இணைய பிழைச் செய்திகளில் ஒரு புதுமை!

இணைய பிழைச் செய்திகளில் ஒரு புதுமை!
Updated on
1 min read

முன்னணி நிறுவனங்களின் இணையதளங்கள் மறு வடிவமைப்பு செய்யப்படுவது மட்டும் செய்தி அல்ல; அவற்றின் பிழைச் செய்திப் பக்கங்கள் சீரமைக்கப்படுவதும் கவனிக்கத்தக்க செய்திதான்! எப்.டி.காம் இணையதளத்தின் பிழைப் பக்கம் புதுமையான முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பிழைப் பக்கம் என்பது இணையத்தில் ஒருவர் அடிக்கடி எதிர்கொள்ளக்கூடியதுதான். பல காரணங்களால் ஒரு இணையதளத்தின் உள்ளடக்கம் தோன்றாமல் வெறுமையான பக்கம் வந்து நிற்கும். அதற்கான விளக்கமாக, மன்னிக்கவும் நீங்கள் எதிர்பார்க்கும் இணையப் பக்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் குறிப்பிடப்பட்டு அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கும். 404 நாட் ஃபவுண்ட் பிழைச் செய்தி என இது குறிப்பிடப்படுகிறது. இதற்கான தொழில்நுட்ப விளக்கம் கொஞ்சம் சிக்கலானது என்றாலும் இதன் பொருள் நீங்கள் தேடி வந்த இணைய பக்கம் சர்வரில் இல்லை என்பதுதான்.

ஆனால் இணையதளங்கள் விரும்பினால் தங்கள் சர்வர்களில் மாற்றம் செய்து வழக்கமான பிழைச் செய்தி அறிவிப்புக்குப் பதில் பிரத்யேகமான பிழைச் செய்தியை இடம்பெறவைக்கலாம். பெரும்பாலான நிறுவனங்கள் இதைச் செய்வதில்லை என்றாலும் சில தளங்கள் இவற்றில் கொஞ்சம் புதுமையைப் புகுத்தி பயனாளிகளுக்கு ஆசுவாசம் அளிக்க முற்படுவதுண்டு. அந்த வகையில் சற்றே கலைநயமான பிழைச் செய்திப் பக்கங்கள் எல்லாம்கூட உருவாக்கப்பட்டுள்ளன.

புகழ் பெற்ற வணிக நாளிதழான பைனான்சியல் டைம்ஸ் ( எப்.டி.காம்) இப்போது விழித்துக்கொண்டு தனது தளத்தின் பிழைச் செய்திப் பக்கத்தை மாற்றியமைத்துள்ளது.

இந்தப் பக்கத்தில், வழக்கம் போல, பக்கத்தைக் காணவில்லை (பேஜ் நாட் ஃப்வுண்ட்) எனும் வாசகம் இடம்பெற்றிருக்கிறது. அதன் கீழே நீங்கள் தேடிய பக்கம் காணவில்லை, அதற்குப் பதிலாக நீங்கள் இந்தப் பக்கங்களைப் பார்க்கலாம் அல்லது தகவல்களைத் தேடலாம் அல்லது முகப்பு பக்கத்துக்குச் செல்லலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

இவற்றில் கிளிக் செய்தால் பொருளாதாரம் தொடர்பான முக்கியத் தலைப்புகள் மற்றும் ஆளுமைகள் பற்றிய தகவல் பட்டியலைப் பார்க்க முடிகிறது. தேடல் பகுதியை கிளிக் செய்தால் முக்கியப் பொருளாதாரச் செய்திகள் தோன்றுகின்றன. முகப்புப் பக்கப் பரிந்துரையை கிளிக் செய்தால் நிதித்துறை தொடர்பான வார்த்தைகளுக்கான அகராதி விளக்கங்களைப் பார்க்கலாம்.

பிழைச் செய்தியுடன் கூடுதல் தகவல்களை அளிக்கும் இந்த மாறுபட்ட அணுகுமுறையை நிச்சயம் இணையவாசிகள் விரும்புவார்கள்.

இது வெறும் புதுமையாக மட்டும் இல்லாமல், எப்.டி.காமின் இணையதள உள்ளடக்கத்திற்கு பொருத்தமான வகையில் அமைந்திருப்பதுதான் இந்த மாற்றத்துக்கு மேலும் அர்த்தத்தை அளித்துள்ளது.

இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும், இணையவாசிகள் பிழைச் செய்திப் பக்கத்தைப் பார்த்ததும் திரும்பிச் செல்லப்போகிறார்கள். அந்த சில நொடிகளில் அவர்கள் அலுத்துக்கொள்ளலாம். அதிருப்தி அடையலாம். ஆனால் அந்தச் சில நொடிகளை அவர்களுக்குப் பயனுள்ள அனுபவமாக ஆக்கும் வகையில் செயல்படுவது என்பது தங்களைத் தேடி வரும் இணையவாசிகள் மீது இணையதளங்களின் நிர்வாகம் கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுகிறது.

எப்.டி.காமின் விளக்கம்: >http://labs.ft.com/articles/four-oh-four

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in