Last Updated : 28 Aug, 2020 03:38 PM

 

Published : 28 Aug 2020 03:38 PM
Last Updated : 28 Aug 2020 03:38 PM

குழப்பும் ஃபேஸ்புக்கின் புதிய தோற்றம்: கடுமையாகச் சாடும் நெட்டிசன்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ்

ஃபேஸ்புக்கின் புதிய தோற்றம் குழப்பமாக இருப்பதாகக் கடுமையாகச் சாடியிருக்கும் பயனர்கள், இந்தத் தோற்றத்தை நிரந்தரமாக அமல் செய்தால் ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுவோம் என்றும் கூறியுள்ளனர்.

மேலே நீல நிற நேவிகேஷன் பார் (navigation bar) இருக்கும் ஃபேஸ்புக்கின் இப்போதைய தோற்றம் செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து மாறவுள்ளது. கணினிகளில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்குக் கடந்த சில மாதங்களாகவே புதிய தோற்றம் எப்படி இருக்கும் என்பதன் முன்னோட்டம் காட்டப்பட்டு வருகிறது. புதிய தோற்றத்துக்கு மாற்றி விட்டு மீண்டும் இப்போதுள்ள தோற்றத்துக்கு மாற்றிக்கொள்ளலாம். ஆனால் வரும் 1-ம் தேதி முதல் புதிய தோற்றம் மட்டுமே இருக்கும்.

ஆனால் இந்த புதிய தோற்றம் சுத்தமாகச் சரியில்லை என்றும், குழப்பமாக இருக்கிறது என்றும் ஃபேஸ்புக் பயனர்கள் பலர், ட்விட்டர் போன்ற மற்ற சமூக வலைதளங்களில் கடுமையாகச் சாடிப் பேசி வருகின்றனர்.

"ஃபேஸ்புக், உந்தன் புதிய தோற்றம் மோசமாக இருக்கிறது. அகோரமாக இருக்கிறது. புரிந்துகொள்ள முடியவில்லை. புகைப்படம் பதிவேற்றினால் முடங்கிவிடுகிறது. தயவு செய்து, தயவு செய்து எளிமையான, கச்சிதமான, பழைய தோற்றத்திலேயே இருக்கவும். அப்படியில்லையென்றால் மொபைலில் மட்டுமே நிரந்தரமாக நான் ஃபேஸ்புக் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதை விட வெறுப்பு இருக்க முடியாது" என்று ஒரு பயனர் பகிர்ந்துள்ளார்.

"புதிய தோற்றம் மிகக் குழப்பமாக இருக்கிறது. எப்படிப் பதிவிடுவது என்று கூடத் தெரியவில்லை. 27 இன்ச் மானிட்டரை பிரம்மாண்டமான, தரம் குறைந்த மொபைலைப் போல மாற்றிவிட்டார்கள். இனி நான் ஃபேஸ்புக்கே பயன்படுத்தப் போவதில்லை ஏனென்றால் புதிய தோற்றம் கட்டாயமாக மாறுமாம். இங்கு யார் சர்வாதிகாரம் செய்வது எனத் தெரிகிறதா?" என்கிற ரீதியில் தொடர்ந்து பலர் தங்கள் வெறுப்பைப் பகிர்ந்து வருகின்றனர்.

தற்போதுள்ள அமைப்பில், புதிய தோற்றம் பிடிக்காமல் மீண்டும் பழைய தோற்றத்துக்கு மாற்றிக் கொள்பவர்களிடம் புதிய தோற்றத்தில் என்ன குறை என ஃபேஸ்புக் கேட்டு ஆய்வு செய்து வருகிறது. அதே நேரம், செப்டம்பரிலிருந்து க்ளாஸிக் ஃபேஸ்புக் தோற்றம் பயன்பாட்டில் இருக்காது என்கிற அறிவிப்பும் பயனர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் குழுக்கள் (groups), வாட்ச் (Watch), விளையாட்டு (Gaming) ஆகிய பக்கங்களுக்கு இந்தப் புதிய தோற்றம் முக்கியத்துவம் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இப்போது இந்த புதிய தோற்றம் சந்தித்து வரும் கடுமையான எதிர்வினைகளால், ஃபேஸ்புக் சரி செய்ய வேண்டிய பிரச்சினைகள் எக்கச்சக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x