

பொருளோ, சேவையோ, இடைத்தரகர் இல்லாமல் நேரடியாகப் பெற முடிவது சிறந்தது இல்லையா? எனில் கோப்பு பகிர்வுக்கு மட்டும் ஏன் இடைத்தரகர்களாகச் செயல்படும் இணையதளங்களை நாட வேண்டும்? இப்படிக் கேட்கச் செய்யும் பைல்பிட்சா இணையதளம் இடைத்தரகர் இல்லாமல் கோப்புகளைப் பகிர்ந்துகொள்ள உதவுகிறது.
கோப்புகளைப் பகிர இதில் பதிவு செய்துகொள்ள வேண்டிய அவசியம்கூட கிடையாது. பைல்பிட்சா தளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள, கோப்பைத் தேர்வு செய்க பகுதியை கிளிக் செய்து, நாம் அனுப்ப விரும்பும் கோப்பைத் தேர்வு செய்துகொண்டால் போதுமானது. உடனே நம்முடைய கோப்புக்கு ஒரு இணைய முகவரி உருவாக்கித் தரப்படும்.கோப்பை அனுப்புவதற்குப் பதில் இந்த முகவரியை மட்டும் அனுப்பி வைத்தால் போதும். கோப்பைப் பெற விரும்பும் நபர் , இந்த இணைய முகவரியை டைப் செய்து இயக்கினால் அவரது பிரவுசரில் கோப்பு டவுன்லோடு ஆகிவிடும்- அவ்வளவுதான்.
ஆனால் இதற்கு கோப்பை அனுப்பியவர் தனது பைல் பிட்சா பக்கத்தை மூடாமல் வைத்திருக்க வேண்டும். இந்த முறையின் சிறப்பு என்ன என்றால், கோப்பு உண்மையில் எங்கேயும் செல்லவில்லை. பைல் பிட்சா தளத்திலும் சேமிக்கப்படுவதில்லை. அனுப்புகிறவரின் பிரவுசரில் இருந்து பெறுபவர் நேரடியாகத் தரவிறக்கம் செய்து கொள்கிறார். இதற்கான இணைப்புப் பாலமாக மட்டுமே இந்தத் தளம் இருக்கிறது. சகாவிடமிருந்து சகா ( பியர் டூ பியர்) முறை என இது குறிப்பிடப்படுகிறது. டெப் ஆர்டிசி எனப்படும் நுட்பம் இதன் பின்னே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பயனாளிகளைப் பொறுத்தவரை கோப்புகளை அனுப்ப எளிதான வழி என்பது மட்டும் அல்லாமல், அனுப்படும் கோப்பு இணையத்தில் எங்கும் தங்காமல் இருப்பதால் மிகவும் பாதுகாப்பானது. ஆனால் ஒன்று, அனுப்புகிறவர் மற்றும் பெறுபவரின் இணைய இணைப்பு வேகத்துக்கு ஏற்பதான் பரிமாற்றம் இருக்கும்.
கொஞ்சம் பாதுகாப்பான கோப்புப் பகிர்வை நாடுபவர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.
இணையதள முகவரி: http://file.pizza/