிரம்மாக்களான மனித மூளையை மிஞ்சக்கூடிய வகையில் செயல்படுவது சாத்தியம் இல்லை என வாதிடுபவர்களும் கணிசமாக இருக்கின்றனர்.

ஏ.ஐ. எழுச்சி பெறுகிறதோ இல்லையோ, விரைவில் வரும் காலத்தில் மனிதர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பல வேலைகளை ரோபோக்கள் தட்டிப்பறித்துக்கொள்ளும் வாய்ப்பிருப்பதைப் புறக்கணிக்க முடியாத நிஜம் என்று ஒரு தரப்பினர் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.

இந்த விவாதம் இன்னும் தீவிரமாகும் வகையில்தான் ஏ.ஐ. சார்ந்த முயற்சிகள் இருக்கின்றன. இதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கூகுளில் கேட்டுப்பாருங்கள். ஏ.ஐ. உலகை வெல்லுமா? (Will AI take over the world?) எனும் கேள்விக்கான கூகுளின் தேடல் முடிவுகள் இது தொடர்பான விவாதத்தையும், சாத்தியத்தின் எல்லைகளையும் புரிய வைக்கும். விஷயம் அது மட்டும் அல்ல, இது போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்க கூகுளே செயற்கை அறிவைத்தான் நாடத் தொட‌ங்கியிருக்கிறது. இதற்காக ‘ரேங்க் பிரைன்' எனும் தொழில்நுட்ப‌மும் உருவாக்கப்பட்டிருப்பதை ப்ளும்பர்க் செய்தி படம் பிடித்துக்காட்டுகிறது.

செயற்கை அறிவு சார்ந்த ஆய்வுத் திட்டங்களில் கூகுளுக்கு இருக்கும் ஆர்வம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். ரோபோ நாய் மற்றும் அட்லஸ் எந்திர மனிதனை உருவாக்கிய போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனத்தை அது விலைக்கு வாங்கியிருக்கிறது. அதன் மொழிபெயர்ப்புச் சேவை எந்திரக் கற்றல் நுட்பத்தைச் சார்ந்திருக்கிறது. இன்னும் பலவிதங்களில் செயற்கை அறிவு சார்ந்த திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

செயற்கை அறிவில் கூகுளுக்கு உள்ள ஆர்வத்தை மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம். தேடல் கலையில் எப்போதும் ஓர் அடி முன்னே இருக்க வேண்டும் எனும் வேட்கைதான் அது. இணையவாசிகளின் தேடலுக்கு நொடிப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில் சரியான‌ பதில் சொல்லும் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளவும், வரும் காலத்தில் தேடுபவரின் மனதில் உள்ள குறிப்பை அவர் தேடும் முன்னரே புரிந்து கொண்டு பதில் அளிக்கவும் செயற்கை அறிவை கூகுள் பெரிதும் நம்பியிருக்கிறது.

இந்த நம்பிக்கையின் ஓர் அங்கம்தான் ரேங்க் பிரைன். கூகுள் தேடல் முடிவுகளைப் பட்டியலிட பயன்படுத்தும் ‘பேஜ் ரேங்க்' நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். ரேங்க் பிரைன் இதன் அடுத்த கட்டம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதுவும் ஒரு அல்காரிதம்தான். கடந்த சில மாதங்களாக கூகுள் மூலம் கேட்கப்படும் வழக்கத்துக்கு மாறான பல கேள்விகளுக்கு இந்த அல்காரிதம்தான் பதில் சொல்லி வருவதாக ப்ளும்பர்க் கட்டுரை குறிப்பிடுகிறது.

கூகுள் மூலம் நாள்தோறும் 350 கோடி தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றனவாம். சமீப காலமாக இவற்றில் 15 சதவீத தேடல்கள் இதுவரை தேடப்படாத விஷயங்களாக இருப்பதாக கூகுள் ஆய்வாளர் கோராடோ சொல்கிறார்.

இந்த வகையான கேள்விகளுக்குத்தான் ரேங்க் பிரைன் அல்காரிதம் பதில் அளிக்கிறது. வார்த்தைகளைக் கணிதவியல் முறையிலான வெக்டர்களாக மாற்றிப் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அல்காரிதம் புரியாத வார்த்தைகளைத் தேடலில் எதிர்கொள்ளும்போது, அதற்கு நிகரான பல வார்த்தைகளை ஊகித்து அதனடிப்படையில் தேடல் முடிவுகளை முன்வைத்துவருகிறதாம்.

இதே தேடலுக்கான முடிவுகளை ஆய்வாளர்களை தேடித் தரச் சொன்னபோது அவர்கள் அளித்த பதில்கள் 70 சதவீதம் பொருத்தமாக இருந்தது என்றால் அல்காரிதத்தின் பதில் அதைவிட 10 சதவீதம் கூடுதலாக சரியாக இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

அது மட்டும் அல்ல. இந்த அல்காரிதம், இணையவாசிகள் பதில்களை கிளிக் செய்வதை வைத்துத் தனது பதில் எந்த அளவுக்குச் சரி எனப் புரிந்து கொண்டு தவறுகளைத் திருத்திக்கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாம். ஆக, இந்த ரேங்க் பிரைன் தன்னை ‘அப்டேட்' செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

இனி அடுத்த முறை நீங்கள் கூகுளில் தேடும்போது, ‘எந்திரன்' படத்தில் வருவதுபோல ‘கண்ணு வசி... ம்ம்மேஹேஹே..!' என்று கிண்டலடித்துக்கொண்டே பதில் சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. கெட் ரெடி ஃபோக்ஸ்!v

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x