ஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள்: டிக் டாக்கின் புதிய மைல்கல்

ஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள்: டிக் டாக்கின் புதிய மைல்கல்
Updated on
1 min read

ஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள் டிக் டாக்கைப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஐரோப்பாவில் தங்கள் நிறுவனத்துக்கென 1600 ஊழியர்கள் இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

டிக் டாக்கின் அமெரிக்கப் பிரிவு ஆரக்கிள் நிறுவனத்துக்கு விற்கப்பட்டதா இல்லையா என்பது தெளிவாகாத நிலையில் தற்போது தங்கள் செயலி ஐரோப்பாவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக டிக் டாக் தரப்பு தெரிவித்துள்ளது.

"ஒரு அசாதாரண காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், எங்கள் வியாபாரம் இந்த வருடம் மிகச் சிறப்பாகப் பெருகியுள்ளது. இத்தகைய சூழலில் ஐரோப்பிய மக்கள் எப்படி டிக் டாக்கை வரவேற்றுள்ளனர் என்பது தெரிந்து மகிழ்ச்சியடைந்துள்ளோம். இன்று ஐரோப்பாவில், 10 கோடிக்கும் அதிகமான பயனர்கள் டிக் டாக்கைப் பயன்படுத்தி வருகின்றனர்" என்று டிக் டாக்கின் ஐரோப்பியப் பிரிவு பொது மேலாளர் ரிச் வாட்டர்வொர்த் பகிர்ந்துள்ளார்.

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் 10 கோடி பயனர்களைச் சென்றடைந்த டிக் டாக், அங்கு பெரும் பிரச்சினையைச் சந்தித்து வருகிறது. டிக் டாக்கின் அமெரிக்கப் பிரிவுச் செயல்பாடுகள், செப்டம்பர் 20க்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கப்படவில்லையென்றால், அமெரிக்காவிலும் டிக் டாக் தடை செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

டிக் டாக்கை வாங்க மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் மைக்ரோசாஃப்ட், வால்மார்ட் நிறுவனத்துடன் இணைந்தே இந்த பேரத்தில் களமிறங்கியது. ஆனால் மைக்ரோசாஃப்டின் முயற்சிகள் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து ஆரக்கிள் நிறுவனமே டிக் டாக்கை வாங்கும் என்று திங்கட்கிழமை அன்று சொல்லப்பட்டாலும், சீன அரசின் தொலைக்காட்சி ஊடகம் இந்தச் செய்தியை மறுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in