

அண்மையில் ஒரு ஒளிப்படம் வைரலாகப் பரவி விவாதத்தை ஏற்படுத்தி நம் காலத்து ஒளிப்படம் எனும் அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது. அந்த ஒளிப்படம் மனசாட்சியை உலுக்கக் கூடிய வகையைச் சேர்ந்ததில்லை என்றாலும் கூட இக்கால தலைமுறையை யோசிக்க வைக்கக் கூடிய படமாக இருப்பதுதான் விஷேசம்.
ஹாலிவுட் புதிய படம் ஒன்று தொடர்பான நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் அது. ஹாலிவுட் நாயகன் ஜானி டெப் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்றதால் அவர்களைப் பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் கூடிய நிலையைப் படம் பிடித்துக்காட்டும் அந்தக் காட்சியை முதலில் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றும். நட்சத்திரங்களைப் பார்க்கத் திரண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் கையில் ஸ்மார்ட் போனை வெவ்வேறு கோணங்களில் நீட்டியபடி அந்த தருணத்தைப் படம் பிடிக்க முயன்றுகொண்டிருப்பதைத் தான் அந்தப் படம் உணர்த்துகிறது.
ஸ்மார்ட்போன் யுகத்தில் எல்லா இடங்களிலும் எதிர்கொள்ளக்கூடிய வெகு இயல்பான காட்சிதான் இது இல்லையா?
ஆனால் அந்தப் படத்தைக் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் பலதரப்பட்ட ரசிகர்கள் நடுவே வயதான பெண்மணி ஒருவர் தனித்திருப்பதைப் பார்க்கலாம். அந்த மூதாட்டியின் கையில் ஸ்மார்ட்போன் இல்லை என்பது மட்டும் அல்ல, அவர் தன்னைச் சுற்றிய பரபரப்பு பற்றி கூட கவலைப்படாமல் ஓர் உண்மையான ரசிகையின் ஆர்வத்துடன் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதை உணரலாம்.
ஆம், அந்த வயதான பெண்மணி நம் காலத்தில் மிகவும் அரிதாக ஆகிவிட்ட ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதாவது அரிய தருணங்களை ஸ்மார்ட் போனில் படமெடுத்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளும் வேட்கையில் அந்த குறிப்பிட்ட தருணத்தை அனுபவிக்கத் தவறியவர்களுக்கு மத்தியில் அந்தப் பெண்மணி நட்சத்திரங்களை நேரில் பார்க்கக் கிடைத்த தருணத்தில் லயித்திருக்கிறார்.
தற்செயலாக அமைந்த அந்தக் காட்சி பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லி விடுகிறது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, சுற்றுலாப் பயணங்களாக இருந்தாலும் சரி அப்போதைய கணங்களை அனுபவிப்பதை விட அந்தக் காட்சிகளை ஸ்மார்ட்போனில் படமெடுப்பதிலோ அல்லது சுயபடம் (செல்ஃபி) எடுப்பதிலோதான் பெரும்பாலானோர் கவனம் செலுத்துகின்றனர்.
இந்தப் பழக்கம், நாம் வாழும் தருணங்களைத் தவறவிடுவதற்கு சமம் என்று சமூகவியல் வல்லுநர்கள் கவலையோடு சுட்டிக்காட்டுகின்றனர். இந்த முரணை, ஸ்மார்ட்போன் கூட்டத்தினர் நடுவே தனித்து நிற்கும் வயதான பெண்மணி மூலம் கச்சிதமாக உணர்த்தும் இந்த ஒளிப்படம் முதலில் ‘பாஸ்டன் குளோப்' எனும் அமெரிக்க நாளிதழில் வெளியானது.
அந்தப் படத்தை பார்த்து ரசித்த வைனே டால்பர்க் எனும் ட்விட்டர் பயனாளி தனது டுவிட்டர் பக்கத்தில் (@waynedahlberg) அதைப் பகிர்ந்துகொண்டார். எக்காலத்திலும் என்னை மிகவும் கவர்ந்த ஒளிப்படம் எனும் வாசகத்துடன் அவர் பகிர்ந்துகொண்ட அந்தப் படம் உடனே ட்விட்டரில் பலரால் ரீ-டீவிட் செய்து பாராட்டப்பட்டது. ஒளிப்படம் நூற்றுக்கணக்கான முறை பகிர்ந்துகொள்ளப்பட்ட நிலையில் அதை வெளியிட்ட டால்பர்க், அந்தப் படத்தை எடுத்த ஒளிப்படக் கலைஞர் ஜான் பிளாண்டிங் பெயரையும் டேக் செய்திருந்தார்.
இணைய வல்லுநரான டிம் ரெய்லி, அந்தப் படத்தைச் சுட்டிக்காட்டி அந்தத் தருணத்தில் பெண்மணி லயித்திருக்கிறார் என பாராட்டியிருந்தார். பிரெண்ட் ஜென்சன் என்பவர், நிகழ் காலத்திலிருந்து, தன்னைச் சுற்றி திகழ்வதை ரசிக்கத் தெரிந்த ஒருவர் எனப் பாராட்டியிருந்தார்.
இன்னொருவரோ, இன்றைய காலத்தில் நாம் வாழும் கணத்தை அனுபவித்து ரசிக்க மறந்துகொண்டிருக்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார். இணைய யுகத்தின் கவலை தரும் யதார்த்தம் இது!