

டிக்டாக் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
டிக்டாக் உட்பட சீன நாட்டைச் சேர்ந்த பல்வேறு செயலிகள் அண்மையில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம், டிக்டாக் போலவே, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்கிற காணொலிப் பகிர்வு தளத்தை அறிமுகம் செய்தது. டிக்டாக் இல்லாத நிலையில் அது ரீல்ஸ் செயலிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
18லிருந்து 29 வயது வரை இருக்கும் இளைஞர்களில், 10ல் ஏழு பேர் ரீல்ஸ் செயலியை விரும்புவதாகக் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 68 சதவீத இந்தியர்கள், காணொலிகளை உருவாக்கிப் பகிர டிக்டாகுக்கு பதிலாக வேறொரு இந்தியச் செயலியையோ அல்லது சீனாவில் உருவாகாத செயலியையோ பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக, யூகவ் (YouGov) என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டிக்டாக்குக்கு மாற்றாக எந்த செயலி பயன்படுத்துவீர்கள் என்ற பட்டியலைத் தரும்போது, அதில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கே முதலிடம் கிடைத்தது. 62 சதவித நகரம் வாழ் இந்தியர்கள் ரீல்ஸ் செயலியைப் பயன்படுத்தியுள்ளதாகவும், தொடர்ந்து பயன்படுத்தப்போவதாகவும் பதிலளித்துள்ளனர்.
இந்த ஆய்வு பற்றிப் பேசியுள்ள யூகவ் இந்தியா அமைப்பின் பொது மேலாளர் தீபா பாட்டியா, "டிக்டாக் உள்ளிட்ட மற்ற சீன செயலிகளைத் தடை செய்ய வேண்டும் என்று அரசு எடுத்த முடிவு, உள்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அவர்கள் இந்த சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர். எனவே இந்த விதத்தில் பயனர்களுக்கு என்ன தேவை, அவர்களின் விருப்பத் தேர்வுகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியமானதாகிறது" என்றார்.
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த சீஸ் என்ற செயலிக்கும் இந்திய மக்களிடையே வரவேற்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரொபோஸோ (roposo) செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துவோம் என 54 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
மேலும் உள்நாட்டைச் சேர்ந்த மோஜ் (moj - 47% ), கானா ஹாட்ஷாட் (Gana hotshot 44%), ஜோஷ் (Josh 42% ), டகா டக் (Taka tak - 42% ), மித்ரோன் (Mitron 40%) மற்றும் சிங்காரி (Chingari - 36% ) ஆகிய செயலிகளும் கவனம் பெற்று வருவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.